Home அரசியல் ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் மு.க.ஸ்டாலின் முயற்சி பலிக்காது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்...

ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் மு.க.ஸ்டாலின் முயற்சி பலிக்காது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

23
0
SHARE

காஞ்சிபுரம், செப். 17&

ஆட்சியை கவிழ்க்க நினைக்கும், மு.. ஸ்டாலின் முயற்சி பலிக்காது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடியில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு அதிமுக (முதல்வர் அணி) மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு  சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது:&

காஞ்சிபுரம் மாநகருக்கு இரு சிறப்புகள் உண்டு. ஒன்று பட்டு. மற்றொன்று அண்ணா. நெசவாளர்களுக்காக பாடுபட்டவர் அண்ணா. அவர் வழியில் நெசவாளர்களை வாழ்வாதாரத்தை பாதுகாக்க எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இலவச வேட்டி, சேலை திட்டங்களை கொண்டு வந்தனர்.

1962ல் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுகவை 27 ஆண்டுகள் கட்டிக் காத்தவர் ஜெயலலிதா. இந்த இயக்கத்தை அழிக்க கருணாநிதியும், அவரது ஆதரவாளர்களும் செய்த சூழ்ச்சியை முறியடித்தார்.

திமுக ஆட்சியில் நடைபெற்ற நில அபகரிப்புகளுக்கு  முடிவு கட்டினார். காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டினார்.

18 மாதங்களில் புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னையின் குடிநீர் பிரச்சினையை தீர்த்தவர். கடந்த 2009ல் இலங்கையில் போர் நடந்தபோது திமுக மத்திய அமைச்சரவையில் இருந்தது.

மத்திய அரசு நினைத்திருந்தால் போரை நிறுத்தி இருக்கலாம். ஆனால் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் இலங்கை தமிழர்களுக்கு தாங்கள்தான் பாடுபடுவதுபோல் கருணாநிதி அவராகவே சொல்லிக் கொள்வார்.

கடந்த 2011, 2016 என்ற இருமுறை அதிமுகவை தொடர்ந்து ஆட்சியில் அமரவைத்தது ஜெயலலிதாவின் சாதனை. அவர் மறைவுக்கு பிறகு இந்த கட்சி ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கக் கூடாது என்பதற்காக நாம் இரு அணிகளாக பிரிந்தோம்.

இப்போது ஒன்று சேர்ந்து வலுவான அதிமுகவை உருவாக்கியுள்ளோம். அதிமுகவை யாரும் கபளீகரம் செய்ய முடியாது. இன்னும் ஒரு வாரத்தில் இரட்டை இலை நமக்கு கிடைக்கும். மு..ஸ்டாலின் இந்த ஆட்சியை கவிழ்க்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அவரது முயற்சி பலிக்காது. நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு கட்சியையும், ஆட்சியையும் வலுப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் எம்.பி மரகதம்குமரவேல், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி,  முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம், முன்னாள் நகர மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு , முன்னாள் எம்எல்ஏ காஞ்சி பன்னீர் செல்வம், முன்னாள் ஓன்றியக்குழு தலைவர்கள் தென்னேரி வரதராஜூலு,  தும்பவனம் ஜீவானந்தம்,  மாவட்ட பிரதிநிதி  ஆர்.வி.ரஞ்சித் குமார், மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமுர்த்தி, முன்னாள் ஓன்றிய கவுன்சிலர்கள் எஸ்.எஸ்.ஆர். சத்யா, செ.ரமேஷ் உள்பட ஏராளனமான மாவட்ட, ஓன்றிய, நகர, பேருர் நிர்வாகிகளும்  தொண்டர்களும்  பெரும் திரளாக பங்கேற்றனர்.