Home சுடச்சுட போதையில் ஏற்பட்ட தகராறில் மெட்ரோ ரயில் அதிகாரி மகன் கொன்று புதைப்பு கடத்தல்...

போதையில் ஏற்பட்ட தகராறில் மெட்ரோ ரயில் அதிகாரி மகன் கொன்று புதைப்பு கடத்தல் நாடகமாடியது அம்பலம்

50
0
SHARE

சென்னை, செப். 14&

சென்னை சாத்தாங்காட்டில் போதையில் ஏற்பட்ட தகராறில் மெட்ரோ ரயில் அதிகாரி மகனை அடித்துக்கொன்று, அவரை புதைத்துவிட்டு கடத்திவிட்டதாக நாடகம் ஆடிய கஞ்சா வியாபாரி உட்பட 2 பேரை கைது செய்தனர். இந்த, வழக்கில் மேலும், சிலரை  தேடி வருகின்றனர்.

சென்னை, திருவொற்றியூர் சாத்தாங்காடு ஜோதிநகர் 8வது தெருவில் வசித்துவருபவர் அஜய்குமார். இவர் திருவொற்றியூர் மெட்ரோ ரயில் பணியில், மேற்பார்வையாளராக உள்ளார். இவரது மகன் அவினாஸ்பூசன் (28). .டி.. படித்துவிட்டு வேலை தேடிவந்தார்.

கடந்த 7ம் தேதி வேலை தேடுவது தொடர்பாக, வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. கடந்த திங்கட்கிழமை அஜய்குமாரின், செல்போனில் தொடர்புகொண்ட மர்மநபர் ஒருவர், உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம். அவனை விடவேண்டும் என்றால் ரூ.50 லட்சம் தரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

மாத சம்பளம் ரூ. 25 ஆயிரம் வாங்கும் என்னால், எப்படி ரூ.50 லட்சம் தரமுடியும் என போலீசாரிடம் கதறியுள்ளார். மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் கலைச்செல்வம், எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் தினகரன் ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போனில் பேசிய நபர், அவினாஸ் பூசன் நண்பர் என தெரியவந்தது. சாத்தாங்காடு பர்மா நகர், 2வது மெயின் ரோட்டை சேர்ந்த நாராயணன் மகன், வெங்கடேசன் (32) என்பவரை முதலில் பிடித்தனர். அதே பகுதியில் வசிக்கும் பீகாரைச் சேர்ந்த மித்தில் பிரசாத் மகன் ரமேஷ் (23) என்பவரும் சிக்கினர்.

வெங்கடேசன், அவினாஸ் பூசனும் 8ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள். அவர்களிடம், போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள், அவினாஸ் பூசனை அடித்துக்கொன்று, புதைத்து விட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியானது.

அவினாஸ் பூசனை கொலை செய்தது ஏன் என போலீசில் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், அவினாஸ் பூசனும், நாங்களும் எப்போதும் ஒன்றாகவே இருப்போம். சாத்தாங்காடு, சடையங்குப்பம் பகுதியில் ஒரு பாழடைந்த கட்டிடம் உள்ளது. அங்குதான் அனைவரும் ஒன்றுசேர்ந்து மது அருந்துவோம். அதுபோன்று, கடந்த 7ம் தேதி அன்று அவினாஸ் பூசன் உட்பட நாங்கள் 5 பேர் ஒன்று சேர்ந்து மது அருந்தினோம். அப்போது போதையில் எங்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.

அதில் ஆத்திரமடைந்து நாங்கள், அவினாசை இரும்பு ராடால் அடித்தோம். அதில் அவர் இறந்து விட்டார். இதனால், நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தோம். அவரது உடலை யாருக்கும் தெரியாமல், புதைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.

இதை தொடர்ந்து, அவினாஸ் உடலை மீட்டு அந்த பகுதியில் மேம்பாலத்தின் கீழ் சின்ன கால்வாய் ஓரத்தில் புதைத்தோம். பின்னர் ஒன்றும் தெரியாதது போல், அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டோம். அவரது பெற்றோர், அவினாஸ் குறித்து கேட்டதற்குகூட அவனை பார்த்து ரொம்ப நாளாக ஆகிவிட்டது என கூறினோம். அவினாஸ் பூசனை நாங்களும் தேடுவது போல், சேர்ந்து நாடகம் ஆடினோம். எங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவினாசை யாரோ பணத்திற்காக கடத்தியுள்ளது போல் போன் செய்து அவரின் தந்தையை நம்ப வைத்தோம்

அதற்குள் போலீசார் எங்களை பிடித்து விட்டனர் என  அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக  உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  அவினாஸ் உடல் இன்று தோண்டி எடுக்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த அண்ணன், தினேஷ்குமார், தம்பிகள் சூர்யா, திலீப், சந்திப் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.  இதில், கைதான வெங்கடேசன், கஞ்சா வியாபாரி என்று தெரிகிறது. மது மற்றும் கஞ்சா போதையில் தான் இந்த கொலை நடந்ததாகவும் கூறப்படுகிறது.