Home சுடச்சுட கிராமப்புற மக்களுக்கு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளிக்கவேண்டும் பணி நியமன ஆணை வழங்கி முதல்வர்...

கிராமப்புற மக்களுக்கு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளிக்கவேண்டும் பணி நியமன ஆணை வழங்கி முதல்வர் பேச்சு

9
0
SHARE

சென்னை, செப். 14&

மருத்துவர்கள் கிராமப்புற மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவேண்டும் என்று முதல்வர் கூறினார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தெரிவு  செய்யப்பட்டுள்ள 1013 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 10 பேருக்கு உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பி, அரசு மருத்துவ நிலையங்களுக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மறைந்த முதல்வரால் ஜனவரி 2012ல் துவக்கப்பட்டது. இவ்வாரியம், இதுவரை 9,777 மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், 9,190 செவிலியர்கள் உட்பட 22,042 பணியாளர்களை தேர்வு செய்துள்ளது. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தற்போது 1013 உதவி மருத்துவர்களை புதியதாக தேர்வு செய்துள்ளது

இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:

அரசு, இன்றைக்கு சுகாதார துறையிலே சிறந்த சேவையை செய்து கொண்டிருக்கின்றது. இந்தியாவிலேயே, மருத்துவத்துறையில் தமிழகம்தான் முதன்மை வகிக்கின்ற அளவிற்கு சிறப்பான மருத்துவர்களால் சேவையாற்றப்பட்டு வருகின்றது. புதிதாக ஆணை பெற்றிருக்கின்ற மருத்துவர்கள் கிராமப்புறத்திலே சேவை செய்து, கிராமப்புறத்தில் வாழ்கின்ற ஏழை, எளியோருக்கு சிறப்பான முறையிலே சிகிச்சை அளித்து மக்கள் போற்றுகின்ற அளவிற்கு உங்கள் பணி அமைய வேண்டும் இவ்வாறு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர்  மோகன் பியாரே, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் பி.அமுதா, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் கே. குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் பி. பானு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் இன்பசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here