Home மற்றவை காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்புபோராட்டம்நடத்திய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 500 பேர்...

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்புபோராட்டம்நடத்திய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 500 பேர் கைது

12
0
SHARE

காஞ்சிபுரம், செப்.14

அரசு ஊழியர்  ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ  ஜியோ சார்பில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில்  நேற்று காலை காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

காஞ்சிபுரம் கலெக்டர்  அலுவலக வளாகத்தில் தொடங்கிய காத்திருப்பு போராட்டத்துக்கு  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஜாக்டோ & ஜியோ நிர்வாகிகள் உசேன், சேகர், சரவணபவன்.லெனின், தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தியாகராஜன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பாலச்சந்தர், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் பி.எஸ். அப்பர், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஜெயமுருகன், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் உதயசூரியன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை பெற்று உடனடியாக அமுல்படுத்திட வேண்டும், அமுல்படுத்துவதற்கு முன்பாக 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். ஏப்.1, 2003க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே தொடர்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பெற்று அனைத்துப் பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே தொடர்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத அரசுப் பணியாளர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம் வழங்கப்பட வேண்டும். மக்கள் தொகை அடிப்படையிலும், வருமானத்தின் அடிப்படையிலும் ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும். அரசுத் துறைகளில் அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். பொது விநியோகத்திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட்டு அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி நியமனம், பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் களையப்பட வேண்டும். மதுபானக் கடைகள் மூடப்படுவதால் வேலையிழக்கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பிற அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் நிரந்தர பணியமர்த்தம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலைமுதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர். டிஎஸ்பி முகிலன் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மதியம் போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் உணவு தயாரிக்கும் பணியைத் தொடங்கவே போலீஸார் அவர்களை கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட சுமார் 500 பேர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here