Home தலையங்கம் கைகோர்த்தால் நல்லதுதானே…

கைகோர்த்தால் நல்லதுதானே…

8
0
SHARE

!மக்களுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காகவுமே இந்திய அரசியலமைப்பு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மனிதனை மனிதன் அடித்துக்கொண்டும், ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்ளும் போக்கு, கொலை செய்தல், திருடுதல், பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொள்ளுதல் உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்கவே காவல்துறையும், சட்டத்துறையும் செயல்படுகிறது. இரு துறைகளும் நாட்டின் குற்றத்தடுப்புக்கு இரண்டு கண்களை போன்றது. இரு கண்களும் ஒரே பொருளை தான் பார்க்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.

சட்டத்துறையில் உள்ளவர்களுக்கு காவல்துறைமேல் ஒரு வெறுப்பும், காவல்துறையினருக்கு சட்டத்துறையின் மீது வெறுப்பும் என்று மாறி மாறி வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் இது வன்முறையாகவே மாறிவிடுகிறது. அமைதியை நிலைநாட்ட வேண்டியவர்கள் இருதுறையினரும். ஆனால் இவர்களே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது மக்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரை வழக்கறிஞர்கள் தாக்கிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வேகமாக மக்கள் மத்தியில் பரவியது. இந்த சம்பவம் ஒரு சிறு நிகழ்வுதான். ஆனால் ஆண்டாண்டு காலமாக இரு துறையினருக்கும் இடையே கருத்து வேற்றுமை நிலவுவதும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சில நேரங்களில் இது மக்களுக்கு தெரியும் அளவிற்கு பூதாகரமாக வெடித்துச் சிதறுகிறது. இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு இருதுறையும் உள்ளாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுபோன்ற காரணங்களால் மக்கள்  அதிருப்தி அடைந்துள்ளனர். மக்களுக்கு ஏற்படும் இந்த அதிருப்தி, சட்டத்துறை மீது உள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும். பிரச்சனை என்று வந்தால் காவல்துறையையும், சட்டத்துறையையுமே நாட வேண்டியது அவசியமானது. ஆனால் அப்படிப்பட்ட துறைகளிலேயே ஒற்றுமை இல்லை என்றால் எப்படி அவர்கள் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுபோல் மக்கள் வெறுக்கும் போக்கை இரு துறையினரும் கடைப்பிடிப்பதை நிறுத்திவிட்டு இணைந்த கைகளாக சேர்ந்து செயல்பட்டால் நாட்டில் நடக்கும் சட்டம் ஒழுங்கு நிலைமைய சீராக வைத்துக்கொள்ள முடியும். இரு துறையினரும் எதிரும் புதிருமாக செயல்பட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. இவை நடக்காமல் பார்த்துக்கொள்வது இரு துறைகளின் கடமை. இதனை உணர்ந்து அவர்கள் செயல்பட்டால் எல்லாம் நலமே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here