Home மற்றவை திருவள்ளூர் மக்களுக்கு இனிப்பான செய்தி கூவம் ஆறு ரயில் பாதைக்கு மேல் புதிய பைபாஸ்...

திருவள்ளூர் மக்களுக்கு இனிப்பான செய்தி கூவம் ஆறு ரயில் பாதைக்கு மேல் புதிய பைபாஸ் மேம்பாலம் 6.546 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்படுகிறது

9
0
SHARE

திருவள்ளூர், செப். 12&

1996ம் ஆண்டு உதயமானது திருவள்ளூர் மாவட்டம். திருவள்ளூரை மையமாக வைத்து இரு புறவழிச் சாலைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்போது எழுந்தது. இதன் மூலம் சென்னை, திருத்தணி, திருப்பதி மற்றும் பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் திருவள்ளூர் நகருக்குள் வராமல் புறவழிச் சாலைகளில் செல்ல முடியும்.

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு சென்னை பாடியில் இருந்து திருத்தணி, திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 205 ஏற்படுத்தப்பட்டது. திருப்பதி & திருத்தணி வழியாக திருவள்ளூர் வரை வந்த அந்த தேசிய நெடுஞ்சாலை திருபாச்சூர் அருகே ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையை தொட்டுக் கொண்டு நின்று விட்டது. அங்கிருந்து பாடி வரை போட வேண்டிய சாலை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் செல்லும் கனரக வாகனங்களுக்கு பைபாஸ் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு மிக விரைவில் கூவம் ஆறு மற்றும் திருவள்ளூர் ஏகாட்டூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் இருப்புப்பாதைக்கு மேலே பைபாஸ் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது :

ஸ்ரீபெரும்புதூர் சாலையில் உள்ள கேட்டர்பில்லர் கம்பெனி அருகில் இருந்து துவங்கி மேல்நல்லாத்தூர் பெரியகுப்பம் வழியே திருபாசூர் வரை 6.546 கிலோ மீட்டர் நிளத்திற்கு இந்த பைபாஸ் சாலை அமைய உள்ளது. இதில் கூவம் ஆற்றின் மேலே 1.940 கிலோ மீட்டர் நிலத்திற்கும், திருவள்ளூர்  ஏகாட்டூர் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் ரெயில் இருப்புப்பாதைக்கு மேலே  2.158 கிலோ மீட்டர் நிளம் மற்றும் 30 மீட்டர் அகலத்திலும் மேம்பால பைபாஸ் சாலை அமைகிறது.மீதியுள்ள 2.448 கிலோ மீட்டர் நிளத்திற்கு பாலத்தின் இருபுறமும் சாலைகள் போடப்படும்.

இதற்கு 37 ஏக்கர் பட்டா நிலம் கையகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த பைபாஸ் சாலை திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.225 கோடி. இதில் நில உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு தொகையாக 150 கோடியும்,மேம்பால பைபாஸ் சாலை ரூ.75 கோடியிலும் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலத்தின் இருபக்கமும் நடைபாதை மற்றும் நடுவில் தடுப்பு சுவரும் உருவாக்கப்படும்.இதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கப்படும் என்று பொறியாளர் கூறினார்.

திருவள்ளூர் மக்களுக்கு இந்த செய்தி மிக இனிப்பான செய்தியாகும். மேலும் பாதியில் நிற்கும் என்.எச் 205 சாலையும் கட்டும் பணி துவங்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. இந்த பைபாஸ் சாலைகள் திட்டம் முழுமையாக நிறைவேறினால் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி விழி பிதுங்கும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் நிம்மதி ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here