Home தமிழகம் திருச்சியில், போலீஸ் தடையை மீறி தி.மு.க. பொதுக்கூட்டம்: பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டனர் மு.க.ஸ்டாலின் உள்பட...

திருச்சியில், போலீஸ் தடையை மீறி தி.மு.க. பொதுக்கூட்டம்: பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டனர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

33
0
SHARE

திருச்சி,செப்.9&

திருச்சியில் போலீஸ் தடையை மீறி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். மு.க. ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்கள்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதாவை நீட் தேர்வு காவு கொண்டது. மருத்துவ கனவு சிதைந்து போனதால் கடந்த 1ஆம்தேதி தூக்கு போட்டு அனிதா தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அனைத்து இடங்களிலும் போராட்டமும் வெடித்துள்ளது.

குழுமூர் வந்த மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அனைத்து கட்சி ஆலோசனை

கூட்டம் நடைபெறும் என்று கூறினார்.

அதன்படி நடந்த கூட்டத்தில் மாணவி அனிதாவின் உயிரிழப்புக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தியும் செப்டம்பர் 8ஆம்தேதி அனைத்து கட்சி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் நேற்று மாலை 5 மணி அளவில் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இதனையடுத்து திருச்சியில் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர்  அனுமதி அளிக்க மறுத்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பினை அடுத்து அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

  இதனிடையே  கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், ஆகியோருடன் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி

பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்

என்று கூறப்பட்ட இடத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

பின்னர் நேற்று மாலை திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன்,கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் பேசினர்.  பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு விழா மேடைக்கு  வந்த கி.வீரமணி பேசினார். தடையை மீறி நடந்த இந்த பொதுக்கூட்டத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர்.