Home சம்பவம் பாறைக்கு இடையில் சிக்கிய பள்ளி மாணவனை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்

பாறைக்கு இடையில் சிக்கிய பள்ளி மாணவனை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்

19
0
SHARE

திருத்தணி, செப். 8& 

நண்பர்களுடன் விளையாட்டாக மலைக்கு சென்ற போது பாறைக்கு இடையில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிய பள்ளி மாணவனை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். பின்னர், அவனை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி டாக்டர் இராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிஸ்டூ வகுப்பு படித்து வருபவர் ராகேஷ் (17). இவர் கிழாந்தூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேசன் என்பவரின் மகன் ஆவார்.

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில்  நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க  பெரும்பாலான ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளிக்கு வந்த ராகேஷ் அவரது வகுப்பு நண்பர்கள் 4 பேருடன்  காலை 10 மணிக்கு திருத்தணி பச்சரிசி மலைக்கு விளையாட்டாக சென்றனர்.

கடந்த சில நாட்களாக  திருத்தணி பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மலைப்பாறை பழுப்புபாசி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மாணவர்கள்  பாறைகள் மீது ஏறி மலைக்கு செல்லும் போது, பாசி நிறைந்த பாறை வழுக்கியதில் மாணவன் ராகேஷ் தடுமாறி உருண்டு விழுந்த போது அவரது கால்கள் பாறைக்கு இடையில் சிக்கிக்கொண்டது. பாறைக்கு இடையில் சிக்கிக்கொண்ட ராகேஷை மீட்க அவரது நண்பர்கள் முயற்சி செய்து முடியாத நிலையில்  பீதி அடைந்து அங்கிருந்து அவர்கள் ஓடிவிட்டனர்.

மலையில் தனியாக சிக்கி தவித்த ராகேஷ் அவர் வைத்திருந்த கைப்பேசி மூலம்  தான் பாறைக்கு இடையில் சிக்கிக்கொண்டது பற்றி அவனது பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக திருத்தணி போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பாறைக்கு இடையில் சிக்கிக்கொண்டு 2 மணி நேரமாக தவித்த அந்த மாணவரை மீட்டு திருத்தணி அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மலைக்கு சென்று பாறைக்கு நடுவில் சிக்கி தவித்த மாணவரைப் போராடி மீட்ட தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.