Home தலையங்கம் கவுரி லங்கேஷ் ஆன்மா சாந்தியடையட்டும்

கவுரி லங்கேஷ் ஆன்மா சாந்தியடையட்டும்

49
0
SHARE

எழுத்தாளர் கவுரி லங்கேஷ் படுகொலை இந்தியாவையே உலுக்கி இருக்கிறது. எழுத்தாளரான கவுரி லங்கேஷ் முற்போக்கு சிந்தனையுடைய எழுத்தாளர். இந்துத்துவ எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மூட நம்பிக்கை ஒழிப்பு ஆகியவற்றில் முதல் ஆளாக களத்தில் நின்று போராடியவர். இவரது தந்தை ஒரு பெரிய பத்திரிகையில் ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருந்தார்.

தந்தையின் நிழலில் நிற்க விரும்பாத லங்கேஷ் டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தியாளராக தனது பணியை தொடங்கினார். தந்தையின் மறைவுக்குப்பின் அவர் நடத்திவந்த லங்கேஷ் பத்திரிகையை பொறுப்பேற்று நடத்தி வந்தார்.

கர்நாடக கோவில்களில் நடந்து வந்த எச்சில் இலை மீது தலித்துகள் உருளும் சடங்கு, நிர்வாண பூஜை, நரபலி போன்ற மூடப்பழக்கங்களுக்கு எதிராக தீவிரமாக போராடியவர். காவிரி விவகாரம் எழும்போதெல்லாம் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவார்கள். அப்படி தமிழர்கள் தாக்கப்படும்போதெல்லாம் கன்னட அமைப்பினரை கண்டித்தவர்.

இப்படி நாட்டின் எந்த மூலை முடுக்கில் அடக்குமுறை நடந்தாலும், அதற்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா... ஆட்சி பொறுப்பேற்றதும் இன்னும் வேகத்தோடு இந்துத்துவா கொள்கையை எதிர்த்தார். இதனால் இவருக்கு ஏராளமான கொலை மிரட்டல்களும் வந்தன. இதனைக்கண்டெல்லாம் அவர் கொஞ்சம் கூட பயப்படவில்லை.

இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக கிளம்பிய ரோஹித்தை லங்கே பாராட்டினார். மோடியின் பக்தர்களிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற இளைஞர்களால் தான் முடியும் என்று நம்பிக்கை கொண்டவர். 2,000&ம் ஆண்டில் கர்நாடகாவில் பசுமை வேட்டை என்ற பெயரில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டது. அரசின் கெடுபிடிகளை தாண்டி காட்டுக்குள் சென்று நக்சலைட்டுகளையும், அப்பாவி பொதுமக்களையும் பேட்டி எடுத்து வெளியிட்டார்.

மேலும் கர்நாடக அரசிடம் பேசி நக்சலைட் மறுவாழ்வுதிட்டத்தை உருவாக்கினார். இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் நின்று மக்கள் அமைதியுடன் வாழ்ந்து வருகின்றனர்இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட கவுரி லங்கேஷை மோட்டார்சைக்கிளில் வந்த  3  மர்ம ஆசாமிகள் சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டனர். பேனா முனையால் பலரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட லங்கேஷ் அதே இடத்தில் தனது உயிரை இழந்தார்.

பா..., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினரை எதிர்த்து எழுதியதால்தான் லங்கேஷ் கொல்லப்பட்டதாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். லங்கேஷ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கர்நாடக அரசிடம் அறிக்கை கேட்டு உள்ளது. எது எப்படியோ பேனாவின்மூலம் பல்வேறு உள்ளங்களை கவர்ந்தும் நாட்டில் நடந்த அநீதியை களைந்தும் வந்த சமாதானப்புறா பறந்துவிட்டது.

லங்கேஷின் ஆன்மா சாந்தி அடையவும், இனிமேலாவது மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து இதுபோன்ற கொலைகள் நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.