Home சுடச்சுட ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது போல வந்து மெரினாவில் மாணவ, மாணவிகள் போராட்டம் ...

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது போல வந்து மெரினாவில் மாணவ, மாணவிகள் போராட்டம் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி, மத்திய& மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம்

29
0
SHARE

சென்னை, செப். 7&

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக மாபெரும் எழுச்சி போராட்டத்தை நடத்தினர். அந்த போராட்டம் வெற்றியும் அடைந்தது. மேலும் மெரினாவில் மாணவர்களுக்கும், போலீசாருக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டு பெரிய கலவரத்தில் முடிந்தது. அதில் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. சென்னை முழுவதும் போராட்டம் வெடித்தது.

இதை தொடர்ந்து மெரினாவில் போராட்டம் நடத்த போலீசார் நிரந்தர தடை விதித்துள்ளனர். அதை தொடர்ந்து மெரினாவில் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 24 மணி நேரமும் போலீசார் மெரினா கடற்கரையை கண்காணித்து வந்தனர்.

அனிதா தற்கொலை

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா, பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போனது.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகிப்போன அனிதா, தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மாணவர்கள் போராட்டம்

அரசியல் கட்சிகளை தொடர்ந்து, கடந்த 4&ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம், மறியல், மனித சங்கிலி, பேரணி ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று முதல் மூன்றாவது  நாளாக மாணவர்களின் போராட்டம் நீடித்தது. சென்னை  ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் நேற்று  காலை வகுப்புகளை புறக்கணித்தனர்.

கண்டன கோஷம்

மேலும், போராட்டம் நடத்துவதற்காக கல்லூரியில் இருந்து மாணவர்கள் சாலைக்கு வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாணவர்கள் வெளியே வரமுடியாதபடி கல்லூரி கேட்டை இழுத்து பூட்டு போட்டனர்.

இதனால் மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்குள் அமர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன  கோஷங்கள்  எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரவிலும் போராட்டம்

அரியலூர் மாவட்டத்திலும், அரசு கல்லூரி மாணவர்கள், கடந்த மூன்று நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

30 மாணவர்கள் மட்டும் இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.

பாதுகாப்பு வளையத்தில்

சென்னை மெரினாவில், அனிதா தற்கொலை விவகாரம் தொடர்பாக போராட்டம் ஆரம்பம் என சமூக வலைத்தளங்கள், வாட்சப், முகநூல் ஆகியவற்றில் வதந்தி பரப்பி, சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க முயற்சித்ததாக சென்னை பெரு நகர காவல்துறை, சிலர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளது.

இதை தொடர்ந்து,  மெரினா, பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டது. மெரினா சர்வீஸ் சாலையில், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மெரினாவில், கூட்டம் கூட்டமாக வருபவர்களை தடுத்து நிறுத்தி, போலீசார் விசாரித்தனர். மெரினாவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்திருந்தனர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் போராட்டம்

இதை தொடர்ந்து, சென்னை மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி, இந்திய மாணவர் சங்கத்தினர் சிலர், நேற்று மதியம் மெரினாவை சுற்றி பார்ப்பது போல் வந்தனர். அதில், சில சட்ட கல்லூரி மாணவர்களும் இருந்தனர். அவர்கள், ஒவ்வொருவராக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் வந்தனர்.

ஜெயலலிதா நினைவி டத்தை சுற்றி வந்த அவர்கள், திடீரென அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் எதிர்பார்க்கவில்லை. இதுபற்றி தகவல் கிடைத்ததும், உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்திய மாணவர்களிடம், சமரச பேச்சில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரி , தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

40 நிமிடம் மவுன போராட்டம்

ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், நீட் தேர்வுக்கு எதிராக 40 நிமிடம் மவுன போராட்டம் நடத்த வேண்டும், அதற்கு அனுமதி தாருங்கள், அதன் பிறகு, நாங்கள், இங்கிருந்து கலைந்து செல்கிறோம் என கூறினர்.

ஆனால், போலீசார், இங்கு, போராட்டம் நடத்த அனுமதியில்லை. உடனடியாக இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர். ஆனால், மாணவர்கள், அங்கிருந்து கலைந்து செல்லாமல், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போலீசார் தொடர்ந்து, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும் என கூறியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குண்டு கட்டாக

வெளியேற்றம்

ஜெயலலிதா நினைவிடத்தில், சுமார், 30 நிமிடம், மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசார் எச்சரித்த பிறகும், மாணவர்கள் போராட்டம் தொடர்ந்ததால், அவர்களை அங்கிருந்து, வெளியேற்ற போலீசார் முடிவு செய்தனர். மாணவர்களை, அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். மாணவர்கள், அங்கிருந்து செல்ல முடியாது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, அங்கு படுத்துக்கொண்டு போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகளை, போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று, ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து வெளியேற்றினர்.

அப்போது, போலீசாருக்கும், மாணவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அங்கு பதட்டம் ஏற்பட்டது.  ஒவ்வொரு மாணவர்களாக போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று, போலீஸ் ஜீப்பில் ஏற்றி சென்றனர். மெரினாவில் அத்து மீறி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்.

மெரினாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் கூறும்போது; அனிதா தற்கொலைக்கு மத்திய அரசு பதில் கூற வேண்டும். அனிதா போன்ற ஏழை மாணவிகளால்தான், டாக்டராகி சேவை செய்ய முடியும், இப்போது, மருத்துவ படிப்புக்கு வந்த நீட் தேர்வு,  நாளை, என்ஜினியரீங் படிப்புக்கு வரும். எனவே நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது போல் மெரினாவுக்குள் நுழைந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து அனிதா தற்கொலைக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரியும் போராடிய மாணவ, மாணவிகளை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர்.