Home சிறப்புச் செய்திகள் ஏழை, எளிய மக்களின் சமூக நீதியை மறுக்கும் நீட்

ஏழை, எளிய மக்களின் சமூக நீதியை மறுக்கும் நீட்

20
0
SHARE

திராவிட கட்சிகளின் இயக்கங்களின் தொடர் போராட்டங்களினால்தான் . சமூக நீதி தமிழகத்திற்கு கிடைத்தது என்றால் அது மிகையல்ல.

அப்படிப்பட்ட சமூக நீதி தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலும் மெல்ல மெல்ல ஆளும் வர்க்கத்தினரால் பறிபோய்க்கொண்டிருக்கிறது. இந்த கொடுமையை தடுக்க எத்தனை அம்பேத்கர்கள் இன்னும் இந்தியாவில் பிறக்க வேண்டும் என்று தெரியவில்லை. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள் மாணவர்களின் கனவு படிப்பாக இருந்து வருகிறது.

இதில் மருத்துவப் படிப்பு என்பது சாதிக்க துடிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் பெரும் கனவாக உள்ளது. அதற்காகவே இரவு பகலாக படித்து பிளஸ்டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் மற்றும் குறிப்பிட்ட பாடப்பிரிவில் 200க்கு 200 மதிப்பெண்களை பெறுகிறார்கள். ஆனால் அப்படி மதிப்பெண் அடுத்தாலும் அவர்களுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணும் கட்டாய மாக்கப்படுவதால் அவர்களின் மருத்துவக் கனவு தகர்க்கப்படுகிறது, சிதைக்கப்படுகிறது.

இறுதியால் இலட்சியத்திற்காக போராடும் மாணவர்களையே மண்ணில் விதைக்கவும், புதைக்கவும் படும் அவலநிலை உண்டாகிறது. நீட் போன்ற நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல பணவசதியில்லாததாலும், அதற்கான சிறப்பான வசதிவாய்ப்புகள் கிராமப்புறங்களில் இல்லாததாலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் நுழைவுத்தேர்வில் பிரகாசிக்க முடியாமல் போய்விடுகிறது. இதற்காகத்தான் முன்னாள் முதல்வர்களான கலைஞரும், ஜெயலலிதாவும் நுழைவுத்தேர்வு முறையை தமிழகத்தில் ரத்து செய்தனர். அதற்காக எதிர்ப்பு குரலும் தொடர்ந்து கொடுத்து வந்தனர்.

இதன்மூலம் மாநில சுயாட்சி உரிமையை காத்து நின்றனர். ஆனால் தற்பொழுது மத்தியிலுள்ள ஆட்சியாளர்களினால் மாநில சுயாட்சி உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

கல்வி என்பது மாநில பட்டியலில் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் இருந்தால்தான் அந்தந்த மாநில மாணவர்களின் மருத்துவ, பொறியியல் கனவுகள் உரிமைகள் நிலைநிறுத்தப்படும். சாப்பிடும் சாப்பாடிலிருந்து படிக்கும் படிப்புவரை நாம் நினைத்ததை செய்யாமல் தடுக்கும் சக்தியாக ஆளுபவர்கள் இருந்தால் என்ன செய்வது.

மாணவர்களின் நலனுக்காக ஆள்பவர்கள் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அதற்கு பின் இந்த நீட் நுழைவுத்தேர்வு முறையை கொண்டு வந்திருக்கலாம்.

மத்தியில், மாநிலத்தில் ஆள்பவர்கள் உறுதியாக இந்தாண்டு முதல் நீட் தேர்வு உண்டு என்பதை முன்கூட்டியே அறிவித்திருந்தால் நீட் நுழைவுத்தேர்வு முறைக்கு மாணவர்கள் முன் கூட்டியே தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள் அல்லது மாணவர்களை நீட் தேர்வு பாடத் திட்டத்திற்கு தயார்படுத்திய பின் இந்த தேர்வு முறையை கொண்டுவந்திருக்கலாம்.

மாநில மாணவர்கள் படித்த பிளஸ்டூ பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்வித்தாள்களை தயார்படுத்திக்கொடுத்திருக்கலாம். இதை விடுத்து சி.பி.எஸ்.இ மாணவர்களின் பாடத்திட்டத்தின் கீழ் கேள்வித்தாள்கள் அமைந்தால் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தான் வெற்றி பெற முடியும்.

ஒரு போர்க்களத்தில் கூட சமமான ஆயுதம் இருந்தால் தானே எதிரியைக் கூட எளிதில் வெற்றி பெற முடியும். அதை விடுத்து நிராயுதபாணியாக இருப்பவர்கள் போரிலும் சரி, போட்டியிலும் சரி எப்படி வெற்றி பெற முடியும்.

இங்கு சமூகநீதியும், இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் உயர்தட்டு, பணக்கார மாணவ, மாணவியருக்கு மட்டும்தான் மருத்துவ, பொறியியல் படிப்புகள் கிடைக்கும். ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மாணவ, மாணாவியருக்கு அது எட்டாக் கனியாகிவிடும். புதிய இந்தியாவை உருவாக்க நினைப்பவர்கள் மற்ற வளர்ந்த நாடுகளில் இல்லாத வறுமையை இந்தியாவில் முதலில் ஒழிக்கட்டும். ஏழ்மையும், இல்லாமையும், கல்லாமையும் இந்தியாவில் இல்லாமல் இருந்தால் தான் புதிய இந்தியாவாக வளர்ச்சி அடைந்த இந்தியாவாக உருவாக முடியும்.

அதற்கு இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் சம உரிமையை பெற வேண்டும், அதற்கான வசதிவாய்ப்பை, இட ஒதுக்கீட்டை, சமூகநீதியை அனைவருக்கும் கிடைக்கும் படி செய்வதற்கு ஆளும் வர்க்கத்தினர் முயற்சி செய்ய வேண்டும்.

ஆட்சி, அதிகாரம், நீதிமன்றங்கள் போன்றவை மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டவைதான் மக்கள் இல்லையெனில் அது ஏதுமில்லை என்பதை உணர்ந்தவர்களாக அனைத்து தரப்பட்ட மக்களையும் அரவணைத்து செல்லும். மக்களாட்சி தத்துவத்தை அடிப்படையாக கொண்ட ஆட்சியாக அமைந்தால் மக்களும் ஆட்சியாளார்களும் சிறப்புற்று விளங்கலாம்.