Home சிறப்புச் செய்திகள் வெற்றி ரகசியம்!

வெற்றி ரகசியம்!

23
0
SHARE

ஏராளமான முகப்புகள் கொண்ட கூட்டுக் கண்கள் இருந்தாலும் அவைகளினால் மிக அருகிலுள்ள பொருள்களையே பார்க்க முடியும். ஆனால், இந்தக் கூட்டுக் கண்கள் இயக்க அசைவுகளைத் தெளிவாகக் காட்டும்.

ஒரு பொருளின் இயக்க அசைவுகள் இவைகளின் கண்முகப்புகள் ஒவ்வொன்றிலும் பதிவதால்தான் எதிரிகளிடமிருந்து தப்பியோடவும் முடிகிறது. இரைகளைத் தேடிப் பிடிக்கவும் முடிகிறது. நம்மைப் போல் வண்ணங்களை அவைகளினால் பிரித்துணர முடியாது.

எனினும் தேனீக்கள் போன்ற பூச்சிகளினால் புற ஊதாக்கதிர்க்ளைப் பகுத்துணர முடியும்.  பெரும்பாலான பூச்சிகள் சூரிய ஒளிக் கதிர்களையே திசையறி கருவிகளாகப் பயன்படுத்திக் கொண்டு வழியறிந்து செல்லுகின்றன. மேகம் மூடியிருந்த போதிலும் தேனீக்களால் சூரியன் இருக்குமிடத்தை தெரிந்து கொள்ள முடியும்.

பெரும்பாலான பூச்சிகளுக்கு ஒலியுணர்வு கிடையாது. எனினும் பலவகை அதிர்வுகளை உணரும் திறன் இவைகளுக்கு உண்டு. இவைகளின் உணர் கொம்புகளின் அடிப்புறத்தில் அமைந்திருக்கும் உறுப்பமைவு சூழலில் ஏற்படும் அதிர்வுகளை உணர்த்துகிறது. தத்துக்கிளி, வெட்டுக்கிளி, சிள்வண்டு, சிக்காடா, பட்டுப்பூச்சிகளில் பலவகை கேளுணர்வு உறுப்பு கால்களிலோ, அடிவற்றுப் பகுதியிலோ அமைந்திருக்கும்.

பூச்சிகள் உடலில் அடிவயிற்றுப் பகுதியில் ஏராளமான நுண்துளைகள் உள்ளன. இந்த நுண்துளைகள் மூச்சுக் குழலின் திறப்புகள், இவைகள் உடலினுள் செல்லுகின்றன. பூச்சியின் உடலினுள் இவைகள் பல கிளைகளாகப் பிரிந்து மேலும் நுண்ணியதாகி ஒவ்வொரு பகுதிக்கும் செல்லுகிறது.

கண்கள், கால்கள், உணர் கொம்புகள் ஆகியவற்றின் உள்ளே கூட வலைப் பின்னல் போல் அமைந்துள்ளன. இவைகளில் பல மூச்சுக்குழாய்களின் நுனியில் மீள் சக்தியுடைய சிறுசிறு காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன. பூச்சிகளின் மூச்சு மண்டல அமைப்பு இது.

காற்று உள்ளே போகும் போது இந்தப் பைகள் விரிவடைகின்றன. காற்று வெளியேறும்போது இந்தப் பைகள் சுருங்குகின்றன. அது மட்டுமல்ல, கேளுணர்வு உள்ள பூச்சிகளில் இந்தக் காற்றுப்பைகளில் ஒரு ஜதை செவிப்பறைபோல் செயல் படுகிறது. ஒலியதிர்வுகளை உணர்வு செல்களுக்குக் கேளா ஒலி எனும் மிகு அதிர்வொலியைகூட உணரும் திறன் இதனால் சில பூச்சிகளுக்கு உள்ளது. ஒரு சிள் வண்டினால் மற்றொரு சிள் வண்டு எழுப்பும் ஒலியை மற்ற ஒலியிலிருந்து பிரித்துஉணர முடியும்.

பூச்சிகளுக்கு குரல் கிடையாது. உடல் அங்கங்களை ஒன்றோடொன்று உராய்வதின் மூலமே ஒலியைக் கிளப்புகிறது. சில பூச்சிகள் கால்களை உராய்வதின் மூலம் ஒலியைக் கிளப்புகின்றன. சில பூச்சிகள் முன் இறக்கைகளை உராய்வதின் மூலம் ஒலி எழுப்புகின்றன.

பெரும்பாலான பூச்சிகளுக்கு உணர் கொம்புகள் உண்டு. பார்வை திறன் குறைவாக உள்ள பூச்சிகளுக்கு உணர் கொம்பு பெரிதாக அமைந்திருக்கும். பார்வையுணர்வு நன்றாக உள்ள பூச்சிகளுக்கு உணர் கொம்புகள் சிறியதாக இருக்கும். தொடு உணர்வு, சுவையுணர்வு, ஒலியுணர்வு, நுகருணர்வு, தட்பவெப்பநிலை, ஈரப்பதம் முதலான அனைத்தையும் இந்த உணர்கொம்புகள் மூலமாகவே பூச்சிகள் தெரிந்து கொள்ளுகின்றன.

பூச்சிகள் மிகச் சிறியவைகளாக இருந்தாலும் அவைகளுக்கு இருதயம் உண்டு. உடலின் மேல்புறத்தில் அமைந்திருக்கும் நீண்ட குழாய் போன்ற அமைப்புதான் பூச்சிகளின் இருதயம். இந்த இருதயம் மெல்லிய சுவர்களினாலானது. பல அறைகளை உடையது. மேல் நோக்கித்திறக்கக் கூடிய வால்வுகளைக் கொண்ட சிறுசிறுத் திறப்புகளை உடையது. இந்தத்  திறப்புகள் வழியாக ரத்தம் இருதயத்தினுள் செல்லுகிறது. இருதயம் சுருங்கி ரத்தத்தை தலைப்பக்கம் அனுப்புகிறது. தலைக்கு செல்லும் ரத்தம் மூளையைக் குளிப்பாட்டிக் கொண்டு உடலுக்குள் வழிந்தோடி வருகிறது. அவ்வாறு வரும் வழியில் உடலுறுப்புகள், தசைகள், நரம்புகள் முதலான அனைத்திற்கும் செல்லுகிறது. பூச்சிகளின் ரத்தம் ஆக்சிஜனை ஏந்திச் செல்லுவதில்லை. அதனால் அவைகளின் ரத்தத்தில் ஹீமோ குளோபின் எனும் நிறமிப் பொருளும் இல்லை. ரத்தம் சிவப்பு நிறத்திலுமிருக்காது. பூச்சிகளின் ரத்தம் அவைகளுக்குத் தேவையான ஊட்டப் பொருள்களை மட்டுமே எடுத்துச் செல்லுகிறது. அவைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மூச்சுக்குழல் மூலமாக நேரடியாக உறுப்புகளுக்குச் சென்று விடுகிறது.

சிறிய உடல், சிக்கலான உணர் உறுப்புகள் அமைப்பு, எந்த உணவையும் உண்டு வாழும் தன்மை, சூழலுக்கேற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறன் முதலியன ஏறக்குறைய 30 கோடி ஆண்டுகளாக வாழ்க்கைப் போராட்டத்தை பூச்சிகள் வெற்றிகரமாக சமாளித்து வர உதவி வந்திருக்கின்றன. இதை அவைகளின் வெற்றி ரகசியம் எனலாம்.