Home சிறப்புச் செய்திகள் மிக்கிமவுஸ் கதை

மிக்கிமவுஸ் கதை

40
0
SHARE

வால்ட் டிஸ்னியின் தொடக்கால முயற்சிகள் அவருக்கு நல்ல பலயனளித்தன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. துண்டுக் கார்ட்டூன் படங்களில் முனைப்பாகச் செயல்பட்ட அந்தக் காலத்தில் புத்தகங்களுக்கான கார்ட்டூன் படைப்புகளிலும் டிஸ்னியின் கவனம் மிகுதியாயிருந்தது. அவ்வாறு வெளிவந்த நூல்களுள் 1930ல் வெளீயிடப் பெற்ற மிக்கிமவுஸ் கதை ஒரு புதிய அணுகுமுறையில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

சுண்டெலி மாயலோகம் எனப்படும். ஒரு விசேஷப் பகுதியை ஆண்டு வந்தவன் சுண்டெலி இனத்துப் பேரரசனாவான். அவன் ஒருநாள் தர்பாரில் கொலுவீற்றிருந்த சமயம், அவன் பார்வையில் ஒரு நபர் அழுத்தமாய்ப் படவே பிரதம மந்திரியை நோக்கி, ‘‘ அதோ பாரும் அவனை’’ என்றார்.

‘‘யாரது?’’ என்று பதிலுக்குக் கேட்டான் பிரதமர்.

‘‘13வது எண்ணுள்ள அந்தச் சுண்டெலி விஷமம் பண்ணுவதில் குறிக்கோளாயிருக்கிறானாம் கேள்விபட்டேன்’’

உடனே பிரதமர், ஆளையனுப்பி அந்தப் பதின்மூன்றாம் எண்ணுள்ள நபரை அழைத்துவர ஆணையிட்டார். சில நிமிஷங்களில் அந்த பதின்மூன்றாம் சுண்டெலி மன்னர் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான். அவனிடம் பிரதமர் கூறினார். ‘‘உன் நடவடிக்கை சில நாட்களாக மாறுபட்டுள்ளதாக மன்னர் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே நீ உடனடியாக இந்த நாட்டை விட்டு ஓடிப் போய்விடு’’ என்று கட்டளை பிறப்பித்தார் பிரதமர். எண் பதின்மூன்றுக்குக் கோபம் மூண்டது. அது ஓடிப் போய் மன்னரின் தாடியை பற்றிப் பலமாக இழுத்தது. மன்னர் வலி தாளது. ‘‘இவனைத் தூக்கி எறியும்’’ என்று கத்தினார்.

உடனே பிரதமர் அங்கிருந்த ஒரு பித்தானை அழுத்தவும், பதின் மூன்று எங்கோ தூக்கி வீசியெறிப்பட்டது. அது வானத்தில் மின் வேகத்தில் கீழே இறங்கப்பட்ட தருணத்தில், வழியில் ஒரு விமானம் குறுக்கிட அந்த 13 விமானத்தில் தொற்றுக் கொள்ள முயன்று தோற்றுப் போன போதிலும், அது வேகமாகப் பூமியை நோக்கி விழுந்து கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அதை ஒரு மரக்கிளை ஆதரவளிக்கப் போய், 13 அதில் தொற்றிக் கொண்டது. ஆனால் அந்தக் கிளையும் ஆட்டங்கண்டதால், அது அங்கிருந்து கீழே விழுந்தது. ஆயினும் அது ஒரு மொட்டை மாடியில் பத்திரமாக அடிபடாமல் விழுந்தது. அது ஒரு கலிபோர்னியாவை சார்ந்த ஹாலிவுட் பகுதியிலுள்ள ஸ்டியோவின் மொட்டை மாடி என்று அப்போது பதின்மூன்றுக்குத் தெரியாது.

அங்கே ஒரு புகை போக்கியைக் கண்ட அந்த 13 அதில் இறங்கிச் சென்றது. இறுதியாக அது சமையற் கட்டில் பத்திரமாக இறங்கியது, அங்குமிங்குமாகப் பரவலாக வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களில் உணவுப் பண்டங்களைக் கண்டதும் சிலவற்றைத் தின்று பசியாறியது. பசியாறியபின் ஆனந்தம் அதிகமாகவே நடனம் ஆடத் தொடங்கியது. அதன் ஒவ்வொரு செயலையும் பார்த்துக் கொண்டு கதவோரமாக நின்றிருந்த ஒருவர் அதன் கண்ணில் பட்டு விடவே ஓடத் தலைப்பட்டது. ஆனால் அந்த மனிதர் ஓட விடாதபடி குரல் கொடுத்து நிறுத்தினார்.

‘‘யாரைய்யா நீ?’’ என்று தைரியமாகவே கேட்டார் 13.

‘‘என் பெயர் வால்ட் டிஸ்னி’’ என்றார் அந்த மனிதர்.

‘‘நான் உன்னை பற்றிக் கேள்விப்பட்டதில்லையே?’’ என்றது 13.

‘‘நீ யார்?’’ என்றார் டிஸ்னி.

13வது எண் மவுஸ்நான்’’ என்ற சுண்டெலி.‘‘சுண்டெலி பிரதேசத்தில் என்னை பதின்மூன்றாவது எண் என்று அழைப்பது வழக்கம்’’ என்று விளக்கம் கூறியது. அது தன்னைப் பற்றிச் சிறிது விரிவாகவே விளக்கம் கூறியதைக் கேட்ட டிஸ்னிக்கு மின் கீற்று போன்று ஒரு யோசனை உதித்தது.

‘‘உன்னை ஒரு நட்சத்திர நடிகனாக ஆக்கட்டுமா?’’ என்றார். டிஸ்னி.

‘‘முடிந்தால் செய்யுங்களேன். எனக்கொன்றும் ஆட்சேபம் இல்லை’’ தன்னம்பிக்கை அதன் குரலில் பளிச்சிட்டதை உணர்ந்தார். டிஸ்னி. அது சரி, நீ இங்கு வந்ததும் என்ன செய்தாய்?’’ ஆவலோடு கேட்டார் டிஸ்னி.

‘‘பச்சை நிறப் பாலாடைக் கட்டியை ஆசையாகச் சுவைத்தேன்’’

டிஸ்னி ஒரு விநாடி ஏதோ யோசித்தார். ‘‘கிரீன், ஐரிஷ், மிக்கி,’’ என்று முணுமுணுத்தவர், ‘‘ஆ! வந்துவிட்டது & உன் பெயர் மிக்கிமவுஸ் என்று இருக்கட்டுமே!’’ என்றார் மகிழ்ச்சி கலந்த குரலில்.

‘‘இருக்கட்டுமே!’’ என்று ஒப்புதல் அளித்தது மிக்கியாகப் போகும் அந்த 13.

அதன் பின்பு சில வாரங்கள் டிஸ்னிக்கு வேறு ஒன்றுமே தோன்றவில்லை. ஒரே சிந்தனை! எந்த விதமான அணுகுமுறையில் படமெடுப்பது? அதன் பிறகு ஒருநாள் மிக்கிமவுஸ் கதாநாயகனாகத் தோன்றும் ஒரு சிறிய கார்ட்டூன் படம் திரையிடப் பெற்றது. அதைத் தொடர்ந்து மேலும் சில படங்கள் மிக்கிமவுஸ் கார்ட்டூன் என்ற பொதுப் பெயரில் வெளிவந்த வண்ணமாயிருந்தன. அதன் பின்னர் பார்க்கவேண்டுமே, மிக்கி மவுஸ் பிரபல கார்ட்டூன் பட நட்சத்திரமாக மின்னத் தொடங்கிவிட்டது.

இப்பொழுதெல்லாம் 13 அமெரிக்கப் பாலடைக் கட்டியைத் தின்பதில்லை, அதற்கு பதிலாக சுவிட்சர்லாந்திலிருந்து நேரடியாகத் தருவிக்கப்படும் சரக்குதான் மிக்கிமவுஸின் நொறுக்குத்தீனி.

மிக்கியின் கார்ட்டூன் படங்கள் முதன்முதலாகத் திரையிடப் பெறும் ஆரம்பநாள். மிக்கி தன் காதலி மின்ஸிமவுஸ¨டன் கெடிலாக் காரில் உல்லாசமாக அரங்கத்தின் முன் வந்து இறங்கும் விசித்திரம் நிகழ்கிறது. மிக்கியைக் கண்டது அரங்க வாசலில் கூடியிருக்கும் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைத் தொடும்.

வால்ட் டிஸ்னியால் மிக்கிமவுஸ் நட்சத்திர நிலையில் திரை உலகில் வெற்றி உலா வருகிறதென்றால். அந்த மிக்கியால் உலகப் பிரசித்தி அடைந்த வால்ட் டிஸ்னியும் வெற்றி முழக்கத்துடன் உலகைப் பிரமிக்க வைத்தார்.

இது கற்பனையன்று, சந்திப்பு மட்டுமே கற்பனையென்றாலும். ஒரு சுண்டெலியை டிஸ்னி கண்டபோது அதன் சேட்டைகள் அவருக்கு புதிய அணுகுமுறைக்கு அழைத்துச் சென்றது உண்மையே. ஒரு சாமானிய சுண்டெலியைக் கதாநாயகப் பாத்திரத்தில் புகுத்தி வெற்றிக் கண்டார். இன்று உலகமெங்கும் டிஸ்னியின் புகழ் பரவியிருப்பதுபதற்கும் மூல காரணமாக இருந்தது ஒரு சுண்டெலி என்பதும் மறுக்க இயலாத உண்மை.

அதற்கு நன்றிக் கடனாக டிஸ்னியும், மிக்கிமவுஸ¨க்குப் பலவகையிலும் நன்மைகல் வழங்கிவிட்டார். எங்கும் எதிலும் மிக்கிமவுஸ் பெயரையே காணமுடிகிறது. மேதை டிஸ்னியின் பெயரையே கூட மறந்திருக்கலாம். ஆனால் அவரால் படைக்கப் பெற்ற மிக்கி மவுஸ் கார்ட்டூன்களை யாரும் மறந்திருக்க முடியாதே!

நம் ஊரில் அந்த மிக்கி பிறந்திருக்குமேயாயின் அதற்கு மிக்கி மவுஸ் ரசிகர் மன்றம் என்று ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் அதைக் தங்கள் தலைமேல் வைத்துக் கொண்டு கூத்தாடியிருப்பார்கள். ஒருவேளை அதற்கு நூறடி உயரக் கட்அவுட் ஒன்று அண்ணாசாலையில் விண்ணை முட்டிக் கொண்டு நின்றாலும் ஆச்சரியப் பட்டிருக்க மாட்டோம்!