Home சிறப்புச் செய்திகள் திருமூலர்

திருமூலர்

57
0
SHARE

பழங்காலத்தில் தமிழக எல்லையானது வடக்கே      இமயமலை வரையிலும் தெற்கே குமரிமுனை, மேற்கே அரபிக்கடல், கிழக்கே வங்காள விரிகுடா என பரந்து விரிந்து இருந்தது.

ஆன்மீகமும் தெய்வீகமும் தழைத்தோங்கிய அக்கால கட்டத்தில் கயிலாய மலை எனப்படும் இமயமலையில் இருந்து வந்தவர்தான் சுந்தரநாதன் எனப்படும் திருமூலர்.

தில்லை நடராஜப் பெருமானை வணங்கும் பொருட்டு தென்னகம் வந்தார் சுந்தரநாதர். வரும் வழியில் சாத்தனூர் எனப்படும் ஊரில் காட்டுப்பாதையில் மூலன் என்னும் மாடு மேய்க்கும் இடையன் இறந்து கிடந்தான். மாடுகள் மூலனின் உடல் அருகே நின்று கண்ணீர் விட்டபடி இருந்தன. இதைக்கண்ட சுந்தரநாதர் மனம் உருகினார். சுந்தரநாதர் சித்தர் என்பதால் கூடுவிட்டு கூடு பாயும் வல்லமை பெற்றிருந்தார். ஆகையால் தனது உடலை ஒரு புதர் மறைவில் கிடத்தி விட்டு உயிரை மூலனின் உடலில் செலுத்தினார். உடனே மூலன் எழுந்து கொண்டான்.

மூலன் எழுந்ததைக் கண்ட மாடுகள் வழக்கம்போல் மேயத்தொடங்கின. மாலையானதும் வீடு திரும்பின பசுக்கள். பசுக்களை வீட்டில் விட்டுவிட்டு சுந்தரநாதர் தன் உடல் கிடந்த புதர் அருகே சென்றார். அதற்குள் அவ்வுடலை யாரோ எரித்துவிட, தொடர்ந்து மூலனின் உடலிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் சுந்தரநாதருக்கு ஏற்பட்டது. மூலனின் உடலில் உட்புகுந்த காரணத்தால் அதுமுதல் திருமூலர் என்று அழைக்கப்பட்டார். மூலனின் உடலில் இருக்க வேண்டியது தான் இறைவனின் சித்தம் போலும் என்றெண்ணிய திருமூலர் மூலனின் மனைவியிடம் தான் யார் என்பதைக் கூறிவிட்டு போய்விடுகிறார்.

திருமூலர் எழுதிய பாடல்கள் தமிழ் மூவாயிரம் என்றும் திருமந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. மூவாயிரம் பாடல்களைக் கொண்டதால் தமிழ் மூவாயிரம் என்ற பெயரினைப் பெற்றது. தமிழ் மூவாயிரத்தில் திருமூலர் மனிதனின் பிறப்பு, வளர்ப்பு, மூச்சுவிடும் முறை, வாழும் வழி, ஆண் பெண் பிறப்பு என அத்தனைக்கும் வழி கண்டு உலகுக்கு உரைத்து சென்றுள்ளார்.

மனிதனின் பிறப்பு, இறப்பு இயற்கையானது என்றாலும் மனித உடலில் உள்ள உணர்வுகள் மனிதனாலேயே உருவாக்கப்படுகின்றன. அதனைக் கையாளும் சக்தி மனிதனுக்கே உரியது என்பதைக் கண்ட ஆன்மீக அறிவியல் நிபுணர் திருமூலர். அவர் சொன்ன கூற்றுப்படி, பெற்றோரின் சாயல் உருவாகும் கருவில் இருக்கும். ஆண்&பெண் குழந்தைகள் பிறப்பதற்கு காரணம் ஆணின் விந்தணு தான். பெண் காரணமல்ல என்று கூறிய திருமூலர்,

  ஆண்மிகல் ஆண் ஆகும் பெண்மிகல் பெண்ணாகும்

  பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்

  தாள்மிகும் ஆயின் தரணி முழுது ஆளும்

  பாழ்தவம் மிக்கிடின் பாய்ந்ததும் இல்லை

என்னும் பாடல்வரிகளில் கல்வியின் போது ‘சுக்கிலம்’ மிகுதியானால் ஆண் குழந்தையும், கருமுட்டையில் ‘சுரோணிதம்’ அதிகம் இருந்தால் பெண்குழந்தையும் இரண்டும் சமமானால் அலியும் பிறக்கும். ஆண் விந்தில் ஆற்றல் மிகுந்திருப்பின் ஆண் குழந்தை அரசாளும் என்கிறார்.

ஆன்மீகவாதியான திருமூலர் மனிதனின் பிறப்பு பற்றி பேசியது விந்தையிலும் விந்தை தானே!

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க 96 செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. அவை தூங்கும்பொழுது சில செயல்படுவதில்லை. கனவு காணும்பொழுது சில குறைகின்றன. மயக்கமடைந்தால் இன்னும் சில செயல்பாடுகள் நின்று விடுகின்றன. இன்றைய அறிவியல் தற்போது கண்டுபிடித்த இந்த ரகசியத்தை திருமூலர்

  முப்பதும் முப்பத்பதும் முப்பத்தறுவரும்

  செப்ப திளுடைக் கோயிலுள் வாழ்பவர்

  செப்ப மதிளுடையக் கோயில் சிதைந்தபின்

  ஒப்ப அனைவரும் ஓட்டெடுத்தார்களே!

அதாவது முப்பது+முப்பது+முப்பத்தாறு என மொத்தம் 96 இல் 80 மட்டும் வேலை செய்தால் நோய் முற்றி வருகிறது என்று பொருள், இப்படி படிப்படியாக எண்ணிக்கை குறைந்துவரும்பொழுது அவர்களுக்கு ஆயுள் முடிந்துவிடும் என்று மனித அறிவியலை கண்டறிந்த சித்தர் திருமூலர்.

  மூச்சுப் பயிற்சி பற்றிக் கூற வந்த திருமூலர்,

நாட்ட மிரண்டும் நடுமூக்கில் வைத்திடில்

வாட்டமுமில்லை… மனைக்கு அழிவில்லை

என நம்முடைய சிந்தனை முழுவதையும் புருவ மத்தியில் வைத்து நோய், முக்கு நுனியில் இருக்கும்படி செய்தல் வேண்டும். அவ்வாறு செய்து உயிர்ப்பினை அடக்கி அசையாது நின்றால் திருவருளின் ஒளி நம் முன்னே தோன்றும்! பிறகு உடலுக்கு அழிவும் இல்லை, ஆண்டவன் மீது பற்று உண்டாகி அவனே சிவனாக மாறிவிடுவான் என்கிறார்.

   மாலாங்கள், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கந்துருக்கி காலாங்கி, கஞ்ச மலையன் என ஏழு சீடர்கள் திருமூலருக்கு இருந்தனர்.

     சுந்தரநாதனாய் சிவனை வணங்க வந்த திருமூலர் தமிழ் சமூகத்துக்கு அளித்த ‘ மூவாயிரம்’ பாடல்களும் ஆயிரமாயிரம் மதிப்பு கொண்டவை. அவைரையும் அவர் பாடல்களையும் போற்றிப் பாதுகாப்பது தமிழர்களாகிய நமது தலையாய கடமை!