Home தமிழகம் வடகிழக்கு பருவமழை குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

வடகிழக்கு பருவமழை குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

48
0
SHARE

திருவள்ளூர், செப். 7&

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்த மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலர் குழு மற்றும் தொடர்பு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்த மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலர் குழு மற்றும் தொடர்பு அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை தாங்கினார். அப்பொழுது அவர் கூறியதாவது:&

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு நாம் அனைவரும் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அதற்கு அமைக்கப்பட்ட குழுவில் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலர் குழுத் தலைவர், மாவட்ட ஆட்சியர் ஆவார். இணைத் தலைவர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஆவார். உறுப்பினர்களாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், திட்ட இயக்குநர், இணை இயக்குநர் (சுகாதாரத்துறை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆகியோரும் மற்றும் முதன்மை செயல் அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர்களும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

அனைத்து வட்டாட்சியர்களும், பேரிடர் தாக்குதலுக்குள்ளாகும் பகுதிகள் அடங்கிய விவரங்கள், மேலும், தாக்குதலுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கான வழிமுறைகளையும், அவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து தேவையான உணவு, தண்ணீர் வசதிகள் செய்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் மீன்வளத்துறையினர் மூலம் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளைச் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

பொதுப்பணித் துறை, நீர் வள ஆதார அமைப்பு மூலம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்ரமணங்களை அகற்ற வேண்டும். கூடுதலான மணல்  மூட்டைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மரம், மின்கம்பங்கள் விழுந்திருக்கும் பட்சத்தில் அவைகளை அப்புறப்படுத்த தனியார் ஒப்பந்ததாரர்களை பயன்படுத்த வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வாகனங்களில் செல்லத்தக்க வகையில் மாற்றுப்பாதை வரைபடம் தயாரிக்க வேண்டும்.

குளங்கள் மற்றும் சிறுபாசன ஏரிகள் ஆகியன பேரிடர் நிகழ்வுகளால் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சிறுபாசன ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் மற்றும் உடைப்புகள் சரிசெய்யப்பட வேண்டும்.

சுகாதாரத் துறையின் மூலம் சீர்கேடுகளை சமாளித்திட அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் கூடுதலாக இருப்பில் உள்ளதா என்றும் உறுதி செய்ய வேண்டும். 108 ஆம்புலன்ஸ் மற்றும் வேன் வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பேரிடர் நேரங்களில்  கட்டுமரம், படகு வைத்திருப்பவர்கள் மற்றும் நீச்சல் தெரிந்த நபர்களின் விவரங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். மின்சார வாரியத்தின் மூலமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் இழப்புகள் குறித்து உடனுக்குடன் தகவல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா அவசரகால உதவி எண்  1,077&க்கும் மற்றும் குறுந்தகவல் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆட்சியர் கூறினார்.