Home தலையங்கம் கல்விஎன்பது மாநிலத்தின் உரிமை

கல்விஎன்பது மாநிலத்தின் உரிமை

16
0
SHARE

மாணவி அனிதா, நீட் தேர்வு குழப்பத்தால் மருத்துவ படிப்பில் சேரமுடியவில்லையே என்ற வேதனையில் தற்கொலை செய்து கொண்டார். மாநில பாடத்திட்டத்தில் நன்றாக படித்து அதிக மதிப்பெண் எடுத்தும் இன்று  டாக்டருக்கு படிக்க முடியவில்லையே என்ற வேதனையில் பல மாணவிகள், மாணவர்கள் என்ன செய்வது என்று குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

போதிய வசதிகள் இன்றி, ஆசிரியர்கள் இன்றி, அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கிராமப்பள்ளியில் நன்றாக படித்து அதிகமதிப்பெண் எடுத்த பல மாணவ, மாணவிகளின் டாக்டராக வேண்டும் என்ற கனவு தகர்ந்து விரக்தியின் விளிம்பில் உள்ளனர்.

மாணவி அனிதாவின் மரணத்துக்குப்பின் இன்று தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன. மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழகம் எங்கும் மாணவர்களின் போராட்டம் வலுத்து வருகிறது.

இந்த மாணவர்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பொதுமக்களும், சினிமா பிரபலங்களும் ஆதரவு அளித்துள்ளனர். எத்தனை போராட்டங்களை இனி நடத்தினாலும் இறந்த அனிதா  திரும்ப வரப்போவதில்லை.

கடைசிவரை மத்திய அரசும், மாநில அரசும் நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சிகள் எடுக்கிறோம், மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிக்கிறோம் என்று கூறிவந்து, கடைசியில் கோர்ட்டு தீர்ப்பை காரணம் காட்டி தப்பித்துக்கொண்டன.

இந்தியா என்பது ஒரே தேசம் என்பதில் யாருக்கும் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே பண்பாடு என்று சுருங்கி இருக்க முடியாது.

கல்வி என்பது மாநிலங்களின் அடிப்படை உரிமை. கல்வியை மாநில அரசின் உரிமைக்கு உட்பட்டதாக மாற்ற வேண்டும்.மாநிலத்தின் பிரச்சினையை புரிந்து கொள்ள முடியாத பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்கள் குழு தீர்மானிக்கக்கூடாது.

மாணவர்கள் பிரச்சினை உச்சக்கட்டத்தில் இருக்கும் இந்த நேரத்தில், மேற்கொண்டு பல அனிதாக்கள் உயிர்பலியாகாமல் இருக்க உடனடியாக மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு இந்த போராட்டத்துக்கு தீர்வு காணவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here