Home சிறப்புச் செய்திகள் அரசியல் களத்தில்புத்தகப்பூக்கள் புதைக்கப்படுகிறதே பெற்றோர்களின் கவனத்திற்கு

அரசியல் களத்தில்புத்தகப்பூக்கள் புதைக்கப்படுகிறதே பெற்றோர்களின் கவனத்திற்கு

32
0
SHARE

அரசியல் களத்தில் புத்தகப்பூக்களா? என்ன இது என்று எல்லோருக்கும் மனதில் கேள்வி எழும்பியிருக்கும். தமிழ்நாட்டின் இன்றைய நிலையை அப்படியே விவரிக்க ஐ.நா சபையில் இருப்பவர்களால் கூட முடியாது, அடைக்கமுடியாத ஒட்டைகள், அவிழ்க்க முடியாத பணமூட்டைகள் இதற்கு பெயர் தான் அரசியல்களம் என்கிறார்கள் இன்றைய அரசியல்வாதிகள். அதை பற்றி பேசிக்கொண்டிருப்பது நம் நேரத்தை விரயமாக்குவதற்கு சமமாகும்.மக்களாகிய நாம் பேசாமல் பின் வேறு யார் பேசுவார்கள்? சரி தான், ஆனால் கடைசிவரை நாம் பேசிக்கொண்டுதான் இருக்கவேண்டும், அதை கேட்பதற்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு நேரமில்லை.

ஒரு பெண் கருவுற்று பத்து மாதங்கள் ஆனாலே அவர்களின் தாத்தாக்களோ பாட்டிகளோ, பள்ளியில் சேர்ப்பதற்கு வரிசையில் நிக்க வேண்டியுள்ளது. இன்னும் சில பணக்கார வீடுகளில் கருவுற்ற உடனே, பிறக்காத குழந்தைக்கு பெயர் வைத்து பள்ளியில் ஒரிடத்தை பதிவு செய்துவிடுகிறார்கள். எல்லோரும் இப்படியா என்பது கேள்விக்குறிதான். ஆனால் பெரும்பானாலோர் இப்படித்தான் இருக்கிறார்கள். பணமிருக்கிறது பதிவு செய்கிறார்கள், அன்றாட சோற்றுக்கே அல்லாடுபவர்கள் என்ன செய்வது, இவர்கள் குழந்தைகளின் பள்ளிச்சேர்க்கை எப்படி இருக்கும், நம்மில் யாரவது அறிந்திருப்போமா?.

அட அடுத்த வீட்டு பிரச்சனை நமக்கெதுக்கு என்று இருக்குமிடம் தெரியாமல் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிறந்து மூன்று வயது ஆனாலே தன் அக்காவோ, அண்ணனோ அவர்களோடே அந்தக் குழந்தையும் பள்ளிக்குச் சென்றுவிடும், அறிவியலுக்காக அல்ல, அன்றாட சோற்றுக்காக, இப்படித்தான் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக விழாவும் கொண்டாடுவதில்லை, புத்தாடையும் எடுப்பதில்லை, நீ படிச்சா உன் எதிர்காலம் நல்லாயிருக்கும் என்ற அந்த பெற்றோரின் வார்த்தை மட்டும் தான் அவர்களுக்கு கடைசிவரை காதுகளில் ஒலித்துகொண்டிருக்கும்.

இப்போதே நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும் நான் சொல்லப் போவதைப் பற்றி, இது காற்றோடு போகும் விஷயமல்ல, இன்றைய இளம் தளிர்களான நாளைய தலைமுறையின் வாழ்க்கை பிரச்சனை. இறப்பின் சோகத்தை எதிர்கொள்ள முடியாமல் ஒரு கூட்டம், இறப்பையும் பணமாக்கலாம் என உலகிற்கு எடுத்துக்காட்டாய் ஒரு கூட்டம், இறப்பில் இருந்தும் கூட சாதி, மத, சண்டைகளை தூண்டலாம் என பல கூட்டங்கள், ஆனால் யாராவது பகுத்தறிவோடு செயல்படுகின்றார்களா?. இது ஒன்றும் ப்ளூவேல் இல்லை, குழந்தைகளை அதட்டி விட்டு அப்படியே விட்டு விடுவதற்கு.

மருத்துவர்கள் என்றாலே அது இந்தியா என்பது உலகம் அறிந்த ஒன்று, அப்படி எடுத்துக்காட்டாய் திகழும் ஒரு நாட்டில் மாணவர்களின் மரணம் என்பது வேதனைக்குரியது மட்டுமல்ல, வெட்கப்படுதற்குரியது. ஒரு நாளைக்கு எத்தனையோ இறப்புகள் நடைபெறுகின்றன, அத்தனையும் கருத்தில் கொள்ளப்படுகிறதா, இல்லையே பின் அனிதாவுக்கு மட்டும் ஏன் இத்தனை கொந்தளிப்பு? அனிதா ஒன்றும் இலவச வீட்டுக்காகவோ, இல்லை ரத்து செய்த ரேசனுக்காகவோ சாகவில்லை, எதிர்கால மருத்துவர்களாக காத்துக்கொண்டிருக்கும் எத்தனையோ பிஞ்சுகளின் ஆசைகள் நிறைவேறுவதற்காக இறந்திருக்கின்றார்.

என்ன செய்தது இந்த பள்ளிக்கல்வித்துறை?. அனிதாவின் இறப்புக்கும் , பள்ளிக்கல்வித்துறைக்கும் என்ன சம்பந்தம் என்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்றத்தான் செய்யும், சுனாமிக்கும், புயலுக்கும் எச்சரிக்கை செய்து காலவரையரையின்றி பள்ளிகளை மூடும் அரசு, அவள் இறப்பில் செய்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அரசியல் சாக்கடையாய் இருந்தாலும், இந்த ஆண்டு கல்வித்துறை பல திட்டங்களை கொண்டுவந்தது பாரட்டுதற்குரியது, ஆனால் இந்த இறப்பை ஏன் கண்டுகொள்ளவில்லை, இன்று ஒரு மரணம், நாளை அதுவே நூறாகலாம், அப்போதாவது பள்ளிகள் மூடப்படுமா? இல்லை அதுவும் மூச்சுத்திணறல் பிரச்சனை என்று கணக்கு முடிக்கப்படுமா?.

அனிதாவின் இறப்பை எதிர்க்கவேண்டியவர்கள் பெற்றோர்களும், பள்ளிக்கல்வித்துறையும் தான். மாணாவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாய் இருக்கும் போது அங்கு பள்ளிகள் இயங்குவது ஆச்சர்யப்படத்தான் வைக்கிறது. இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டுதானே, அடுத்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இதற்காக காமராஜரையும், கக்கனையுமா தட்டி எழுப்பமுடியும்?. அவர்கள் இப்போது இருந்திருந்தால் கண்டிப்பாக தூக்குமேடைகள் நிறைந்திருக்கும், கல்வியும் செழித்திருக்கும். அடக்குமுறைகளை கையாளும் அரசிற்கு ஆட்சி செய்யத்தெரியவில்லை. இப்படியே அடிமைகளாய் இருந்தால் இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போகும், ஆனால் இன்றைய அரசியல்வாதிகளின் நாளைய சந்ததிகள் நலமுடன் இருக்காது, இங்குதான் திறமைக்கு இடமில்லையே.

பணத்திற்குதானே முதலிடம், பணம் பாதளாம் வரை பாயும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது, ஆனால் தேவையானால் பாதாளத்தையே உருவாக்கும் என்பது இன்றைய சூழலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது. இவர்களை திருத்த முடியாது, அதனால் பெற்றோர்கள் தான் திருந்த வேண்டும். இல்லையென்றால் இன்று அரியலூரில் நடந்த இறப்பு, நாளை நம்வீட்டிலும் நிகழலாம்.

நாடு முழுமையும் ஒரே கல்விமுறையை அறிவித்த அரசு, தேர்வு முறைகளில் மட்டும் ஒரவஞ்சனை செய்வது, இனி படிக்க நினைக்கும் ஏழை குழந்தைகளின் கன்னத்தில் ஓங்கி அறைவதற்கு சமமாகும். பாவம் மறுகன்னம் காட்டுவார்கள், அதையும் மீறினால் மரணத்தை தேடுவார்கள். அனிதாவின் மரணத்திற்கு பெரியதாய் என்ன காரணம் இருந்துவிடப்போகிறது? கண்டிப்பாக இருக்காது. பலநாட்கள் பட்டினியை பார்த்த அவள் பணத்திற்காக இறந்திருக்க மாட்டாள், அப்பாதான் இப்படி கஷ்டப்படுறேன், நீயாச்சும் நல்லாபடிச்சு நம்ம குடும்பத்தை மேல கொண்டுவந்துரும்மா என்ற ஒற்றை வார்த்தைதான்.

அவள் இறப்பை தவறு சொல்வது நியாயம் கிடையாது, ஒவ்வொரு நாளும் அவளின் அப்பா உறங்காமலிருப்பதை இவள் சரிசெய்யலாம் என்று நினைத்திருப்பாள், முடியவில்லை, முடித்துக்கொண்டாள். இன்னும் தன் மகளோ / மகனோ பொறியியல் துறையில் கம்ப்யூட்டர் பிரிவில் படிக்கிறார்கள் என்றால், ஏசி ரூம், லட்ச சம்பளம் என்றுதான் நினைத்துக்கொண்டிக்கிறார்கள் ஏழை பெற்றோர்கள், யாருக்கும் தெரிவதில்லை, உச்சிவெயிலில் கர்ச்சீப்பை கட்டிகொண்டு வேலையை பிச்சையாய் எடுப்பதற்கு ஏறி இறங்குவது. பெற்றோர்களுக்கு சொன்னால் தானே புரியும், ஆனால் அவர்கள் கட்டி வைத்திருப்பது கனவு கோட்டையல்ல, இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் தெருவில் நாளை எப்படி நிமிர்ந்த நடைபோடுவோம் என்ற நிஜக்கனவு, இந்த கஷ்டத்தை சொல்லி அதை அழிக்கமுடியாது, அது அவர்களை உயிரோடு உலையேற்றுவதற்கு சமமாகும். கல்விக்கு கண்திறந்தார்கள் இந்த செந்தமிழ் நாட்டில் ஆனால், கல்விக்காக பிஞ்சுக்குழந்தைகள் கண்மூடுகிறார்கள் இந்த டிஜிட்டல் இந்தியாவில்.

அனிதாவும் ஆடு, மாடு மட்டும் மேய்த்துக்கொண்டிருந்தால், இப்படி இறந்திருக்கமாட்டாள், ஆனால் ஆடு மேய்ப்பவர்களையும் தலைவர்களாக்கி ஆச்சர்யப்படுத்துவது அமெரிக்காவில் மட்டும்தான் சாத்தியம், நீங்கள் உடனே நம்நாட்டின் டீக்கடை & பார்லிமெண்ட்டை நினைக்காதீர்கள்.

எங்களிடம் பணம் இருக்கிறது என்பவர்களை பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் அவர்களுக்கு நீட் இல்லையென்றால், நோட் இருக்கிறது, அதனால் கவலை கொள்ளத்தேவையில்லை. ஆனால் நடுத்தர மக்களும், கீழ்த்தட்டு மக்களும், இனிமேலாவது உங்களுடைய கனவுகளை பிள்ளைகளின் மேல் திணிக்காதீர்கள், அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள், படிப்பு வரவில்லையென்றாலும் பாராட்டுங்கள், படித்தால்தான் முன்னேற முடியும் என்ற நஞ்சு விதையை விதைக்காதீர்கள். உன்னை நம்பித்தான் நமது குடும்பமே இருக்கிறது என்று அடிக்கடி சொல்லி அவர்களின் ஆழ்மனதில் குடும்ப வறுமையை பதியசெய்யாதீர்கள்.

மற்ற நாடுகளை விட தமிழ்நாட்டிலுள்ளவர்கள் உணர்ச்சி பெருக்கு மிக்கவர்கள். அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களிடமே கஷ்டத்தை சொல்வதற்கு கஷ்டப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்ளலாம், அதன்பின் நாம் அழுது புலம்புவது பைத்தியக்காரத்தனம்.

ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தைகள் பிறந்துவிடும் என்ற இயற்கை நியதியே இனி மாற்றப்படும், பணம் மிகுதியாய் இருப்பவர்கள் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளுங்கள், மற்றவர்கள் அவர்களின் விட்டுக்கு வேலைக்கு செல்லுங்கள் என்பதாகக் கூட இருக்கலாம். இப்படி ஒரு சட்டம் போட்டாலும் இங்கு ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. நாம் தான் தலையாட்டி பொம்மைகளாயிற்றே. தஞ்சாவூர் மட்டும் தானில்லை, தமிழ்நாட்டையும் அதற்கு எடுத்துக்காட்டாய் சொல்லாம்.

இது ஜனநாயகநாடு, மக்களாட்சிதான் நடக்கிறது என்கிறார்கள், இவர்கள் எல்லோரும் குடிமையியல் படித்திருக்கிறார்களா? இல்லை நமக்கு தவறாக கற்பிக்கப்பட்டதா?. மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி மக்களுக்காக பாடுபடுவது என்பதாகும். இவர்கள் யாரும் மக்களுக்காக பாடுபட வேண்டாம், ஆனால் பாடாய் படுத்தாமல் இருந்தால் போதும். மன்னாராட்சிக்கும் மக்களாட்சிக்கும் வித்தியாசம் கேட்கும் சிறு குழந்தைக்கு எப்படி சொல்லமுடியும், தமிழ்நாட்டில் தற்போது நடந்துகொண்டிருப்பது மக்களாட்சி என்று.

போர் என்பது கூட என்றாவது ஒரு நாள் தான் வரும், ஆனால் தழிழ்நாட்டில் வாழ்பவர்களுக்கு தினம் தினம் அக்கப்போராய்த்தான் உள்ளது. அதனால் அதைப்படி, இதைப்படி என்று வற்புறுத்தாமல், ஆடு, மாடு மேய்த்தாலும் பகுத்தறிவுடன் இரு என்பதை மட்டும் சொல்லிக்கொடுங்கள். அவர்கள் பிழைத்துக்கொள்வார்கள். கடலடியில் படித்து விண்ணுலகை ஆய்வுசெய்தவர் கலாம், அவர் விதைத்த கனவு நிறைவேறாமல், நிறைவேற்றப்படாமல், நிறைவேற்றமுடியாமல் கல்விக்காக இறந்தவர் அரியலூர் அனிதா.