Home சிறப்புச் செய்திகள் மௌன விரதத்தால் நிகழும் மாற்றங்கள்…

மௌன விரதத்தால் நிகழும் மாற்றங்கள்…

14
0
SHARE

விரதங்களில் உயர்ந்ததாக கூறப்படுவது, மௌன விரதம். உடலின் அனைத்துவகை இயக்கங்களை கட்டுப்படுத்துவதே, மௌனவிரதம். பேச்சு, எண்ணம், செயல் இவற்றை நிறுத்தி, மனதை இறை சிந்தனையில் செலுத்தி இருப்பதே, மௌன விரதமாகும்.

என்னை பட்டினி வேண்டுமானாலும் போடுங்கள் இருந்து விடுகிறேன், ஆனால், பேசாமல் இரு என்றால், என்னால் முடியாது, என்று நம்மில் அனைவரும் ஏகோபித்த குரலில் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த மௌன விரதம், உண்மையில் அத்தனை கடினமா? அவ்வளவு சிரமப்பட்டு இருக்கும் அளவுக்கு அதில் என்ன, சிறப்பு இருக்கிறது என்று அனைவரும் யோசிக்கலாம், அப்படி என்ன சிறப்பு என்பதை பார்ப்போம், வாருங்கள்.

உண்ணாவிரதம், உடலை பட்டினி போட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, மௌன விரதம், மனதை பட்டினி போட்டு, மன எண்ணங்களை மேம்படுத்துவது! மௌன விரதம், ஞானிகளாலும், பல்வேறு சமய பெரியோர்களாலும், மௌன நிலையில் இறை நிலையை அடைய, அனுஷ்டிக்கப்பட்டது. மௌன விரதம் என்றால் பேசாமல் இருப்பது, எப்படி பேசாமல் இருப்பது? வாயாலும், மனதாலும், செயலாலும் பேசாமல், ஓரிடத்தில் அமைதியாக இருப்பதே ஆகும்.

ஆழ்நிலையில் மௌனமாக இருப்பதே, மௌன விரதம். பேசிப் பயனிலா சூழலில், மௌனமாக இருப்பது, சிறந்த தீர்வாகும். மௌன விரதம் என்பது, தவ ஞானிகளுக்கு சிறந்த ஆன்மீக அரணாக விளங்கியது, பகவான் ரமணரும், காஞ்சி பெரியவரும் அவ்வப்போது மௌன விரதம் இருந்து மௌன நிலையில் இறையுடன் கலந்திருப்பர்.

1899&ல் குடந்தையில் சித்தியடைந்த மகான் மௌன குரு சுவாமிகள் என்ற மகாதவஞானி, மௌனமாக இருந்தே, அடியார்களுக்கு அருள் பாலித்தவர். சில நாட்களுக்கு முன்னர் நிறைவுற்ற திருச்செந்தூர் திருமுருகனின் கந்த ஷஷ்டி விழாவின் கடைசி நாளில், முருகனடியார்கள், ஒரு வார காலம் அனுஷ்டித்த விரதத்தை, மௌன விரதம் இருந்தே நிறைவு செய்வர். இதன் மூலம், தங்கள் கோரிக்கைகளை சீரிய முறையில் முருகப்பெருமான் நடத்தித் தருவார் என்பது, முருகனடியார்களின் நம்பிக்கை.

பேச்சைக் குறைப்பதால் ஆகும் நன்மைகள்:

இன்றைய காலகட்டத்தில் நாம் பொய் பேசாமல் இருக்க முடிவதில்லை, வீட்டில் தொடங்கி, ஆபிஸ், நண்பர்கள் மட்டுமல்ல, பார்ப்போர் அனைவரிடமும் பொய் சொல்கிறோம், இதில் என்ன வேதனை என்றால், நாம் பொய் சொல்வதை, சமூக வாழ்வின் ஒரு அங்கமாகக் கருதுகிறோம். இதுபோன்ற அன்றாட விஷயங்களால் யாரிடம் என்ன சொன்னோம் என்று தெரியாமல், மன அமைதி பாதித்து, மனம் அல்லல் அடைகிறது, இதுவே, நம்மிடம் இருந்து குழந்தைகளுக்கும் பரவுகிறது.

எப்படி தடுப்பது?

உண்மையை பேசினால், எங்கும் தடுமாற வேண்டியதில்லை, மாறாக ஒருவரிடம் சொல்லும் பொய்யை நாம் மனதில் வைத்துக்கொண்டு, அதையே எங்கும் சொல்லிவர, ஒரு நாள் அவர்களை அறியாமல் பொய் வெளிப்பட்டு, உண்மைமுகம் உலகம் அறியும்போது, மனதில் வேதனை ஒருபக்கம், அதனால் அடையும் பாதிப்புகள் பலவாகும்.

இதற்கெல்லாம் தீர்வாக, பொய் பேசாமல், மன அமைதியை பெறுவது எப்படி? இதற்கு மௌன விரதம் துணையாகும்.

தன்னை அறிய, பொய்மை மறையும்!”

உன்னில் தேட, உற்றது கிடைக்கும்!”

யாகாவராயினும் நா காக்க வேண்டும்என்கிறார், வள்ளுவப் பெருந்தகை.

எதனால்? உலகில் வெளிப்பட்ட எந்த ஒரு விஷயத்தையும் மீண்டும் உட்செலுத்த முடியுமா? பிறந்த குழந்தை மீண்டும் தாயின் கருவறையை அடைய முடியுமா? பழுத்த பழம், மீண்டும் காயாக மாறுமா? அதுபோலவே, வாயிலிருந்து உதிர்த்த சொல்லும், மீண்டும் சேருமா? வாய்ப்பேச்சில் வீணராக பொழுதைக் கழிப்பதைவிட, மௌனமாக இருந்து, நமக்கு, நம்மை யார் என உணர வாய்ப்பாக அமையும், மௌன விரதம். மௌனத்தைவிட சிறந்த மொழி, உண்டோ.

மௌன விரதம் என்றால் என்ன?

முதலில் நமக்கு மௌனவிரதம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே, நாம் மனித வாழ்வின் விளக்கத்தை அடையும் நீண்ட பயணத்தில், நம்மை இணைத்துக்கொள்கிறோம் என்றுதானே பொருள்.

காலையில் எழுகிறோம், கடமைக்காக பணிக்கு செல்கிறோம், மாலை வீடு திரும்புகிறோம், எங்கும் யாரிடமும் மனதார உணர்வால் உரையாடாமல், நுனி நாக்கின் விளிம்பில் ஓரிரு வார்த்தைகளை உதிர்த்துவிட்டு, கூட்டில் அடையும் பறவைகளைப்போல, வீடுகளில் அடைகிறோம். சுயநலமே பொதுநலமாக எண்ணி வாழும் மனப்பாங்கே, இன்று சமூகத்தில் எங்கும் பரவிவிட்டது. இதன் காரணமாகவே, தலைமுறைகளும் இதே மனநிலையில் வளர்கின்றனர் என்பதுதான், மூத்தோரின் வேதனை.

எப்படி மௌன விரதம் இருப்பது?

மௌனவிரதம் என்பது நம்மை நாம் அமைதியாக மனதை ஒடுக்கி, இறை சிந்தனை அல்லது சிந்தனையை ஒருநிலைப்படுத்துவதாகும். இதனால் என்ன நடக்கும்? அமைதியாக ஓரிடத்தில் தரையில் தர்ப்பை பாய் அல்லது கோரைப்பாய் விரித்து அமர்ந்து, அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி, சிந்திக்கும்போது, தினசரி வாழ்வில் நம்மை பாதிக்கும் அனைத்து செயல்களும் நம்முன் வந்துபோகும். இன்னும் சற்று ஆழமாக சிந்திக்க, அவையெல்லாம், நம்மாலேயே உண்டான பாதிப்புகள் என்பதையும் அறிந்து, அவற்றை எப்படி கடக்கவேண்டும் என்று சிந்திக்க, விடைகள் கிடைக்கும்.

சுய சிந்தனை:

மேலும், மனதை ஒடுக்கி மௌனவிரதம் மேற்கொள்ளும்போது, மௌன நிலையை, இறை உணர்வையோ அல்லது நாம் யார் எனும் அத்வைத தத்துவத்தையோ நெருங்கும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படலாம்.

அந்தநிலையில், நாம் விழிப்படையும்போது, இதுவரை நாம் இன்பம் என்று கருதிய யாவும் வெறும் புலன் இன்பங்கள், அதனால் அடைந்த பலன்கள் என்று ஒன்றுமில்லை, மாறாக அமைதியான மனம், எதிர்பார்ப்பற்ற வாழ்க்கை மட்டுமே, மனதையும் நமது வாழ்வையும் மகிழ்ச்சியாக்கும் என்ற தத்துவத்தை, அவரவர் நிலைகளில் உணரலாம்.

வாழ்க்கை இலக்கு :

மௌன விரதம், நம்மை நாம் ஆராய, நாம் இதுவரை வாழ்ந்த வாழ்வில் நாம் அடைந்தவை என்ன, இனி அடையவேண்டிய இலக்கு என்ன என்பதை, எந்தவித சமரசமும் இல்லாமல், உண்மை நிலையை நாம் உணர்ந்துகொள்ள முடியும். நம் வாழ்வு இலக்கில் இருந்து விலகிச்செல்வதை அறிந்தால், இலக்கை ஒட்டிய வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வாய்ப்பாகும்.

மௌன விரதம் இருக்கும் முறை:

மாதம் ஒரு முறை பழச்சாறு மற்றும் தண்ணீர் மட்டும் உட்கொண்டு, மௌன விரதம் கடைபிடிக்க, மனம் பொலிவாகி, எண்ணங்களும் செயலும், பேச்சும் வளமாகும். நம் பேச்சில் உள்ள உண்மைத்தெளிவு, அடுத்தவரிடம் ஒரு ஈர்ப்பை உண்டாக்கும். இதுவரை, நாம் வாழ பிறரைக்கெடுத்தேனும் வாழலாம் என்ற சுயநல கண்ணோட்டம் மறைந்து, நம்மைப்போலவே அவரும், என்ற சக யிரை மதிக்கும் மனநிலை உண்டாகும்.

மகிழ்ச்சியான நிலை:

மனதில், எண்ணத்தில் செயல்களில் தோன்றும் இத்தகைய வளமான மாற்றங்களால், உடலும் மனமும் பக்குவப்பட்டு, நம் மனதில் மகிழ்ச்சி நிரந்தரமாக இருக்கும், இன்பத்திலும் துன்பத்திலும், துள்ளாமலும் துவளாமலும், நேர் மறை எண்ணங்களோடு வாழ, வாழ்வை செம்மையாக்கும் ஒரு வழிதான் மௌன விரதம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here