Home சுடச்சுட அரசு வருவாயில் 4ல் ஒரு பங்கை பள்ளி, உயர்கல்விக்கு ஒதுக்கியவர் ஜெயலலிதா துணை...

அரசு வருவாயில் 4ல் ஒரு பங்கை பள்ளி, உயர்கல்விக்கு ஒதுக்கியவர் ஜெயலலிதா துணை முதல்வர் பெருமிதம்

48
0
SHARE

சென்னை, செப்.6 &

அரசின் வருவாயில் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித்துறைக்கு நான்கில் ஒரு பங்கு நிதியாக ரூ. 27 ஆயிரம் கோடி ஒரு ஆண்டுக்கு ஒதுக்கித் தந்தவர் மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா  என துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசினார்.   

சென்னையில் கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற தமிழக அரசி ராதாகிருஷ்ணன் விருதுகளை 2016&17 ம் கல்வி ஆண்டில் பெற்ற 383 பேருக்கு விருதுகளையும், பதக்கத்தையும், சான்றிதழையும்  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ஒவ்வொரு மாணவரையும் சிறந்த மாணவர்களாக மட்டுமல்லாமல் சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக மாற்றுவது ஆசிரியர்கள்தான். இந்தப் பணியில் இருப்பவர்கள் தன்னலமற்றவராகவும், கற்பிக்கும் பணியை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களே நல்லாசிரியர்கள் என்று போற்றப்படுவர்.

ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக விளங்கி, மாணவர்களுக்கு எப்படி பயன்பட வேண்டும் என்பதை கல்வியாளர்களுக்கு உணர்த்தி, தனது இறுதிக்காலம் வரை நல்லாசிரியராகவே வாழ்ந்து காட்டி, மாபெரும் தத்துவ மேதையாக இந்த உலகத்துக்குத் தன்னை வெளிப்படுத்தியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன்.

அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு அவரது மாணவர்கள் அனுமதி கேட்டபோது,  எனது பிறந்த நாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் பெருமை அடைவேன் என்றார். அதன்படி அவரின் பிறந்த செப்டம்பர் 5ந் தேதி ஆசிரியர் தினமாக 1962ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மாணவர்களை ஊக்கப்படுத்துவதிலும் ஆசிரியர்களை பெருமைப்படுத்துவதிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்குவது தமிழகம்தான். கடந்த 6 ஆண்டுகால மாநிலத்தின் சொந்த வருவாயை 92 ஆயிரம் கோடி என்று இலக்கு நிர்ணயித்து இருந்தாலும், சுமார் ரூ.86ஆயிரம் கோடி வரியின் மூலமாக அரசுக்கு வருகிறது. அதில் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைக்கு நான்கில் ஒரு பங்கு நிதியாக ரூ. 27 ஆயிரம் கோடி ஒரு ஆண்டுக்கு ஒதுக்கித் தந்தவர் மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா ஆவார்.

விலையில்லாத பாடநூல், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், புத்தகப் பை, கணித உபகரணப்பெட்டி, புத்தகப் பை, புவியியல் வரைபடம் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. நான் மாணவனாக இருந்தபோது, அட்லஸ் என்ற புவியியல் வரைபடத்தை வசதி படைத்த வீட்டு மாணவர்கள்தான் வைத்திருப்பர். நாங்கள் டிரேஸ் தாளை வாங்கி, அதில் தலையில் இருக்கும் எண்ணெயைத் தடவி, அதை அட்லசில் உள்ள வரைபடத்தின் மேல் வைத்து, அவுட்லைனை வரைவோம். அப்படி படித்த காலம் நினைவுக்கு வருகிறது.

ஆனால்  மாணவர்களின் கையில் வண்ண புவியியல் வரைபட புத்தகம் இருப்பதை பார்க்கும்போது ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். மிதிவண்டி, ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், பேருந்து பயண அனுமதிச் சீட்டு, ஊக்கத் தொகை ஆகியவற்றைக் கொடுத்து, இந்தியாவிலேயே தமிழகம் முதல்நிலை மாநிலமாக உருவாவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தவர் மறைந்த முதல்வர்  ஜெயலலிதா ஆவார்.

அரசுப் பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், இருக்கை வசதிகள், கம்ப்யூட்டர் கூடங்கள், அறிவியல் ஆய்வகங்கள், நூலகங்கள், கழிவறைகள், குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் ஆகிய திட்டப் பணிகளை இந்த அரசு சிறப்பாக செய்து வருகிறது. அனைத்து வகையிலும் புதுமையாக செயல்படும் பள்ளிகளுக்கான புதுமைப்பள்ளி விருதுகள், அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் 100 மாணவர்களுக்கு மேலைநாடுகளுக்கு கல்விப் பயணம் செல்லும் வாய்ப்பையும் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

மாணவ, மாணவிகளின் உயர்வுக்காக தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சிறந்த மாணவர்களை உருவாக்கும் அரசின் முயற்சிக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.