Home சுடச்சுட மாற்றப்படப்போகும் பாடத்திட்டத்தால் தமிழகம் தனித்தன்மை வாய்ந்த மாநிலமாக மாறும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி...

மாற்றப்படப்போகும் பாடத்திட்டத்தால் தமிழகம் தனித்தன்மை வாய்ந்த மாநிலமாக மாறும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

24
0
SHARE

சென்னை, செப்.6&    

அடுத்த 2 ஆண்டுகளில் மாற்றப்படப்போகும் கலைத்திட்ட வடிவமைப்பும், பாடத்திட்டங்களும் இந்தியாவிலேயே, தமிழகத்தை தனித்தன்மை வாய்ந்த மாநிலமாக மாற்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சென்னையில் கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற தமிழக அரசின்   ராதாகிருஷ்ணன் விருதுகளை 2016&17 ம் கல்வி ஆண்டில் பெற்ற 383 பேருக்கு விருதுகளையும், பதக்கத்தையும், சான்றிதழையும் வழங்கி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும், தன் கடின உழைப்பால், அறிவாற்றலால் பாரதத்தின் முதல் குடிமகனாய்  உயர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்  எஸ். ராதாகிருஷ்ணின் பிறந்த நாள்  ஆசிரியர் தின விழாவாகப்  பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் சிறப்பாக  கொண்டாடப்படுகிறது. எனக்கு கல்விச்செல்வத்தை அளித்து, என்னை ஆளாக்கிய எனதருமை ஆசிரியப் பெருமக்களை இந்த இனிய நன்னாளில் நினைவு கூர்ந்து எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசு, கல்வியின் முக்கியத்துவத்தையும், மேன்மையையும், அறிந்துள்ளதன் காரணமாகத்தான் பள்ளிக் கல்வித் துறைக்கு 2017&18 ம் ஆண்டிற்கு மட்டும்26 ஆயிரத்து 932 கோடியே 31 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து  கடந்த 6 ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக 40,433 ஆசிரியர்களும், அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் மூலமாக 15,169 பகுதி நேர ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதுவரை 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு செய்யப்பட்டுபணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வியாண்டில் 3,336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

மாணவர்கள் வெகுதொலைவு பள்ளிக்கு செல்வதை தவிர்க்கும் பொருட்டு தமிழகத்தில் இதுவரை 227 புதிய தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 116 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 829 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும்,  402 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

பள்ளிகளுக்கு தேவையான வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் மற்றும்  பள்ளிச் சுற்றுச் சுவர்கள் போன்றவைகள் அமைப்பதற்கு நபார்டு திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் இவைகளின் வாயிலாக ரூ. 4 ஆயிரத்து 148 கோடி செலவிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 14 வகையான நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  மாணவர்கள் இடைநிற்றல் இன்றிகல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்தோடு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வியை முடிக்கும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் விளைவாக தொடக்க நிலை கல்வியில் மாணவர் சேர்க்கை 99.85 விழுக்காடாகவும்,  நடுநிலை கல்வியில் மாணவர் சேர்க்கை 99.20 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 12 ம் வகுப்பு பயின்ற 26 லட்சத்து 96 ஆயிரம் மாணவர்களுக்கு 4 ஆயிரத்து 723 கோடி ரூபாய் செலவில் விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டுள்ளன.  இந்த ஆண்டும் 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படவுள்ளது. ஒளிவு மறைவற்ற ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம் 12,959 ஆசிரியர்கள், மாறுதல் பெற்று பயனடைந்துள்ளனர்.

இவையெல்லாம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் வந்த அரசு ஒரு திறந்த புத்தகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது  என்பதையே  காட்டுகிறது. 10,12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் 19 லட்சத்து 59 ஆயிரத்து 599 மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்களை இரண்டே நிமிடத்தில் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டது. குழந்தைகளுக்கான இலவச மற்றும்கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009ன்படி 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை, நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினைச் சார்ந்த  தகுதியான குழந்தைகளுக்கான சேர்க்கையில், வெளிப்படைத்  தன்மையினை உறுதிசெய்யும் வகையில் 2017&18 ஆண்டு முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறையினை ஜெயலலிதாவின் அரசு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் எவ்வித மன அழுத்தமுமின்றி தேர்வு எழுதுவதற்கு 2017&18ம் ஆண்டிற்கான இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டுக்கானதேர்வுக்கால அட்டவணை கல்வியாண்டின்  தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளில் இல்லாதவகையில் மாநில, மாவட்ட அளவிலான மாணவர்களின் தரப்பட்டியல் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது.

11ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்ற மாற்றத்தால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான போட்டித் தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்ளும் துணிவை மாணவர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளில் மாற்றப்படப்போகும் கலைத்திட்ட வடிவமைப்பும், பாடத்திட்டங்களும் இந்தியாவிலேயே, தமிழகத்தை தனித்தன்மை வாய்ந்த மாநிலமாக மாற்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என தெரிவித்தார்.