Home சுடச்சுட வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்: நவம்பர் 17&ம் தேதிக்குள் உள்ளாட்சி...

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்: நவம்பர் 17&ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

18
0
SHARE

சென்னை, செப்.5&

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 நகர பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த உள்ளாட்சிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24&ம் தேதியுடன் முடிவடைந்தது. இதை கருத்தில் கொண்டு, அக்டோபர் 17, 19&ம் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் போட்டியிட விரும்பும் அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கிடையில், நீதிமன்றத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், ‘உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள ஆணைகளை ரத்து செய்து உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருபாகரன், தி.மு.க. மனுவை தள்ளுபடி செய்தார். உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தும் உத்தரவிட்டார். மேலும், 2016&ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கை எதிர்த்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தலை நவம்பர் மாதம் 17&ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசுக்கும் அதற்கான அறிவிக்கையை  செப்டம்பர் 18&ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிடப்பட்டது.  மேலும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தலை நடத்த கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. அப்போது, உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பது குறித்து மூடி முத்திரையிடப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள்  தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:&

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 17&ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இதற்கான தேர்தல் அறிவிப்பு வரும் செப்டம்பர் 18&ம் தேதியன்று வெளியிடப்பட வேண்டும். தனி நீதிபதி கிருபாகரன் உத்தரவின்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். இந்த தீர்ப்பானது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, தொகுதி மறுவரையறை மேற்கொள்ள இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.வருகிற நவம்பர் 17&ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.