Home தலையங்கம் இப்போதாவது யோசியுங்களேன்…

இப்போதாவது யோசியுங்களேன்…

43
0
SHARE

மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்கள் நலனை பேணி காக்க வேண்டும். ஆனால் இன்றைய நிலையோ தலை கீழாக சென்று கொண்டிருக்கிறது. நாட்டை ஆள்கிறோம் என்று கூறிக்கொண்டு கட்சியை பலப்படுத்துவதிலும், வளர்ப்பதிலும், குவியல் குவியலாய் தவறான வழியில் பொருள் ஈட்டுவதிலுமே குறியாக இருக்கிறார்கள். நமது அதிகாரிகளும் இதற்கு சளைத்தவர்கள் கிடையாது. இதனால் இந்தியாவில் எங்கு பார்த்தாலும் ஊழல், குற்றச்செயல்கள் அதிகரிப்பு என்று சென்று கொண்டே இருக்கிறது.

ஆனால் பதவி ஏற்கும்போதுசட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப்பற்றும் கொண்டிருப்பேன். இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழுமுதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன். உண்மையாகவும், உளச்சான்றின்படியும் நாட்டுக்காக என் கடமைகளை நிறைவேற்றுவேன். அரசியல் அமைப்பிற்கும் சட்டத்துக்கும் இணங்கி, அச்சமும் ஒருதலைச்சார்பும் இன்றி, விருப்பு வெறுப்பை விலக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதைச் செய்வேன். ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன் என்று ஒவ்வொருவரும் தான் பதவி ஏற்கும்போது கூறுகின்றனர். ஆனால் இதன்படி நடந்துகொள்கிறார்களா? இது அவரவர் மனதுக்கு நன்றாகவே தெரியும்.

கோரக்பூரில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த சம்பவம் கண்டனங்களாகவே குவிந்து மறைந்துவிட்டது. இதுபோன்ற விஷயங்களை ஜீரணிக்க முடியாத நிலையில் அடுத்தடுத்து நாட்டில் இரு பெரும் பிரச்சனைகள் வெடித்து சிதறிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் ப்ளு வேல் எனப்படும் நீலத் திமிங்கில விளையாட்டு. மதுரையை சேர்ந்த மாணவர் உள்பட ஏராளமான மாணவர்களை இந்த திமிங்கலம் விழுங்கிவிட்டது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இந்த விளையாட்டு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் இதற்கு மூளையாக செயல்படும் அட்மினை கண்டுபிடிக்க முடியாத நிலையில், நீலத் திமிங்கில் விளையாட்டில் ஈடுபடுபவர்களை அதில் இருந்து மீட்கப்பட்டதாகத்தான் செய்திகள் வருகிறது. இந்த விளையாட்டு எப்படி பரவுகிறது. இதனை ஒட்டுமொத்தமாக நாட்டைவிட்டு வெளியேற்ற என்ன வழி என்பதை ஆராய இன்னும் எத்தனை இளம் உயிர்கள் தேவை என்று தெரியவில்லை.

அடுத்ததாக தமிழகத்துக்கு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டியது இன்றைய கால கட்டத்தில் அவசியமாகிறது. பாடத்திட்டங்களை முறைப்படுத்தாமல் நீட் என்று கூறப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வை மத்திய அரசு புகுத்தியிருக்கிறது. மத்திய பாடத்திட்ட முறையில் தான் இந்த தேர்வை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. இதனால் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக் கனியாகவே போய்விட்டது.

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா(17), நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்ட அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் இறந்த பிறகும் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் எண்ணம் ஆட்சியாளர்களுக்கு வரவில்லை. நீட்டுக்கு எதிராக தமிழகம் முழுவதும் உரத்த குரல் எழுந்தபோதிலும் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் தான் இன்றைய நிலை உள்ளது.

பதவி ஏற்பு உறுதிமொழி ஏற்கும்போது மக்கள் நன்மைக்காக பாடுபடுவோம் என்று கூறுகின்றனர். ஆனால் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பிறகு இந்த உறுதிமொழி காற்றில் பறந்தது போல் தான் இப்போது நடந்து கொண்டிருக்கும் விவகாரம் உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தலாம். ஆனால் அதற்கான பாடத்திட்டத்தை முறையாக கனித்துவிட்டு செய்ய வேண்டும். படித்தது ஒன்று, தேர்வில் கேட்கப்படும் கேள்வி வேறு என்றால் எப்படி மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நிறைவேறும். வேறு ஒரு உயிரை தமிழகம் இழக்கும் நிலை வராமல் தீர்க்கமான முடிவுக்கு வருமா அரசுகள்…?