Home சுடச்சுட ‘1,176 மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வு பிரச்சனையால் டாக்டருக்கு படிக்க முடியவில்லையே’ மனமுடைந்த மாணவி...

‘1,176 மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வு பிரச்சனையால் டாக்டருக்கு படிக்க முடியவில்லையே’ மனமுடைந்த மாணவி அனிதா தற்கொலை பொதுமக்கள் சாலை மறியல்; போலீசார் குவிப்பு

20
0
SHARE

அரியலூர், செப். 2

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, குழுமூர் கிராமத்தில் உள்ள  ஆதிதிராவிடர் காலனி தெருவை சேர்ந்தவர் அனிதா(வயது17). இவரது தந்தை சண்முகம். திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

  இவரது அம்மா பல

ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். அனிதாவின் உடன் பிறந்தோர் நான்கு சகோதரர்கள். ஏழை குடும்பத்தை சேர்ந்த அனிதா எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிக மதிப்பபெண் பெற்றிருந்தார்.

1,176 மதிப்பெண்கள்

இதை தொடர்ந்து அரியலூர் அருகே, மேலமாத்துவர் கிராமத்தில் உள்ள ராஜவிக்னேஷ் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கப்பட்டு, மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவி அனிதா, 2017 மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்&2 தேர்வில், 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றார்.

இதில் கணித பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்களும், வேதியியல் பாடத்தில் 199 மதிப்பெண்களும், உயிரியல் பாடத்தில் 194 மதிப்பெண்களும் பெற்று, மாவட்ட அளவில் சாதனை படைத்தார். பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் இவர் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான கட்ஆப் மதிப்பெண்196.75 ஆகும். பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ கவுன்சிலிங் தேர்வு நடைபெற்றிருந்தால், மருத்துவ படிப்புக்கான இடம் அனிதாவுக்கு மிக சுலபமாக கிடைத்திருக்கும்.

மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவி அனிதா, நீட் தேர்வு எழுதியதில் அவருக்கு  720க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் மருத்துவ கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலா? அல்லது நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலா? என்பதில் கடந்த இரண்டு மாதங்களாகவே, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பெரும் குழப்பம் நிலவியது.

இந்நிலையில் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, தமிழக அளவில்  மருத்துவ கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை  நடத்தப்பட வேண்டும் என, டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவிகளில் அனிதாவும் ஒருவர்.

இதற்காக புதுடெல்லி சென்ற மாணவி அனிதா, பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்படி செய்வதன் மூலம் தன்னை போன்ற கிராம பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கும் என நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் வாதிட்டார்.

மருத்துவ கவுன்சில்

அறிவிப்பு

உச்சநீதிமன்றத்தில் இரண்டு மாதம் நடைபெற்ற, வாத பிரதிவாதங்களுக்கு இடையில், நீண்ட

இழுபறியை தொடர்ந்து, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான், மருத்துவ கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறும் என மருத்துவ கவுன்சில் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நீட் தேர்வு அடிப்படையில் கடந்த வாரம் மாணவர் சேர்க்கை துவங்கியது.

பிளஸ்&2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தினால், தனக்கு டாக்டர் படிப்புக்கான சீட்  கிடைக்கும் என,  எதிர்பார்த்து காத்திருந்த மாணவி அனிதாவுக்கு, இச்செயல் பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது.

மாணவி தற்கொலை

இதனால் மனமுடைந்த மாணவி அனிதா நேற்று மதியம் 3.30 மணியளவில் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வு பிரச்சனையால், மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்காததால் மனமுடைந்து, மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சாலை மறியல்

இதுபற்றி தகவலறிந்த குழுமூர் கிராம மக்கள் மற்றும் அனிதாவின் உறவினர்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, செந்துறைஅங்கனூர் சாலையில், குழுமூர் காலனி தெரு அருகே திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதுபற்றி தகவறிந்த அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ்குமார் உத்தரவுப்படி, அரியலூர் டி.எஸ்.பி. மோகன்தாஸ், செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப்&இன்ஸ்பெக்டர் சாமிதுரை உள்பட நூற்றுக்கணக்கான போலீசார், குழுமூர் கிராமத்துக்கு சென்று, கலவரம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அமைச்சர் வேதனை

இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் சொந்த ஊரான குழுமூர் கிராமத்துக்கு சென்ற அரியலூர் மாவட்ட கலெக்டர் க.லெக்ஷ்மி பிரியா, அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், நடந்த சம்பவம் பற்றி, அனிதாவின் உறவினர்களிடம் நேரில் விசாரித்தார்.

மாணவி அனிதாவின் தற்கொலை வேதனை அளிப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தலைவர்கள் கண்டனம்

நீட் தேர்வு பிரச்சனை காரணமாக மனமுடைந்து, மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, டி.டி.வி.தினகரன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மாணவி அனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில், பிளஸ்&2வில் 1,176 மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வு பிரச்சனையால் டாக்டருக்கு படிக்கமுடியவில்லையே என்று மனம் உடைந்த அனிதா என்ற மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here