Home இந்தியா திருநங்கையாக மாறிய கடற்படை வீரரை பணி நீக்கம் செய்ய பரிந்துரை பாதுகாப்புத் துறை நடவடிக்கை

திருநங்கையாக மாறிய கடற்படை வீரரை பணி நீக்கம் செய்ய பரிந்துரை பாதுகாப்புத் துறை நடவடிக்கை

14
0
SHARE

புதுடெல்லி, செப். 1& கடற்படையில்  சேரும்போது ஆணாக இருந்து, பின்னர் பெண்ணாக மாறியுள்ளவரை பணியிலிருந்து நீக்கலாம் எனப் பாதுகாப்புத் துறை பரிந்துரைத்துள்ளது.

எம்.கே. கிரி என்கிற பெயரில் இந்தியக் கடற்படையின் பொறியியல் துறையில் கடந்த 2009ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார் ஷபி. பணியில் சேர்ந்ததும் அளிக்கப்பட்ட ஓராண்டு பயிற்சியிலும் கடுமையாகப்  பயின்று தேர்வாகியுள்ளார்.

அதன்பின் பாதுகாப்புப் பணிகளின்போது தன் பாலினம் குறித்த கேள்விகள் அவருக்குக் கடும் மன உளைச்சலை அளித்துள்ளது. சிறுவயது முதலே அப்படியான எண்ணங்கள் இருந்தாலும் குடும்பம் மற்றும் சமூகத்துக்குப் பயந்து அதை வெளிக்காட்டாமல் மறைத்துவிட்டார். ராணுவத்தில் சேர்ந்த பின்னரும் பாலினப் பிரச்னையை மறைத்தே பணியாற்றி வந்த ஷபிக்கு, ஒரு கட்டத்தில் ஆண் என்ற அடையாளம் தனக்கானது அல்ல என்று உறுதியாகத் தெரியவந்துள்ளது.

தனக்குப் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்படி ராணுவ மருத்துவர்களிடம் ஷபி கேட்டபோது, அவர்கள் மறுத்துவிட்டனர்.கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் பணியாற்றியபோது அவர் அங்குள்ள மனநல மருத்துவர்களிடம் கவுன்சலிங் சென்றார். அப்போதுதான் அவருக்குபாலின அடையாளக் கோளாறுஇருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் சொன்னதன் பேரிலேயே ராணுவத்திடம் அவர், பாலின மாற்று அறுவை சிகிச்சை கோரியுள்ளார்.

அதன்பின் வேறு வழியின்றி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் 22 நாள்கள் விடுமுறையில் சென்று பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டபின் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். ஆனால், பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதை மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவில்லை. திடீரென அவருக்குச் சிறுநீரக தொற்று ஏற்பட, சிகிச்சைக்காக விசாகப்பட்டின ராணுவ மருத்துவமனைக்குச் சென்றார்.

அப்போது அவர் பாலின மாற்று அறுவைசிகிச்சை செய்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துவிட்டனர். அறுவை சிகிச்சை செய்து பாலின ரீதியாகப் பெண்ணாக மாறியிருந்தாலும், அவர் மூன்று வீரர்களின் 24 மணி நேரக் கண்காணிப்பின் கீழ் ஆண்கள் வார்டிலேயே தங்க வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. சிறுநீர்த் தாரை தொற்றுநோய் சிகிச்சை முடிந்தவுடன் கட்டாயத்தின்பேரில் ஷபி கடற்படை மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் மன ரீதியாக துன்புறத்தப்பட்டதுடன், அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு மன நிலை சரியில்லாதவர் என்ற முத்திரை குத்த நினைத்ததாகத் தெரிகிறது. ஆனால், ஷபி சரியான மனநிலையில் இல்லைஎன்பதை மருத்துவர்கள் நிரூபிக்கத் தவறியதால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கடந்த 12ம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். ஆனால், அவரை கிரி என்கிற ஆணாகவே பார்த்தவர்கள் இன்னும் சகஜமாகவில்லை என்கிறார் ஷபி. கிரி என்கிற வீரர் ஷபி என்ற பெண்ணாக மாறியதை இந்தியக் கடற்படை, பாதுகாப்புத்துறைக்குத் தெரியப்படுத்தியது.

பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின், ஷபியை பணியிலிருந்து நீக்கலாம் எனக் கடற்படைக்குப் பாதுகாப்புத் துறை பரிந்துரைத்தது. ஏனென்றால் இந்தியப் பாதுகாப்புத்துறையில் திருநங்கைகள் பணியாற்றுவது குறித்து எந்தவித நடைமுறையும் விதிகளும் இல்லை.

என்னைப் பணிநீக்கம் செய்ய கடற்படை முடிவு செய்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. என் உரிமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்றம் வரை செல்லத் தயங்க மாட்டேன்.

இப்போதும் என் உடல் பலத்தை இழக்கவில்லை. ஆணாக இருக்கும்போது எந்தத் திறமையுடன் குறிப்பிட்ட இலக்கைச் சுடுவேனோ அதே திறன் இப்போதும் இருக்கிறது. ஆண்களோ, பெண்களோ, திருநங்கையோ யாராக இருந்தாலும் உடல் தகுதிதானே பாதுகாப்புத் துறையில் பணியாற்ற முதன்மையாக இருக்க வேண்டும். இதைப் பிரதமர் மோடிக்குக் கடிதம் மூலம் தெரிவிப்பேன். சட்டத்தின் அனைத்து வழியிலும் போராடுவேன்என நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த வாரம்தான் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகளைப் பணியிலிருந்து விலக்கினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ஆனால் கனடா, இஸ்ரேல், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஜெர்மனி ராணுவங்களில் திருநங்கைகள் பணியாற்றுகின்றனர். இந்தியாவும் இந்தப் பட்டியலில் சேருமா என்பது ஷபியின் சட்டப்போராட்ட முடிவில் இருக்கிறது

தமிழகம் இந்த விவகாரத்தில் நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டுக் காவல்துறையில் ஒன்றுக்கு இரண்டு திருநங்கைகள் பணியாற்றுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here