Home சம்பவம் வேன் மீது மினிலாரி மோதல் 23 பேர் படுகாயம்

வேன் மீது மினிலாரி மோதல் 23 பேர் படுகாயம்

47
0
SHARE

கனகம்மாசத்திரம், செப். 1& திருவள்ளூர் மாவட்டம், ஆற்காடுகுப்பம் என்ற இடத்தில், தனியார் கம்பெனி வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்கள் 20 பேர் உட்பட 23 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அடுத்த கீழாந்தூர் மற்றும் பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம்,  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றவர்கள், வேலை முடிந்து விட்டு, நேற்று முன் தினம் இரவு வீட்டிற்கு வேனில் வந்துகொண்டிருந்தனர்.

வேனை கார்த்திக் என்பவர் ஓட்டி வந்துள்ளார். வேன், ஆற்காடுகுப்பம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது ஆந்திராவிலிருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பச்சைமிளகாயை ஏற்றிக் கொண்டு வந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது நேருக்குநேர் மோதியது. இதில் கீதாஞ்சலி, துர்கா, தேவி, அன்பு, சின்னராசு, அஜீத்குமார் உள்ளிட்ட 20 பெண்கள் உள்பட 23 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு, 108 ஆம்புலன்ஸ்மூலம் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மினி லாரி டிரைவர் கார்த்திக் லாரியில் சிக்கிக் கொண்டதால், தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அவரை மீட்டனர்.

கை, கால், தலை, கண் என விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.