Home சிறப்புச் செய்திகள் கருப்பை கோளாறை நீக்கும் கடம்ப மரம்

கருப்பை கோளாறை நீக்கும் கடம்ப மரம்

44
0
SHARE

கடம்ப மரம் தெய்வீக மரமாக கருதப்படுகிறது. முருகனை “கடம்ப மாலையை இனி விட நீ வரவேணும்” என்று அருணகிரிநாதர் வேண்டுவதிலிருந்து கடம்ப மாலை போர் களத்திற்குச் செல்லும் போர் வீரர்கள் அணிவார்கள் என்று அறிகிறோம். அன்னை காமாட்சி கடம்பவனத்தில், காஞ்சி புரத்தில் தவக் கோலத்தில் எழுந்தருளியிருப்பதால் அன்னைக்கும் பிரிய மரமாகி, சந்திர மௌளீஸ்வரரை அடைய உதவியிருக்கிறது. மரத்தில் காய்கள் பூப்பந்து போன்று மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கும். அப்போது இளம் வண்ணத்துப் பூச்சிகள் தேன் உறிஞ்ச வட்டமிட்டு, மரமெங்கும் பட்டாம் பூச்சிகள் நிறைந்து கண்கொள்ளாக் காட்சியாகக் காணப்படும்.

வெள்ளைக்கடம்பு என்னும் மரம் சாலையோரங்களில் வளர்க்கப்படுகிறது. இம்மரம் ஆழமான, ஈரமான, நல்ல வடிகால் உள்ள வண்டல் மண் நிலங்களில் மிக வேகமாக வளரும். மலை அடிவாரங்களில் உள்ள நிலங்களுக்கு ஏற்ற மரமாக கடம்ப மரம் உள்ளது.வளமற்ற மற்றும் மண்ணில் காற்றோட்டம் இல்லாத நிலங்களில் மரம் வளராது.

கடற்கரை பகுதிகளில் நடலாம். ஆனால், உப்பு நீர்ப்பகுதிகளில் வளராது. நீர் செழிப்பு மிக்க சதுப்பு நிலங்களில் நன்கு வளரும். எனவே, கிராமங்களில், ஏரிகளின் உட்பகுதியில் உள்ள நிலங்களிலும், ஏரியின் கரையை ஒட்டிய நிலங்களிலும், ஆற்றோர நிலங்களிலும் இம்மரத்தை வளர்க்கலாம்.

பீகார், ஒரிஸ்ஸா, ஆந்திரா, கர்நாடகம், கேரளம், அந்தமான், உள்ளிட்ட பிரதேசங்களில் காணப்படுகின்றன. கிடைமட்டக்கிளைகளை உடைய இலையுதிர் மரம் எண்ணற்ற மருத்துவப்பயன்களைக் கொண்டவை. கனிகள், இலைகள், மரப்பட்டை போன்றவை மருத்துவப்பயன் கொண்டவையாகும். சாதாரணமாக 10 மீட்டர் உயரம் மற்றும் இரண்டு மீட்டர் சுற்றளவுள்ள அடி மரமும் கொண்டதாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் 23 மீட்டர் உயரமுள்ள மரங்களும் உள்ளன.

நடுமரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்த நிலையில், தலைப்பகுதியில் பெரிய பந்து போன்ற தழையமைப்புடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

“ஆந்தோசெபாலஸ் கடம்பா’ என்ற தாவரவியல் பெயரை கொண்டது கடம்ப மரம். இம்மரத்தின் இலை மற்றும் பட்டைகளில் இருந்து காடமைன், ஐசோகாடமைன், கடம்பைன் போன்ற அல்கலாயிடுகள் தயாரிக்கப்படுகின்றன.

இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் குளோரா ஜெனிக் அமிலம் ஈரல் பாதுகாப்பு மருத்துவ குணம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மரத்தில் இருந்து அதிக இலைகள் கொட்டுவதால் மண்ணில் கரிமவளத்தை கூட்ட உதவுகிறது. நீள சங்கிலித்தொடர் வடிவ பாலி சாக்கரைடு இணைந்த மானோசைல், எச்சங்கள், இவற்றோடு சைலோசைல், க்னுக்கோளசல், தொகுப்புகள் இணைப்புகளால் இணைந்துள்ளன. இன்டோல் ஆல்கலாய்டுகளில் க்ளைகோசைடு ஐசோமெரிக், இன்டோல் ஆல்கலாய்டு கடமைன், சின்கோனைன், சப்போனின், குவினோவிக் அமிலம், கடம்பைன், ஐசோ கடமைன் போன்றவை காணப்படுகின்றன.

கருப்பை கோளாறுகளை நீக்கும்:

தண்டின் பட்டை வாய் குழறுதலை தடுக்கும். பித்தமாற்றானது சிறுநீர்ப்பை அழற்றியைத் தடுக்கும். ஜூரத்தைத் தடுக்கும். துவர்ப்பானது, காய்ச்சல் தணிக்கும். பால் சுரக்கச்செய்யும். நன்மருந்து. புண் ஆற்றும். இருமல் மற்றும் கர்ப்பப்பைக் கோளறுகளில் மிகவும் பயன் உள்ளது.

இணை விழைச்சியூட்டும். உடல்சூட்டைத்தணிக்கும். ஜுரத்தின்போது ஏற்படும் தாகம் தணிக்க சாறு பயன்படும். சீரகம் அல்லது சர்க்கரையோடு சேர்த்து குழந்தைகளின் வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்தலாம். கஷாயம் வாய்ப்புண்ணுக்கு வாய் கொப்பளிக்க உதவும்.

வணிகப்பயன்பாடு:

கடம்ப மரம், பென்சில் மற்றும் தீக்குச்சி தயாரிப்பு, காகிதம் தயாரிப்பு, வீடுகளின் மேல்தள பலகை மற்றும் தேயிலை பெட்டிகள் செய்யவும் பயன்படுகிறது. இப்பூக்களில் இருந்து நீராவி வடித்தலின் மூலம் கிடைக்கும் தைலம், சந்தன எண்ணெய் உடன் சேர்ந்து வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுகிறது.

மருத்துவ குணம், பென்சில், தீக்குச்சி, காகிதம் தயாரிக்க பயன்படும் வெள்ளை கடம்ப மரத்தை மகசூல் செய்வதன் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டிற்கு பல லட்ச ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.