Home சிறப்புச் செய்திகள் மாபெரும் பொங்கல் விற்பனை

மாபெரும் பொங்கல் விற்பனை

15
0
SHARE

உலகளவில் இயற்கைக்கு ஊறு விளைவிக்காத, பல்வேறு வண்ண, வடிவங்களில் கலைநயம் மிளிரும் கைத்தறிப் படைப்புகளை இந்தியா வழங்கிவருவதால் உலக நுகர்வோர் இந்திய கைத்தறிச் சந்தையை எதிர்நோக்கி உள்ளனர். நமது நாட்டின் கைத்தறி நெசவுத் தொழில், வளமான உலகப் பொருளாதார வாய்ப்பு களம் மட்டுமல்ல அது நமது பண்பாட்டின் அடையாளம்.

இந்த பண்பாட்டை காப்பது நமது கடமை. பொதுவாக கைத்தறி துணிக்கு, வாரணாசி புகழ்பெற்றதாகும். இதுபோன்று இந்திய கைவினைப் பொருட்களுக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு.

பீகார் மாநிலத்தில் மீட்டெடுக்கப்பட்ட கொத்தடிமைகள் இன்று கைத்தறித் தொழிலில் ஈடுபட்டு ஆண்டுதோறும் பல கோடி மதிப்பிலான ‘துசார்’ வகை சேலைகளை விற்பனை செய்துவருகின்றனர்.

இவ்வகை ‘துசார்’ புடைவைகளை உற்பத்தி செய்வதில் சவாலாக இருப்பது முறையான பட்டுக் கூடுகள் தொடர்ந்து கிடைக்காததுதான். இதுபோன்று பல்வேறு மாநிலங்களில் உள்ள கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுக்கு தனித்தனி விஷேசம் உண்டு.

அந்த வகையில், தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு, இந்த அத்துனை பாரம்பரியமும் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் குவிக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சி விற்பனைக்கு தஸ்க்கர் நிறுவனம் ஏற்பாடு செய்து உள்ளது.

இந்த நிறுவனம் இந்தியா முழுக்க பிரசித்த பெற்ற நிறுவனமாகும். இந்த மாபெரும் கண்காட்சி விற்பனை கடந்த 3&ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாளாகும். இந்த கண்காட்சி அரங்கில், நாடு முழுவதிலும் உள்ள ‘121 ஸ்டால்கள்’ (கடைகள்) அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்டால்களில் ரக ரகமாய் சேலைகள், சுடிதார்கள், கைவினை பொருட்கள், வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் என அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

பொதுவாக இந்திய கைத்தறி துணிகள் மற்றும் கைவினைப் பொருட்கள் சர்வதேச பாரம்பரியம் கொண்டது. இதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் இந்தியர்களின் மேன்மை நாகரிகத்தை குறிக்கும்.

இந்த பாரம்பரிய தொழிலில் ஈடுபடும் கைவினை கலைஞர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் நிலையிலேயே உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இதுபோன்ற கண்காட்சி மற்றும் நேரடி விற்பனை நடத்தப்படுகிறது.

இந்த விற்பனை கண்காட்சியில், கருப்பு அச்சு (பிளாக் பிரிண்ட்) துணி வகைகள், அச்சு மற்றும் பாரம்பரிய போர்வை விரிப்புகள், பல்வேறு விதமான அளவுகளில் படுக்கை விரிப்புகள், ராஜஸ்தான் சங்கநேரி புடைவை வகைகள், மேற்கு வங்கம் கந்தா வேலைபாடுகளுடன் நெய்யப்பட்ட புடைவைகள், காஷ்மீர் பாஷ்மினா சால்வைகள், சத்திஷ்கர் சேலைகள், போச்சம்புளி புடைவைகள், இக்கட் சுடிதார் மற்றும் துணி வகைகள், உத்தரப் பிரதேசம் போர்வை விரிப்புகள், தலையணை மற்றும் குஷன் உறைகள், மத்தியப் பிரதேசம் மகேஸ்வரி சேலைகள், அனைத்து வகையான கதர் துணி வகைகள், ஓடிசா சம்பல்பூரி சேலைகள், பீகார், குஜராத் துணி வகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் இந்த கண்காட்சியில் விற்பனைக்கு குவிந்து உள்ளன.இதுமட்டுமின்றி அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ராஜஸ்தான் மரச்சாமான்கள், வண்ணமிகு சிற்பங்கள், லக்னோ நீல ‘பாட்ரி’ பொருட்கள், மணிப்பூர் கருப்பு கற்கள், எம்.பி. பிராஸ் பொருட்கள், ஜோத்பூர் வெண்மை சிற்பங்கள், தமிழகத்தின் பித்தளை சிற்பங்கள், பாண்டிச்சேரி பேப்பர் சிற்பங்கள், கர்நாடகா சென்னபட்டிணா விளையாட்டு சாமான்கள், ஒரிசா பசாரா வேலைப்பாடுகளுடன் கூடிய சிலைகள் விற்பனைக்கு உள்ளன.

இதுமட்டுமின்றி வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் குவிந்துள்ளன. இந்த கண்காட்சிக்கு பொருட்கள் வாங்க வந்திருந்த நடராஜன், சரளா தம்பதியர் கூறும்போது, ”கைத்தறி, கைவினை பொருட்கள் சிறப்பாக உள்ளது. காஷ்மீர் சால்வைகளை வாங்கி உள்ளேன். மேலும் வீட்டிற்கு உபயோகமான சில பொருட்களையும் வாங்க உள்ளேன்.” என்றனர்.

பொங்கலை முன்னிட்டு, இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலத்தின் சிறப்பு வாய்ந்த கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குவிந்து உள்ளது. இந்த கண்காட்சி விற்பனை நாளையுடன் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here