Home தலையங்கம் தமிழகத்திற்கு லோக் ஆயுக்தா அவசியம்

தமிழகத்திற்கு லோக் ஆயுக்தா அவசியம்

34
0
SHARE

இந்தியா எதிர்காலத்தில் வல்லரசாக மாற வாய்ப்புள்ள நாடு. ஏனெனில் இங்கு எல்லா வளங்களும் உள்ளன. குறிப்பாக மனித வளம். ஆனால் இந்த வளங்கள் அனைத்தும் அதிகார மட்டத்தால் உள்ளவர்களால், லஞ்ச பேர்வழிகளால் சுரண்டப்படுகிறது.

நாட்டில் பெரும்பான்மை மக்கள் வறுமையில் வாடுவதற்கும் இந்த அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம், லாவண்யம் ஊழல் தான் பிரதான காரணம். இதனை வேரோடும் வேரடி மண்ணொடும் நாட்டில் இருந்து அகற்றுவது நம் கடமை.

அருண் செட்டி குப்தா கமிட்டி, நாட்டில் 74 சதவீதத்தினர் வறுமையில் வாடிவதாக தெரிவித்து உள்ளது.

இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்கு முன்னதாக நாம் அனைவரும் கல்லாமை என்னும் இருட்டில் இருந்து வெளியே வர வேண்டும். ஊழலை ஒழிக்க வாய்கிழிய கத்தினால் மட்டும் போதாது.

அதற்கான சட்டங்களை இயற்றி அமல்படுத்த வேண்டும். லோக்பால் மசோதாவிற்கு முன்னதாக நம் நாட்டில் பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் உள்ளது. இச்சட்டம் நமது அண்டை மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகத்திலும் உள்ளது.

ஆனால் தமிழகத்தில் இல்லை. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படாதது பற்றி முதல்வர் பழனிச்சாமி அளித்த விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

2013ம் ஆண்டின் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளதாகவும், அதனால் முதன்மை சட்டத்துடன் முரண்பாடு ஏற்படாத வகையில், மத்திய அரசு செய்யவுள்ள திருத்தங்களை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கான லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதாவது அலைகள் ஓய்ந்த பின்னர் கடலில் குளிக்கலாம் என்கிறார். இது எப்படி சாத்தியமில்லையோ, அதேபோல் தமிழகத்தில் லோக் ஆயுக்தா வருவதும் சாத்தியமில்லை என்பது தான் இதன் பொருளாகும்.

லோக்பால் சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தங்கள் என்னென்ன? என்பதை மத்திய அரசு தெளிவாகக் கூறிவிட்டது. அவை தொழில்நுட்பம் சார்ந்தவையே தவிர, லோக்பால் சட்டத்தின் அடிப்படையை மாற்றும் தன்மை கொண்டவை அல்ல.

லோக்பால் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகிவிட்ட நிலையில், அதற்காக காத்திருப்பதாகக் கூறி லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்ற மறுப்பது நியாயமல்ல.

மத்திய அரசின் சட்டத்திற்கு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் என்று பெயரிடப்பட்டாலும் அதிலுள்ள பிரிவுகள் லோக்பால் தொடர்பானவை மட்டுமே. லோக் ஆயுக்தா அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்? அதன் அதிகார வரம்பு என்ன? என்பது குறித்தெல்லாம் அச்சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

லோக் ஆயுக்தா மாநில அளவிலான அமைப்பு என்பதால் அதன் அதிகாரத்தை தீர்மானிக்கும் உரிமை மாநில அரசிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டது. அதன்படி இயற்றப்படும் லோக் ஆயுக்தா அமைப்பு சட்டம் லோக்பால் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானதாக இருந்தாலும் கூட அதில் எந்தவித சிக்கலும் இல்லை.

அதுமட்டுமின்றி, லோக்பால் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக காத்திருக்காமல் அதில் இடம்பெற்றுள்ள அம்சங்களை செயல்படுத்தும்படி நீதிபதி ரஞ்சன் கோகாய், நவின் சின்ஹா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 27.04.2017 அன்று தீர்ப்பளித்துள்ளது.

இவ்வளவுக்குப் பிறகும், 21 மாநிலங்களில் நடைமுறையில் உள்ள லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வர ஆட்சியாளர்கள் தயங்குகிறார்கள் என்றால், அதற்கு காரணம் என்ன.?

எனவே காரணங்களை இனியும் கூறிக் கொண்டிருக்காமல் வரும் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.