Home சிறப்புச் செய்திகள் துரியன் பழம்

துரியன் பழம்

24
0
SHARE

உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் நேரடியாக தரக்கூடியவை பழங்கள் மட்டுமே. தினம் ஒரு பழம் சாப்பிடுவோர்களை நோய்கள் எளிதில் அணுகாது.

பழங்காலத்தில் காடுகளில் தவம் செய்த முனிவர்களும், ரிஷிகளும், சித்தர்களும் பழங்களையும் நீரையுமே அருந்தி வந்துள்ளதாக பல ஏடுகளின் மூலம் அறிகிறோம். பழங்கள் உடலின் சீரண உறுப்புக்களை பலப்படுத்தி, எலும்புகளுக்கு வலுவூட்டி, இரத்தத்தை சுத்தப்படுத்தி என்றும் இளமையைத் தரக்கூடியவை.

சிலர் பழங்களை அப்படியே சாப்பிடுவதில்லை. ஜூஸ் செய்து அருந்துகின்றனர். அப்படியே சாப்பிட முடியாத பழங்களை வேண்டுமானால் ஜூஸ் செய்து சாப்பிடலாம். உதாரணமாக எலுமிச்சை பழம். எலுமிச்சம் பழத்தை அப்படியே சாப்பிட முடியாது. எனவே அதனை சாறு எடுத்து நீர், சர்க்கரை கலந்து சாப்பிடுகின்றனர். அதற்காக எல்லா பழங்களையும் ஜூஸ் செய்து சாப்பிடுவது நல்லதல்ல. அப்படி ஜூஸ் செய்து சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்காமல் போகிறது. பழங்களை பொதுவாக மென்று சாப்பிடுவதே நல்லது. நன்கு கனிந்த பழங்களே சாப்பிட உகந்தவை.

நாம் ஒவ்வொரு இதழிலும் பழங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முக்கனியான பலாவுக்கு ஈடு இணையாக கூறப்படுகின்ற துரியன் பழத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

*துரியன் பழம் பலாப்பழத்தைப் போல் இருக்கும். பலாப் பழத்தை விட சற்று சிறியதாக இருக்கும். வெளிப்புறத்தில் கூர்மையான முட்கள் இருக்கும். இது பலாப் பழத்தைப் போலவே சுளைகளைக் கொண்டது.

*துரியன் பழம் இந்தியாவில் கேரள மலைப்பகுதியில் விளைகிறது. ஆசியாவில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை போன்ற இடங்களில் விளைகிறது. மலேசியாவிலும், தாய்லாந்திலும் அதிகம் விளைகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் இவை அதிகம் வளர்கின்றன.

*துரியன் பழம் அதிக மருத்துவத் தன்மை கொண்ட பழங்களுள் ஒன்று. இதன் மணம் ஒருவித வெறுக்கத்தக்க நாற்றத்தைக் கொண்டதுபோல் இருக்கும். ஆனால் சாப்பிட ஆரம்பித்தால் ஒருவர் முழுப் பழத்தையும் சாப்பிடும் அளவுக்கு சுவை கொண்டது.

*ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இப்பழத்திற்கு ஏற்ற சீசனாகும். மலேசியா போன்ற நாடுகளில் எப்போதும் சீசன் உண்டு

*சீனர்கள் சாப்பிடும் முக்கிய பழங்களில் துரியன் பழமும் ஒன்று.

உடல் வலுவடைய:

சிலருடைய உடல் சத்து குறைவினாலும், மது, புகை போதை போன்ற தீய பழக்கங்களினாலும் உடல் வலுவிழந்து இருக்கும். இதனால் இவர்களின் உடல் நோய்களின் கூடாரமாக மாறிவிடுகின்றது.

இவர்கள் வாரம் இருமுறை துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ரத்தம் சுத்தமடைய:

ரத்தத்தில் அதிக கொழுப்பு பொருட்கள் படிவதால் ரத்த அடைப்பு ஏற்பட்டு ரத்தம் அசுத்தமாகிறது. இந்த கொழுப்பு சத்தை கரைத்து கலோரிகளாக மாற்றி ரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.

நரம்பு புத்துணர்வடைய:

தற்காலத்தில் பெரும்பாலானோர் நரம்பு தளர்வு நோயால் பாதிக்கப்படுகின்றனர். எரிச்சல், கோபம், மன அழுத்தம், மன உளைச்சல், போதிய உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் நரம்புகள் எளிதில் பலவீனமடைகின்றன. இந்தக் குறையை போக்க துரியன் பழம் மிகவும் பயன்படும்.

கிடைக்கும் காலங்களில் துரியன் பழத்தை வாங்கி சாப்பிட்டுவந்தால் நரம்புகள் புத்துணர்வடையும்.

கருப்பை பலப்பட:

கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் சில வாரங்களில் கலைந்துவிடும். இத்தகைய பிரச்சனை உடைய பெண்கள் துரியன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். கருப்பை பலம் பெறும்.

மலச்சிக்கல் நீங்க:

மலச்சிக்கலை நோயின் தலைவாசல் எனக் கூறலாம். மலச்சிக்கலை நீக்கினாலே நோயின்றி நூறாண்டு வாழலாம். மலச்சிக்கலை நீக்கும் குணம் துரியன் பழத்திற்கு உண்டு. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியைக் ஏற்படுத்தும்.

கண்களின் பார்வை நரம்புகள் பலப்படும். தோலை பாதுகாத்து சருமத்தை மிளிரச் செய்யும். எனவே கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு பயனடையலாமே.