Home சுடச்சுட 14ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவு: தமிழ்நாடு பொன்விழா கொண்டாடப்படும்முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

14ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவு: தமிழ்நாடு பொன்விழா கொண்டாடப்படும்முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

3
0
SHARE

சென்னை, ஜன.12&

தமிழ்நாடு என்று பெயர்வைத்து 50 ஆண்டுகள் ஆவதால் பொன்விழா ஆண்டாக  கொண்டாடப்படும் என்று  முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110 ன் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:&

தமிழ்நாட்டின்  வரலாறும்,  தமிழ்  மக்களின் பண்பாடும்,  மிகவும் தொன்மை வாய்ந்தது. நம் தமிழ்நாடு. நம்மோடு ஆந்திரம், கர்நாடகம், கேரளம் இணைந்து, பிரசிடன்சி ஆப் மெட்ராஸ் என்று ஆங்கிலத்திலும், சென்னை மாகாணம் என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்தநிலையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மாநில பிரிவினை ஏற்படுத்தப்பட்ட பிறகு,சென்னை    மாகாணம் என்னும் பெயரை மாற்றித் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்படவேண்டும்  என்று அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் அரசின் முன் 1956, ஜூலையில் கோரிக்கையினைக் தியாகி சங்கரலிங்கனார் முன் வைத்தார்.

அண்ணா  தலைமையிலான அரசு அமைந்தவுடன், 1967ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்திற்கு  தமிழ்நாடு என்று பெயர் சூட்ட,சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக,1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ம் நாள்  தமிழ்நாடு என்று நமது மாநிலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது.

அண்ணா  2வது உலகத் தமிழ் மாநாட்டினையும், எம்.ஜி.ஆர். 5&வது உலகத் தமிழ் மாநாட்டினையும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா 8&வது உலகத் தமிழ் மாநாட்டினையும் சிறப்பாக நடத்தி தமிழின் பெருமையையும், தொன்மையையும் உலகறிய செய்தனர்.

எம்.ஜி.ஆர். தமிழுக்கென்று தனிப் பல்கலைக்கழகத்தை தஞ்சாவூரில் நிறுவினார். மதுரையில்உலகத் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா.தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையிலும், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவித்தார்.உலக நீதி நூலான திருக்குறளை அதிக மக்கள் பேசும் சீன, அரபு மற்றும் கொரிய மொழிகளிலும்,பாரதியார்,பாரதிதாசன் பாடல்கள் மற்றும் அவ்வையாரின் ஆத்திச் சூடி  ஆகியவை சீன மற்றும் அரபு மொழிகளிலும், மொழி பெயர்த்து தமிழர்களின் பெருமைகளை உலகறியச் செய்தனர். தமிழ் அறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழுக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில்,  தமிழ் மொழியின் தொன்மை, இலக்கியம், இலக்கணம் மற்றும் பண்பாடு தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டு, தமிழ் மொழியின் சிறப்பினை ஆவணப்படுத்தி உலகெங்கும் கொண்டு செல்ல,அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசு, 10 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.

வரும்ஜனவரி 14ம் நாள், வரலாற்று சிறப்பு மிக்க நமது மாநிலம் தமிழ்நாடு  என்ற பெயரோடு  50&வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு தமிழ்நாடு பொன் விழா ஆண்டாக  அரசு  கொண்டாட முடிவு செய்துள்ளது. நம் கண் போன்றதமிழ் மொழி மற்றும்  தமிழர்களின் பெருமையை பறை சாற்றும் வகையில், கலை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி போன்ற நிகழ்ச்சிகள் சென்னையிலும்,அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்தப்படும். தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இளம் தமிழ் ஆய்வாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, சென்னையில் நடைபெறும் நிறைவு விழாவில் இவர்கள் அனைவரும் சிறப்பிக்கப்படுவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசு தமிழுண்டு, தமிழ் மக்களுண்டு இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு என்ற பாவேந்தரின் வரிகளுக்கேற்ப தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும் கண்ணின் மணி போல தொடர்ந்து  காத்து வரும்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here