Home தலையங்கம் காவிரிநீர்பங்கீடுக்கு விடிவு பிறக்குமா…?

காவிரிநீர்பங்கீடுக்கு விடிவு பிறக்குமா…?

19
0
SHARE

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டம் தலைக்காவேரி என்ற இடத்தில் மேற்கு சம மலையில் 4400 அடி உயரத்தில் உற்பத்தியாவது தான் இந்த காவிரி ஆறு. இந்த ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் சூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாக தமிழகத்தின் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாக பூம்புகார் பகுதியில் உள்ள வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. காவிரி ஆறுக்கு கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, லட்மண தீர்த்தம், ஆர்க்காவதி, சிம்சா, சொர்ணவதி ஆகியவை துணை ஆறுகள் ஆகும். இதில் பவானி, அமராவதி, நொய்யல் ஆகியவை தமிழகத்தில் பாயும் துணை நதிகள் ஆகும்.

கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் காவிரி நதி நீர் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. அங்கிருந்து மேட்டூர் அணையை அடைகிறது.  தமிழக காவிரி பாசனம் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டா மாவட்டங்களாகும்.

இந்த காவிரி நதிகளை பங்கிடுவதில் தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் வழங்குவதில்லை. இதற்காக தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் இடையே 20 ஆண்டுகள் மேலாக பிரச்சனை நிலவி வருகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் 2013ம் ஆண்டு மத்திய அரசு காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தை அமைத்தது. அந்த தீர்ப்பாயம் மாநிலங்களிடையே காவிரி நீர் பங்கிடுவது தொடர்பாக 2007ம் ஆண்டு தீர்வு ஒன்றை அறிவித்தது.

ஆனால் அதற்கு எதிராக தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த விசாரணையின் முடிவில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வெளியிட்ட செய்திக்குறிப்பில், காவிரி நதிநீர் விவகாரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதற்கு முடிவுகட்டும் வகையில் அடுத்த 4 வாரங்களுக்குள் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் தீர்ப்பளிக்கப்படும். அதுவரை இந்த விவகாரத்தில் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’’ என உத்தரவிடப்பட்டுள்ளது.

20 ஆண்டுகள் தமிழகம் தண்ணீருக்காக அல்லோலப்பட்டுவிட்டது. வறட்சி காரணமாக ஏராளமான விவசாயிகள் உயிரிழப்பையும், போராட்டங்களையும், ஏக்கம், சோகங்களையும் சந்தித்திருக்கிறது. இன்றைக்கு விவசாயிகள் டெல்லிக்கு சென்று போராடும் அவல நிலையும் வந்திருக்கிறது.

கர்நாடக அரசு தேவைக்கு அதிகமான தடுப்பணைகளை கட்டிக்கொண்டடே செல்கிறது. நெல் விளைச்சலையும் அதிகப்படுத்திவிட்டது. ஆனால் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை மட்டும் கொடுக்க மறுக்கிறது. இதற்காக நாம் போராடினால் கர்நாடகாவில் உள்ள தமிழர்களையும், தமிழர்களின் நிறுவனங்களையும் சூரையாடிவிடுகின்றனர்.

இதேநிலை தொடர்ந்து நீடித்தால், தமிழகத்தின் விவசாயம் நடைபெற்றது என்று நமது சந்ததியருக்கு கூறமட்டுமே முடியும். இந்தநிலை வரவே கூடாது என்பதில் தமிழகம் உறுதியாக இருக்க வேண்டும். கன்னித்தீவுபோல் முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பிரச்சனைக்கு நீதிமன்றம் நிரந்தர முடிவை அறிக்கும் என்று நம்புகிறோம்.