Home தலையங்கம் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சல்

வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சல்

14
0
SHARE

இன்று தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதிலுமே மர்மக்காய்ச்சலும் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முதல் காரணம் சுகாதாரமின்மையே. இன்று நாடுமுழுவதும் குப்பை கழிவுகளாலும், வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீராலும் நிலமும், நிலத்தடி நீரும், ஆறுகள், குளங்களும் மாசு அடைந்து கொசுக்களை உற்பத்தி செய்யும் கூடாரமாக மாறி வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி உள்ளன. இப்போது மழைக்காலம் என்பதால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. தமிழகத்தில் டெங்கு பாதிப்பை தடுக்க வேண்டும் என்பதற்காக காலி இடங்களில் தண்ணீர் தேங்கினால் இடத்தின் உரிமையாளருக்கு இந்திய தண்டனை சட்டம் 269&ம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குறைந்தது 6 மாதம் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க சுகாதாரத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

காலி வீட்டுமனை, மற்றும் திறந்த நிலையில் உள்ள நீர் தொட்டிகளில் டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் கொசுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அந்த உத்தரவு கூறுகிறது. வீட்டில் நொச்சி செடி வைத்தால் கொசு வராது என்று அரசு கூறியதால் பல வீடுகளில் நொச்சி செடிவைத்தனர். ஆனால் இன்று அந்த நொச்சி செடியிலேயே கொசு வாசம் செய்கிறது.

பல பகுதிகளில் மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் கொசு மருந்து அடிக்கின்றனர். லாரியில் வந்து புகை போடுகின்றனர். இதற்கெல்லாம் இப்போது கொசுக்கள் சாவதில்லை. மருந்தில் கலப்படமா…? அல்லது மருந்தில் வீரியம் இல்லையா…? என்று தெரியவில்லை. மருந்து அடித்தபின்தான் கொசுக்கள் புத்துணர்ச்சி பெற்று உற்சாகமாக வாழ்கின்றன.இந்த கொசுக்கள் ஒழிந்தாலே டெங்கு காய்ச்சல் கட்டுப்படும்

ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் குப்பைகளை முறையாக அகற்றவும், கழிவுநீரை தேங்க விடாமல் பார்த்துக்கொண்டாலே பல வித நோய்கள் குறையும். நல்ல வீரியமுள்ள கொசு மருந்துகளை பயன்படுத்தி கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட நகராட்சிகள், மாநகராட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here