Home சுடச்சுட நிலக்கரி விலை 10 சதவீதம் உயர்வு மின்சார கட்டணம் உயருமா?

நிலக்கரி விலை 10 சதவீதம் உயர்வு மின்சார கட்டணம் உயருமா?

26
0
SHARE

கொல்கத்தா, ஜன.10&

நிலக்கரி விலை 10 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் நாட்டில் மின்சார கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசுத்துறை நிறுவனமான இந்திய நிலக்கரி நிறுவனம் எரிசக்தி மற்றும் எரிசக்தி சாரா நுகர்வோர்களுக்கான எரிபொருள் அல்லாத நிலக்கரி விலையை நேற்று முதல் சராசரியாக 10 சதவீதம் உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு மூலம், இந்திய நிலக்கரி நிறுவனத்திற்கு இறுதிக் காலாண்டில் 1,956 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். நாட்டின் வடகிழக்கு நிலக்கரிச் சுரங்கங்கள் (நார்த் ஈஸ்டர்ன் கோல் ஃபீல்டு) உள்ளிட்ட இந்திய நிலக்கரி நிறுவனத்தின் அனைத்து துணை நிறுவனங்களும் நிலக்கரியின் விலையை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில மாதங்களில் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியில் இருந்து மீளவே நிலக்கரி விலை 10 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதாக இந்திய நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் அனல் மின்சார விலை உயரும் அபாயம் உள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனம், நிலக்கரி விலையை கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு 6.3 சதவீதம் மட்டுமே உயர்த்தியது. ஆனால் தற்போது 10 சதவீதம் உயர்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் முதல் நிலக்கரியை கையாள்வதற்கு ஒரு டன்னுக்கு ரூ. 50 வீதம் லெவி வசூலும் நடைபெறுகிறது. நிலக்கரியை கையாண்டு சுரங்க வாயிலுக்கு விற்பனைக்கு கொண்டுவருவதற்கு ஆகும் செலவை ஈடுகட்ட லெவி வசூலிக்கப்படுகிறது.

இதன் மூலம் பொதுத்துறை நிலக்கரிச் சுரங்க நிறுவனங்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடி வருவாய் ஈட்டி வருகின்றன. இந்திய நிலக்கரி நிறுவனத்தின் விலையேற்ற அறிவிப்பைத் தொடர்ந்து மும்பை பங்கு சந்தையில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.67 சதவீதம் உயர்ந்துள்ளது.