Home தலையங்கம் போக்குவரத்து பிரச்சினைகளும், தீர்வுகளும்

போக்குவரத்து பிரச்சினைகளும், தீர்வுகளும்

35
0
SHARE

பண்டைக்கால தமிழர்களின் போர் தர்மம் சூழ்ச்சி, வஞ்சகம், கெடுத்தல் ஆகியன இல்லாத நேரானதாக இருந்தது. காலை முரசறையத் தொடங்கும் போர், மாலை முரசறைய நிறுத்தப்படும். முழு இரவு ஓய்வுக்கு பின்னர், மீண்டும் போர் தொடங்கப்படும்.

எதிரிகளுக்கும் இரங்கும் நெஞ்சம் உடையதாக, அவர்களுக்கும் தக்க வாய்ப்பினை அளிப்பதாக அமைந்திருக்கும். நிராயுதபாணியுடன் போர் புரிவதை இழுக்கு என கருதினர். யுத்த களத்தில் நிராயுதபாணியாக நின்ற ராவணனைஇன்று போய், நாளை வாஎன்று ராமபிரான் அனுப்பியதை கம்பர் தமிழர் பண்பாட்டின் உச்சம் என்று வர்ணித்து இருப்பார்.

தமிழர்களின் போர்க்களம் என்பது கொலைக்களமாக இல்லாமல், துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது. சங்க காலத்தில் நிலவிய போர்த்தூய்மை, இந்த காலத்தில் என்ன ஆகிற்று. தமிழன் மறந்து போனானா? இல்லை கடந்து சென்று விட்டானா? சமீபத்தில் தமிழகத்தில் அறங்கேறிய போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் இவ்வாறான கேள்வியை மனதில் எழ செய்கிறது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 4&ந் தேதியில் இருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் கோரிக்கை நியாயமானதாகவே இருக்கட்டும்.

பொதுமக்களை பாதிக்கும் வகையில் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தது சரியா.? அரசிடம் இருந்த கஜானாவையா நாங்கள் கேட்டோம். எங்களுக்கு கிடைக்க வேண்டிய, எங்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பணத்தை தானே கேட்டோம்.?

இது அரசின் தவறுதான். ஆனால் இந்த அரசு மட்டுமா இந்த தவறை செய்தது? தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ரூ.1,138 கோடியை தவணை முறையில் செலுத்த இந்த அரசு முன்வந்து உள்ளதே.? அதன்படி முதல் தவணை தொகையும் கொடுக்கப்பட்டு விட்டதே.!

மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் யாருக்கு நஷ்டம். எந்த எம்.எல்.., எம்.பி., உயர் அதிகாரிகள், கார், வாகனம் என்று வசதி படைத்தவர்கள் பாதிக்கப்பட்டார்களா? இல்லை. தினந்தோறும் வேலைக்கு செல்லும் கூலிகள், மாதச் சம்பளத்தை நம்பி குடும்பத்தை நடத்தும் நடுத்தர மக்கள் தானே. கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் தவிக்கின்றனர்.

மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் ஏழை மக்கள் அல்லோலப்படுகின்றனர். இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல், ஏதேச்சதிகார போக்கில் போக்குவரத்து சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளன.

மேலும் இந்த போராட்டத்திற்கு தடை விதித்த நிலையிலும், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இது சட்டத்தை மீறும் செயல். இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாட்டையும் ஏற்க முடியாது. அதற்காக போக்குவரத்து தொழிலாளர்களின் செயலும் நியாயம் என்று பேசிவிட முடியாது.

முன் அறிவிப்பு இல்லாத போராட்டத்தை ஏற்க முடியாது. ஆதலால் இவ்விவகாரத்தில் இனியும் காலம் தாழ்த்தக் கூடாது. இது தேவையில்லாத விபரீதத்திற்கு வழிவகுத்து விடும். போக்குவரத்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், சாதாரண மக்களின் இன்னல்களை கவனத்தில் கொண்டு தீவிர நடவடிக்கைகளை எடுப்பது மாநில அரசின் தலையாய கடமையாகும்.மேலும் போக்குவரத்து என்பது மக்களின் அடிப்படை தேவை. இதனை சரிவர நிர்வகிக்க முடியவில்லை என்று அரசு, அதனை தனியாருக்கு ஒப்படைக்கலாமே.? அவ்வாறு தனியாரிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் இவ்வாரான குழப்பங்கள் தீர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

இல்லை இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மாநிலத்தில் உள்ள எதிர்கட்சிகள் தான் காரணம், அவர்கள் தான் இதுபோன்ற பிரச்சினைகளை ஆளும் கட்சிக்கு எதிராக தூண்டி விடுகிறார்கள் என்றால், இந்த தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளின் கைப்பாவையாக செயல்படுமேயானால், அந்த சங்கங்களை தடை செய்தால் என்ன?

இதுவும் பிரச்சினைக்கு தீர்வாகாது என்றால், மாநிலத்தில் ஐ.ஆர்.டி. பயிற்சி பெற்ற நடத்துனர், ஓட்டுனர்கள் பலர் உள்ளனர்கள். அவர்களிடம் எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் முறையாக அரசு வேலை வழங்கலாமே. இதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.