Home தலையங்கம் தற்காலிகம்… தர்மசங்கடத்திற்கா…?

தற்காலிகம்… தர்மசங்கடத்திற்கா…?

10
0
SHARE

ஏழை, எளிய மக்களின் முக்கிய போக்குவரத்தாக திகழ்வது சாலை போக்குவரத்து தான். அதிலும் அரசு இயக்கும் பேருந்துகளை நம்பித்தான் ஏராளமான மக்கள் பணிக்கும், வெளியூர்களுக்கும் சென்று வருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் தான் ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4&ந் தேதியில் இருந்து தங்களது வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர். இதனால் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் தற்காலிக போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்கள் முறையான பயிற்சி பெற்றார்களா என்பது சந்தேகம் தான். அந்த அளவுக்கு அவர்கள் பேருந்து இயக்கும் நடைமுறை உள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட விரும்பும் பலரும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் தற்காலிக டிரைவர்களை வைத்து விருத்தாசலத்தில் இருந்து ஆண்டிமடம் வரை இயக்கப்பட்ட அரசு பேருந்து பைக் மீது மோதியது. இதில் பயணித்த டேவிட் சியோன் (35), இவரது உறவினர் மற்றும் 7 வயது மகள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் டேவிட் சியோன் உயிரிழந்தார்.

இதேபோல் தற்காலிக டிரைவர் இயக்கிய கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு வந்த அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து கடலூர் மாவட்டம் பின்னலூர் வளைவு பகுதியில் சென்டர் மீடியனில் மோதி கண்ணாடி உடைந்தது. மேலும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இருந்து கோவிலூருக்கு சென்ற டவுன் பஸ்சை தற்காலிக டிரைவர் ஓட்டினார். அவர் இருங்கால் கிராமத்தில் டி.வி.எஸ். மொபட் மீது மோதினார். இதில் மொபட்டில் சென்ற விவசாயி படுகாயம் அடைந்தார். இதை கண்டு டிரைவர் ஓட்டம் பிடித்தார்.

இதேபோல் சென்னை வள்ளலார் நகரில் இருந்து கோயம்பேட்டுக்கு இயக்கப்படும் 48 சி மாநகர பஸ்  கோயம்பேடு 100 அடி சாலையில் சென்ற போது குண்டும், குழியுமான சாலையில் சிக்கி டயர் பஞ்சரானது. அப்போது தாறுமாறாக ஓடிய பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மயிலாப்பூரில் தற்காலிக டிரைவர் இயக்கிய பஸ்சும் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளோடு அந்த வாலிபர் பஸ்சுக்கு அடியில் சிக்கினார். பெசன்ட் நகரில் இருந்து பெரம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த 29சி மாநகர பஸ் சாலையோரமாக நடந்து சென்ற வாலிபர் மீது மோதியது. இதில் அந்த வாலிபர் கீழே விழுந்தார். அவரது கை முறிந்தது. ஆனால் பஸ் டிரைவர் நிற்காமல் சென்று விட்டார்.

இப்படி ஒவ்வொரு விபத்துக்களையும் பார்த்த மக்கள் பேருந்தில் பயணம் செய்வதை நினைத்து பீதியில் உரைந்துள்ளனர். இதனால் முடிந்தவரை பேருந்தில் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர். நேற்று 5&வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இது மேலும் நீடித்தால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட செல்ல உள்ள மக்கள் பீதியில் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடி வருகின்றனர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைக்கு ஒரு முடிவு பிறக்காவிட்டால் இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு முடிவே பிறக்காது என்பதே சாமானிய மனிதர்களின் கருத்தாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் தற்காலிக பேருந்து இயக்குபவர்களால் தர்மசங்கடமான நிகழ்வுகளை தான் சந்திக்க நேரிடும்….!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here