Home அரசியல் ரஜினிக்கு எதிராக போருக்கு தயார்: தமிழகத்தை ஆளும் தகுதி தமிழருக்கு மட்டுமே உள்ளதுசீமான் ஆவேசம்

ரஜினிக்கு எதிராக போருக்கு தயார்: தமிழகத்தை ஆளும் தகுதி தமிழருக்கு மட்டுமே உள்ளதுசீமான் ஆவேசம்

10
0
SHARE

சென்னை, ஜன. 9&

ரஜினிக்கு எதிராக போருக்கு தயார் என்றும் தமிழருக்கு மட்டுமே தமிழகத்தை ஆளும் தகுதி உள்ளது என்றும் சீமான் அவேசமாக கூறினார்.

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டை தமிழர் அல்லாதோர் இனியும் ஆள்வதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கடந்த பல ஆண்டுகளாக குரல் எழுப்பி வருபவர் சீமான். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான இவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம் என்று தொடர்ந்து கூறி வந்தார்.

கர்நாடகாவை சேர்ந்த ரஜினி தமிழ் மண்ணை ஆள நினைக்கக் கூடாது. அதனை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது என்று குரல் எழுப்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக ரஜினி அறிவித்துள்ளார்.

வருகிற சட்டசபை தேர்தலில் நம் படையும் களத்தில் இருக்கும் என்று கூறிய ரஜினி தனது மன்றத்தை பலப்படுத்தும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

ரஜினியின் இந்த அரசியல் பிரவேசத்தை நாம் தமிழர் கட்சி எப்படி எதிர்கொள்ளப்போகிறது? என்பது பற்றி சீமானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

தமிழ் மண்ணில் யார் வேண்டுமானாலும் வாழலாம். நன்றாக நீடிக்கலாம். ரஜினி இன்னும் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நடிக்கட்டும். நாங்கள் அதனை ரசிப்போம்.

ஆனால் பச்சைத் தமிழன் என்று கூறிக்கொண்டு தமிழ்நாட்டை ஆள நினைக்ககூடாது. தமிழ் மண்ணை இனி வேறு மாநிலத்தவர் ஆள்வதற்கு அனுமதிக்க மாட்டோம். எங்களை நாங்களே ஆண்டு கொள்வோம். ஆளுகிற உரிமை தமிழருக்கு மட்டுமே உண்டு.

அறிக்கை விடுவதற்கும், போராட்டம் நடத்துவதற்கும் பலர் இருக்கிறார்கள் என்று ரஜினி, கூறி இருப்பது மக்கள் பிரச்சினைக்காக போராடுபவர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும். தமிழர் நலன் சார்ந்த எந்த போராட்டத்திலாவது ரஜினி தன்னை ஈடுபடுத்திக் கொண்டது உண்டா? இப்போது தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

ரஜினி தனது சொந்த மாநிலத்தில் போய் தான் ஒரு பச்சைத் தமிழன் என்று கூறிவிட்டு அப்புறம் இங்கு வரட்டும். எந்த சூழ்நிலையிலும் அதுபோன்று அவரால் கூற முடியாது.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்க்கும். தேர்தல் களத்தில் நாம் தமிழரா? ரஜினியா? என்பதை பார்த்துவிடலாம். அவரோடு மோதுவதற்கு, போருக்கு தமிழ் பிள்ளைகள் தயாராகவே இருக்கிறார்கள்.

ரஜினி வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என்கிற எங்களது எதிர்ப்பு கோஷத்தை தமிழக அரசியல் களத்தில் வேகமாக முன்னெடுத்துச் செல்வோம். ரஜினிக்கு எதிரானநாம் தமிழர்கோஷத்தால் நிச்சயம் தேர்தல் களத்தில் அவரை வீழ்த்திக் காட்டுவோம். தமிழர்களின் உரிமையை இனிமேலும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

ஆந்திர காட்டுக்கு சென்றால் தமிழர்களை மட்டும் குறி பார்த்து சுடுகிறார்கள். மீன் பிடிக்க செல்லும் தமிழனும் சிங்களர்களின் துப்பாக்கி குண்டுக்கு இறையாகிறான். தண்ணீர் கேட்டால் கர்நாடகத்தில் வாழும் தமிழனை அடிக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி களப் போராட்டத்தில் தீவிரமாகி உள்ளது. வாழ வந்தவர்கள் எல்லாம் எங்களை ஆண்டது போதும். இதற்கு மேலும் ஒருவரை அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு சீமான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here