Home மற்றவை இந்திய, தமிழக மீனவர்களின் உரிமையை நிலை நாட்டிட இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்போம்!கவர்னர் பன்வாரிலால் அறிவிப்பு

இந்திய, தமிழக மீனவர்களின் உரிமையை நிலை நாட்டிட இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்போம்!கவர்னர் பன்வாரிலால் அறிவிப்பு

28
0
SHARE

சென்னை, ஜன. 9&

இந்திய, தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டிட 1974&ம் ஆண்டு ஒப்பந்தத்தை திரும்பப்பெற்று, இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்போம் என்று கவர்னர் பன்வாரிலால் அறிவித்தார்.

ஆளுனர் உரையின் போது, இலங்கைத் தமிழரின் நலனுக்காக எப்பொழுதும் குரல் கொடுத்து வரும் இந்த அரசு, அவர்கள் கண்ணியத்துடனும், பொருளாதாரப் பாதுகாப்புடனும், உரிய அரசியல் உரிமைகளுடனும் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென்று மத்திய அரசையும், பன்னாட்டு சமுதாய அமைப்புகளையும் இந்த அரசு கேட்டுக் கொள்கிறது.

பொருளாதார மேம்பாட்டிற்கு இன்றியமையாத சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. நவீன தொழில்நுட்ப சாதனங்களையும், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் அளித்து, மாநிலக் காவல்துறையை இந்த அரசு தொடர்ந்து நவீனப்படுத்தி வருகிறது. இனவாத, தீவிரவாத மற்றும் மத அடிப்படைவாத சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் தடுத்து வரும் இந்த அரசையும், தமிழ்நாட்டு மக்களையும் நான் பாராட்டுகிறேன். தமிழ்நாடு காவல்துறை, சமூகவிரோத மற்றும் நக்சலைட் அமைப்புகளை தீவிரமாகக் கண்காணித்து, அவர்களின் சமூகவிரோதச் செயல்களை முளையிலேயே அழித்து வருகிறது.

சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை தொடர்ந்து சிறப்பாக நிலைநாட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும் என்பதைதெரிவித்துக் கொள்கிறேன். பாக் வளைகுடாப் பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட மாநில அரசு தொடர்ந்து பாடுபடும். மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக, இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் ஓரளவு குறைந்துள்ளன.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யவும், பிடித்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடிப்படகுகளை விடுவிக்கவும் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சூழ்நிலையில், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க, ஏற்கனவே உள்ள சாதாரண மீன்பிடிப் படகுகளை, ஆழ்கடல் சூரை மீன்பிடித் தூண்டில் படகுகளாக மாற்றுவதற்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு 200 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ள மத்திய அரசிற்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய, தமிழக  மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிட, 1974ம் ஆண்டு ஒப்பந்தத்தை திரும்பப் பெற்று, இலங்கை அரசிடமிருந்து கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வாக அமையும் என்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உறுதியான நிலைப்பாட்டினை ஏற்று செயல்படுத்த, மத்திய அரசிடம் இந்த அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு உரையாற்றினார்.