Home அரசியல் மாநில உரிமை, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்தி ஈரோட்டில் மார்ச் மாதம் மாநில...

மாநில உரிமை, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்தி ஈரோட்டில் மார்ச் மாதம் மாநில சுயாட்சி மாநாடுதி.மு.க. கூட்டத்தில் முடிவு

14
0
SHARE

சென்னை, ஜன. 8&

மாநில உரிமை, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்தி ஈரோட்டில் வரும் மார்ச் 24, 25 ஆகிய இரு நாட்கள் ஈரோடு மண்டல மாநாடு உள்ளிட்ட தி.மு.க மாவட்டசெயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாளையத்தில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சரே நேரடியாகத் தலையிட்டு பரிவுடனும் தோழமை உணர்வுடனும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு கண்டு போராட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கும், பொதுமக்களின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் வழிகாண வேண்டும் என மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்புச் சட்டத்தால்இஸ்லாமியப் பெண்களின் உரிமைகளை நியாயமாகப் பாதுகாக்கும் வகையிலும், இந்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழு ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரிநீர் ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்படாமல், மாநிலத்தின் காவிரி நீர் உரிமையை மத்திய அரசு முடக்கி வைத்திருக்கிறது.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், கெயில் திட்டம், கதிராமங்கலம் இயற்கை எரிவாயு திட்டம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டம் போன்றவை மூலம் மாநிலத்தின் அடிப்படை ஜீவாதார உரிமை அடித்து நொறுக்கப்படுகிறது.

நீட்தேர்வு, தேசிய மருத்துவ ஆணையம், நவோதயா பள்ளிகள் மூலம் மாநிலத்தின் கல்வி, மருத்துவக் கல்வி உரிமையை மத்திய அரசே ஆக்கிரமித்து அபகரித்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. உதய் மின் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்றவை மூலம் மாநிலத்தின் பொது விநியோகத் திட்டம் மற்றும் மின் திட்டங்கள் தொடர்பான உரிமையை மத்திய அரசே எஜமானப் போக்கில் எடுத்துக் கொள்கிறது.

புதிய கல்விக் கொள்கை மூலம் மாநிலத்தில் பள்ளிகள் அமைக்கும் உரிமையைக் கூட மத்திய அரசிடம் தாரை வார்த்து நிற்க மாநில அரசு தயாராகி விட்டது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநிலத்திற்கு ஏற்பட்ட 24 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பிற்கு ஈடாக நிதி பெற முடியவில்லை. ஆகவே மாநில சுயாட்சி, சமூகநீதி, மதநல்லிணக்கம் ஆகிய இலட்சிய தீபங்கள் ஒளிஉமிழ்ந்த தமிழ் மண்ணில் மாநில உரிமை, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்தி 2018, மார்ச் 24, 25 ஆகிய இரு நாட்கள்  ஈரோட்டில், “ஈரோடு மண்டல மாநாட்டைநடத்தஉள்ளோம்.  மேற்கண்டவை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here