Home சுடச்சுட தினகரனுக்கு ஆதரவு அதிகரிக்கும் நிலையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று ஆலோசனை? ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையில்...

தினகரனுக்கு ஆதரவு அதிகரிக்கும் நிலையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று ஆலோசனை? ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையில் நடக்கிறது 

31
0
SHARE

டி.டி.வி. தினகரனுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக தெரிகிறது. சென்னை, ஆக, 28&

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் என இரு அணிகள் இணைந்ததை அடுத்து டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள டி.டி.வி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து 19 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக பிரிந்தனர். அதை தொடர்ந்து, தமிழக கவர்னரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு தங்களது ஆதரவு இல்லை என கடிதம் அளித்திருந்தனர்.

இந்த  பரபரப்பான சூழ்நிலையில் விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், அரந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, திருப்பரங்குன்றம்  எம்.எல்.ஏ ஏ.கே.போஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திர பிரபா ஆகியோர் டி.டி.வி தினகரனை  சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்துக்கொண்டார். இதன் மூலம் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பலம் 23 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் டி.டி.வி தினகரன் கட்சிப்பதவியை வழங்கிய போது ஏ.கே.போஸ் அதனை நிராகரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,  சட்டசபையில் பெரும்பாண்மையை நிரூபிக்க, முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக கவர்னரிடம் தி.மு.க கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு நெருக்கடி முற்றுகிறது. இந்தநிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு, அதில் சசிகலாவை நீக்கி விட்டு, புதிய பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைகூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் என 250 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. டி.டி.வி.தினகரனுக்கு 23 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்த கூட்டத்தில்,பல அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

இந்த கூட்டம் நடைபெற்றால், அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு பிறகு நடக்கும் முதல் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினரை அ.தி.மு.க.வில் இருந்து விலக்கும் முடிவு எடுக்கப்படும். மேலும் கட்சியை வழி நடத்த அமைக்கப்பட்டுள்ள 15 பேர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு ஒப்புதல் பெறப்படும். இதற்கு சட்ட திருத்தம் தேவைப்படும் பட்சத்தில் அதற்கான ஒப்புதல்களும் பெறப்படும். குறிப்பாக சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கட்சி விதிகளில் மாற்றம் செய்யும் முடிவுகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அ.தி.மு.க. பொதுக் குழுவை எப்போது கூட்டுவது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.செப்டம்பர் முதல் வாரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்படலாம் என்று தெரிகிறது.

ஏ.கே.போஸ் திடீர் பல்டி

அ.தி.மு.க. திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர்  ஏ.கே.போஸ் நேற்று டி.டி.வி. தினகரனை சந்தித்தார். இதன் மூலம் டி.டி.வி. அணிக்கு பலம் அதிகரித்தது என்று செய்திகள் வெளிவந்த நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய போஸ், டி.டி.வி. தினகரனை மரியாதை நிமித்தம் சந்தித்தேன். நான் இன்னும் முதல்வர் அணியில்தான் உள்ளேன். ஆட்சிக்கு முதல்வர் பழனிசாமி, கட்சிக்கு பொதுச்செயலாளர் சசிகலா. பொதுக்குழுவை கூட்டினால் எனது நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்று தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயகுமார், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான நடைபெற்றது. முதல்வருக்கு வாக்களித்தவர்கள் தற்போது இணைந்ததுபோல அனைவரும் இணைவார்கள். நான் தொடர்ந்து ஜெ.பேரவை செயலாளராக செயல்பட்டு வருகிறேன். என்னை யாரும் நீக்க முடியாது என்றார்.