Home தலையங்கம் முந்தி வரும் பரபரப்பு செய்தியால் பிந்திப் போகும் முக்கிய விஷயம்

முந்தி வரும் பரபரப்பு செய்தியால் பிந்திப் போகும் முக்கிய விஷயம்

53
0
SHARE

தகவல் தொழில்நுட்பம் இன்று விண்ணை முட்டும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. கைப்பேசியில் உலகையே கையில் அடக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. சமூக வலை தளங்கள், டிவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் போன்றவற்றில் எவை பற்றி அதிக அளவில் பரப்பப்படுகிறதோ அவற்றிற்கு ஸ்டேட்டஸ், லைக் கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. இதனால் அவை நமது சிந்தனையில் வேரூண்றுகிறது. அவை நல்லதா, கெட்டதா என்று கூட ஆராய்வது கிடையாது. கணினி யுகத்திற்கு முன்னர், எது நல்லது, எது கெட்டது என்று தெரியும் அளவுக்கு நாம் பக்குவப்பட்டிருந்தோம். ஆனால் இன்றைய நிலைமையோ அப்படியே தலை கீழாக மாறிவிட்டது.

உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்தச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாநில அரசின் இந்தச் செயல்பாட்டுக்கு நாடுமுழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. ஆனால் இது அந்த அளவுக்கு பெரிய அளவில் விஷ்வ ரூபம் எடுக்கவில்லை. கண்டனங்களோடு முடிந்துவிட்டது.

பாலியல் வன்முறை வழக்கில் அரியானா மாநில சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என அரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது. இந்த கலவரம் டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் வரையும் பரவியது. வாகனங்கள், பெங்டோல் பேங்குகள் எரிக்கப்பட்டது.

எங்கு பார்த்தாலும் அவலக்குரல் எழுந்தது. இந்த வன்முறைக்கு 35க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த இரண்டு சம்பவங்களையும் ஒப்பிடும்போது, பாலியல் வழக்கில் சிக்கிய சாமியாருக்கு ஆதரவாக 5 மாநிலங்களில் மக்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் 70 குழந்தைகள் பலியான சம்பவம் பற்றி இன்று கண்டுகொள்வதற்கு கூட ஆட்களே கிடையாது. இதற்கு சமூக வலைதலங்களின் ஆழமாக கருத்து பகிர்வும் ஒரு காரணம் என்று கூறலாம். இப்போதைக்கு எந்த விஷயம் பெரிதாக தெரிகிறதோ அதில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. இதற்கு முந்தைய விஷயம் அப்படியே கிடப்பில் போடப்படுகிறது. இதனால் முந்தைய விஷயத்தில் தவறு செய்பவர்கள் தப்பித்து விடுகிறார்கள்.

மக்கள் பார்வை எதில் அதிகமாக இருக்கிறதோ அந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். எது நல்ல விஷயம், எது கெட்ட விஷயம் என்ற தெளிவு நமக்கு இருக்க வேண்டும். பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஒருவருக்காக இவ்வளவு அக்கரை காட்டும் மக்கள், மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 70 குழந்தைகள் பலியாகும் அளவுக்கு அஜாக்கிரதையாக செயல்பட்ட ஒரு மிகப்பெரிய சம்பவத்தை மறந்துவிடுவது சரிதானா…?

சமூக வளைதலம் என்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய ஊடகமாக கருதி நல்ல விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நாம் மட்டும் அல்ல… நம்மை சுற்றியுள்ள மக்களும், நாட்டு மக்களும் அறிவாற்றலையும், பகுத்தறிவையும் பெறலாம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதை விட்டுவிட்டு நல்ல விஷயம் என்று நினைத்துக் கொண்டு தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அதில் ஆதாயம் அடைபவர்கள் ஒரு சிலர் மட்டசூமு ஏன்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதனை எத்தனை பேர் உணர்ந்து செயல்படுவார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்…