Home தலையங்கம் விடிவுகிடைக்காத வினோத நோய்…

விடிவுகிடைக்காத வினோத நோய்…

29
0
SHARE

தொழில்நுட்பத்தில் எவ்வளவோ மாற்றங்கள் கண்டிருந்தாலும் சில நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாமல்தான் உள்ளது. அவற்றால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகத்தான் இருக்கின்றன. அந்த வகையில் சமீப காலமாக தமிழக மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கிய நோய் டெங்கு. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் 15,589 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 46 பேர் இறந்துள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டெங்கு, சிக்குன் குன்னியா மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் இறந்துகொண்டுதான் இருக்கின்றனர். அதோடு இவற்றிற்கு தமிழக அரசின் நடவடிக்கையும் பெரிதாக வரவேற்கும்படியாக இல்லை. இவ்வகை காய்ச்சலுக்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் தினமும் 10க்கும் மேற்பட்டோர் மரணமடைகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும் தமிழகத்தில் அதற்கான அதிகபட்ச நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீர்தான் வழங்கப்பட்டது. மருத்துவ ரீதியான எந்தஒரு தனிப்பட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அதிகமானோர் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கான மருத்துவ வசதிகளும் முறையாக இல்லை. கொசுவை அளிப்பதாக கூறி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் சிறிதளவேனும் நோயை கட்டுப்படுத்துவது குறித்து எடுக்கப்பட்டிருந்தால் பாதிப்புகளை குறைத்திருக்கலாம். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் கண்துடைப்பு நடவடிக்கைகளாகவே இருந்தது.

இதுபோன்ற காய்ச்சலால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வழங்கும்படி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் தமிழகத்தில் டெங்குவிற்கு 2013ல் 6,122 பேரும், 2014ல் 2,804 பேரும், 2015ல் 4,535 பேரும், 2016ல் 2,531 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2014ல் 3 பேரும், 2015ல் 12 பேரும், 2016ல் 5 பேரும், கடந்த ஆண்டில் 52 பேரும் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறப்பட்டிருந்தது. இதில் அக்டோபர் மாதத்திற்கு பிறகு மட்டும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சாதாரண காய்ச்சலுக்கே மக்கள் மருத்துவமனையை அனுகும்போது, உயிரிழப்பை ஏற்படுத்தும் டெங்கு போன்ற மர்ம நோய்களுக்கு தமிழக அரசின் அதிகபச்ச நடவடிக்கை நிலவேம்பு குடிநீர்தான். இது மக்களை காப்பாற்றும் முயற்சிதானா என்பது சந்தேகமாக விஷயம்தான். நோய்களை தடுப்பதற்கான முறையான நடவடிக்கையும் இல்லை, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீடும் இன்னும் முறையாக வழங்கப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகள் நடத்தப்படுகின்றனவா என்பது இழப்பீடு வழங்கப்படும்போதுதான் தெரியும்.

டெங்குவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு கொடுத்தால் மட்டும் போதுமா…? இனிமேல் விலை மதிப்பே இல்லாத உயிர் என்ற இழப்பு ஏற்படக்கூடாது என்பதை பற்றி ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டாமா? அவ்வாறு சிந்தித்திருந்தால் ஏன் உயிரிழப்பு என்ற விபரீதம் நடந்திருக்க போகிறது…?

டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவை ஒழிக்கிறோம் என்று எப்போது நடவடிக்கை எடுத்தார்கள் ? டெங்குவுக்கும், மர்ம காய்ச்சலுக்கும் ஏராளமானோர் பலியான பிறகுதானே…! குப்பைகளை சுத்தம் செய்கிறோம் என்று கூறி களத்தில் இறங்கிய முனிசிபாலிட்டி அதிகாரிகள்,  சுற்றுப்புறத்தில் சுத்தமாக வைத்திருக்காத கடைகள், வீடுகளுக்கு அபராதம் விதிக்கிறோம் என்று நோயை இலவசமாக கொடுத்த கையோடு பணத்தையும் பிடுங்குகிறார்கள்

நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். கண்கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம் என்கிற ஒரு நடைமுறையை வழக்கமாக கொண்டு செயல்படும் மாநகராட்சி நிர்வாகம், வரும் காலங்களிலாவது காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோம் என்ற கொள்கையோடு, டெங்கு பரவுவதற்கு முன்பே தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கினால் உயிர் பலிகொடுப்பதை தடுக்கலாமேநான் என்று நினைப்பதை மறந்து நாம் என்று நினைத்தால் எல்லாம் சாத்தியமே…! விடிவு கிடைக்காத வினோத நோய்க்கு விடிவும் நம் கையிலே…!