Home தலையங்கம் வாடிக்கையாளர்களை சுரண்டும் வங்கிகள்

வாடிக்கையாளர்களை சுரண்டும் வங்கிகள்

13
0
SHARE

ஏழை மக்களும் வங்கி வசதி பெற வேண்டும் என்பதற்காகவே இன்பீரியல் வங்கிகளாக செயல்பட்ட வங்கிகள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அவற்றின் மூலம் மக்கள் பயன் பெறுகிறார்கள் என்பதை விட கொள்ளையடிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

கோடிகளில் கடன் வாங்கிவிட்டு தப்பி ஓடும் தொழிலதிபர்களை விட்டுவிட்டு, சாதாரண மக்களிடம் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லை என்பதற்காக வசூலிக்கும் அபராதத்திலேயே தப்பி ஓடும் தொழிலதிபர்களிடம் இருந்து வர வேண்டிய பணத்தை ஈடுகட்டிக்கொள்கின்றன இந்த வங்கிகள். கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை 8 மாதத்தில் ஸ்டேட் வங்கி வசூலித்திருக்கும் அபராத தொகை மட்டும் ரூ.1,771 கோடி. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வங்கியின் காலாண்டு லாபமே ரூ.1,581 கோடி என்பதுதான். வங்கியின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு லாபத்தைவிட அபராதத்தொகை அதிகமாக உள்ளது. வங்கிகளில் நிறுவனங்களின் வர்த்தக பரிமாற்றத்திற்கு நடப்புக்கணக்கு, சேமிப்புக் கணக்கு, தொடர் வைப்புக் கணக்கு, நிலையான வைப்புக் கணக்கு என முதலீடுகள் செய்யப்படுகின்றன. இவற்றில் தனி நபர் சேமிப்புக்கணக்குதான் அதிகம்.

முன்பு தனி நபர் சேமிப்புக்கணக்குகள் வைத்திருப்பவர்கள் காசோலை வைத்திருந்தால் ரூ.100 மட்டுமே குறைந்தபட்ச இருப்புத்தொகையாக இருக்க வேண்டும் என்று இருந்தது. குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் ரூ.10 அல்லது ரூ.20 மட்டுமே அபராதமாக வசூலிக்கப்பட்டது. ஆனால், 2016ம் ஆண்டு ஏப்ரலில் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும் என ஸ்டேட் வங்கி அறிவித்ததோடு, அப்படி வைக்காதவர்களிடமிருந்து அறிவிப்பு ஏதும் இல்லாமலேயே அபராதமும் வசூலிக்கப்பட்டது. வைப்புத் தொகை 50 சதவீதத்திற்கு குறைந்தால் ரூ.50ம், 75 சதவீதத்திற்கு குறைந்தால் ரூ.75ம், 100 சதவீதத்திற்கு குறைந்தால் ரூ.100 என அபராதம் விதிக்கப்பட்டது. கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட பின்புதான் பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது தெரிந்தது.

குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லையென்றால் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமோ, ஈமெயில் மூலமோ தெரிவிக்க வேண்டும், அபராதம் வசூலிக்கப்படும் முன்பும் தெரியப்படுத்த வேண்டும், வங்கிக் கணக்கு தொடர்ந்து இரண்டு வருடங்களாக பயன்படுத்தப்படாமல் முடங்கி இருந்தால் அபராதம் எடுக்கக்கூடாது போன்ற பல்வேறு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த வரி வசூலில் இந்திய ரிசர்வ் வங்கியின் பரிந்துரைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் ஸ்டேட் வங்கியின் மொத்த 42 கோடி சேமிப்பு கணக்குகளில் 13 கோடி கணக்குகள் ஜன்னத் யோஜனா திட்டத்தின் ஜீரோ பேலன்ஸ் வசதியின் மூலம் தொடங்கப்பட்டது. இவற்றிற்கு குறைந்தபட்ச வைப்புத்தொகை தேவையில்லை. அப்படியானால் மீதமுள்ள 29 கோடி கணக்குகளில் இருந்து மட்டுமே ரூ.1,771 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதா என்பதுதான்.

வாடிக்கையாளரின் கணக்கில் செலுத்தும் பணத்தை வைத்துதான் வங்கிகள் இருக்கின்றன. அதனால்தான் வங்கிகள் குறைந்தபட்ச தொகை வைத்திருக்க வலியுறுத்துகிறது. இதில் தவறில்லை என சில சமூக ஆர்வலர்கள் கூறினாலும், ஏழை மக்களின் கணக்கிலிருந்து அறிவிப்பு இல்லாமல் அபராதம் வசூலிக்கப்படும்போது அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சாதாரண மக்கள் வங்கியின் நடைமுறை குறித்து அறியாமல் அபராதம் கட்ட சொன்னதும் கட்டி விடுகின்றனர். மக்களின் சேமிப்பிற்காக துவங்கப்பட்ட வங்கிகள் மக்களின் சேமிப்பிலிருந்து அபராதம் என்ற பெயரில் தங்களின் வங்கிக் கணக்கில் சேமித்துக்கொண்டிருக்கின்றன. இந்தியன் ரிசர்வ் வங்கியின் அனைத்து விதிமுறைகளையும் மற்ற வங்கிகள் முறையாக பின்பற்ற வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மக்களும் வங்கிகள் குறித்த விதிமுறைகளின் சரியான தகவல் அறிந்து செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற அறிவிப்பில்லாத சுரண்டல்கள் குறித்து கேள்விகளை எழுப்ப முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here