Home தலையங்கம் மாநகராட்சி அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு…!

மாநகராட்சி அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு…!

51
0
SHARE

சென்னை என்றாலே இப்போதெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது போக்குவரத்து நெரிசல்தான். என்னதான் மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் சேவைகள் என்று சென்னையில் புதிது புதிதாக உதித்தாலும் போக்குவரத்து நெரிசல் மட்டும் குறைந்ததாக தெரியவில்லை. இந்த போக்குவரத்து நெரிசலிலும் அடிக்கடி சாலைகளில் பள்ளம் தோண்டுதல், குழாய்கள் பதித்தல், ஹைட்ராலிக் குப்பை வண்டிகள் என்று போக்குவரத்தை மேலும் மேலும் நெரிசலுக்கு உள்ளாக்கும் செயல்களும் அவ்வப்போது நடந்தேறி வருகிறது.

இதனையும் தாண்டி எதைப் பற்றியும், எந்த உயிரைப்பற்றியும் கவலைப்படாத சிலர் தங்கள் மாடுகளை கட்டவிழ்த்துவிட்டு சாலைகளில் திரிய விடுகின்றனர். இந்த மாடுகள் யாருக்கும் பயப்படுவது கிடையாது. சாலைகளிலேயே படுப்பது, சாலைகளிலேயே நிற்பது என்று பெரிய அளவிலான சாலை மறியலையே ஏற்படுத்தி விடுகிறது. இதுபோன்ற மாடுகளை அடைப்பதற்கு மாட்டு பட்டி என்று ஒன்று உள்ளது. மாட்டு பட்டி என்றால் சாலைகளில் திரியவிடப்படும் மாடுகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடைத்து வைத்து அதன் உரிமையாளர்களிடம் தண்டனை தொகை வசூலிக்க பயன்படுத்தப்படுவதாகும். மற்ற மாவட்டங்களிலும் இந்த பட்டி இப்போது செயல்படுத்தப்படுகிறதா என்றால் சந்தேகம் தான். அப்படி இருக்க சென்னையில் எப்படி இதுபோன்ற மாட்டு பட்டிகள் செயல்பட வாய்ப்பு உள்ளது என்பது சந்தேகம் தான்.

இந்தநிலையில் தான் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக திரியும் மாடுகளை பிடித்தால் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கும் நடைமுறை ஏப்.1 முதல் அமலுக்கு வரும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, சென்னை மாநகராட்சியால் கடந்த ஆண்டு நவம்பர் 24ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கால்நடை பிடிக்கும் வாகனங்களின் மூலம் பணியாளர்களால் பிடிக்கப்பட்டு புதுப்பேட்டைடி’, பெரம்பூர்ஜிஆகிய மாட்டுத்தொழுவங்களில் அடைக்கப்பட்டு வருகிறது. தொழுவங்களில் அடைக்கப்பட்ட மாடுகளுக்கு கடந்த ஆண்டுகளில் மூன்று வயதிற்குட்பட்ட கால்நடைகளுக்கு ரூ.1000மும், மூன்று வயதிற்கு மேலுள்ள கால்நடைகளுக்கு ரூ.1250மும் மேலும் மூன்று நாட்கள் பராமரிப்பு செலவாக நாளன்றுக்கு ரூ.100 வீதம் மொத்தம் ரூ.1550 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டு வந்தது.

வருங்காலங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பிடிக்கப்படும் கால்நடைகளுக்கு மாட்டின் காது மடலில் சென்னை மாநகராட்சி வரிசை எண்கள் அடிப்படையில் முத்திரை வில்லை பொருத்தப்படும். முத்திரை வில்லை பொருத்தப்பட்ட கால்நடைகள் மீண்டும் பிடிக்கப்பட்டால், அவைகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்படும். உள்ளூர் காவல்துறையின் ஒத்துழைப்புடன் மாடு பிடிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் திரியும் மாடுகளை பட்டியில் அடைக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும் முனிசிபாலிட்டி நிர்வாகம் இதனை முறையாக செய்கிறதா? அப்படி செய்திருந்தால் தான் சாலைகளில் மாடுகளையே காண முடியாதே? ஆனால் அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் கோயம்பேடு பேருந்துநிலையம் அருகே உள்ள மார்க்கெட் பகுதிகளில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிந்துகொண்டுதான் இருக்கிறது. இது கண்களில் புலப்படவில்லையா?  பல இடங்களில் மாடுகள் சுதந்திரமாக சுற்றித்திரிந்து விபத்துக்களை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. யாரும் கண்டுகொள்வது கிடையாது. மாநகராட்சி இப்போது அறிவித்தது கண்துடைப்புக்கா…?  நடைமுறைக்கு வருமா?  என்பது அவர்கள் கையில் தான் உள்ளது.