Home தலையங்கம் உயிரை காக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிடலாமே…

உயிரை காக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிடலாமே…

38
0
SHARE

இந்த உலகில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு. ஆனால் மனித உயிர் விலை மதிப்பு இல்லாதது. ஆனால் அந்த உயிர் எப்படி? எப்போது? எந்த வழியில் வேண்டுமானாலும், யாரையும் கேட்காமலேயே போகக்கூடியது. அப்படிப்பட்ட உயிரை காப்பது நமக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த உயிரை காப்பாற்றுவதற்காக இதயம், நுரையீரல், கல்லீரல், ரத்தம் என்று நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் கடுமையாக பணியாற்றுகின்றன. நம் உடலில் உள்ள இதயம் உள்ளிட்ட முக்கிய பாகத்துக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் உடனடியாக மருத்துவம் பார்த்தால் தான் உயிரை காப்பாற்ற முடியும். இதற்காக அறிமுகம் செய்யப்பட்டதே ஆம்புலன்ஸ் சேவை.

தொடக்க காலத்தில் ஆம்புலன்ஸ் ராணுவத்தில் காயமடைபவர்களுக்கு மட்டுமே பயன்பட்டது.  ஆம்புலன்ஸ் சேவை முதலில் ஸ்ட்ரெக்சரில் இருந்துதான் தொடங்கியது. போரில் காயம் அடையும் வீரர்களுக்கு முதலுதவி கொடுத்து மருத்துவமனைக்குக் கொண்டுவரும் வாகனமாகத்தான் ஆம்புலன்ஸ் இருந்துள்ளது. ஆம்புலன்ஸ் சேவையை முதன்முதலாகப் பிரிட்டனில் இருக்கும் ஆங்கிலோ சாக்ஸன் என்னும் இனக்குழுவால்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

மக்களுக்காக ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டது 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான். இந்தியாவில் ஆம்புலன்ஸ் சேவையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது 108 திட்டம்தான். 2005ஆம் ஆண்டு 108 ஆம்புல்ன்ஸ் சேவை முதன்முதலாக ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆந்திர மாநில அரசு, (.எம்.ஆர்..) நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுடன் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு இந்தியாவின் மற்ற மாநில அரசுகளுடன் இணைந்து தனது சேவையை விரிவுபடுத்தியது. இன்று ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், உத்ரகாண்ட், கோவா, கர்நாடகா, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இச்சேவை நடைமுறையில் உள்ளது.

தமிழ்நாட்டில் 2008ம் ஆண்டு செப்டம்பர் 15ல் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இன்று தமிழ்நாட்டில் 629 ஆம்புலன்ஸ்கள் சேவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இச்சேவை தொடங்கப்பட்ட 2ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 4,11,288 உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளன எனத் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. முக்கியமாக இச்சேவை பிரசவ இறப்பு விகிதத்தைப் பெருமளவில் குறைத்துள்ளது.

ஆம்புலன்சில் நோயாளியின் உயிரை காக்க ஆக்சிஜன் கருவி, கிட்னி ட்ரே, யூரின் பான், ஆர்ட்ரே போர்செப்ஸ், உட்பட 17 வகை மருத்துவ கருவிகள் வண்டியில் இருக்க வேண்டும். இதில், வண்டியில் ஏற்றும் போது மயக்கநிலையில் உள்ள நோயாளிகளின் ரத்தத்தில்  சர்க்கரை அளவை கண்டறியும்குளூகோ மீட்டர்‘, ரத்த அழுத்தம் பார்த்தல், “தெர்மா மீட்டர்‘, வட்ட வடிவ கத்திரி, நாடித்துடிப்பை கண்டறியும்பல்ஸ் ஆக்ஸி மீட்டர்‘, ஸ்டெதஸ்கோப்கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.

தற்போது சென்னையில் ஓடிக்கொண்டிருக்கும் ஆம்புலன்சில் அனைத்து நோயாளியின் உயிரை காக்க அனைத்து வசதிகள் இருந்தாலும் குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றால் மட்டுமே அவர்கள் உயிரை காப்பாற்ற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக குறித்த நேரத்திற்கு ஆம்புலன்சால் செல்ல முடிவது கிடையாது. இதனால் தவிர்க்க முடியாத உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதனை தடுக்க வேண்டுமானால் ஒவ்வொரு மனிதரும் சிந்திக்க வேண்டும். ஆம்வுலன்ஸ் சயரன் சத்தம் கேட்டதுமே அனைவரும் வழியைவிட்டுவிட வேண்டும். சிக்னல் விழுந்த உடனேயே ஆம்புலன்ஸ் செல்லும் வகையில் அமைய வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காகவே தனிப்பாதையையும் அரசு உருவாக்கினால் உயிரிழப்புகளை தடுக்கலாம்அரசும் மக்களும் இந்த விஷயத்தை சிந்தித்தால் உயிரிழப்பை தடுக்கலாம்.