Home சம்பவம் ஜம்மு&காஷ்மீரில் உள்ள சி.ஆர்.பி.எப். முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் வீரமரணம்

ஜம்மு&காஷ்மீரில் உள்ள சி.ஆர்.பி.எப். முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் வீரமரணம்

12
0
SHARE

ஸ்ரீநகர், ஜன.1&

ஜம்மு& காஷ்மீரில் அமைந்திருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம் (சி.ஆர்.பி.எப்.) மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் வீரமரணத்தை தழுவினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லேத்போரா பகுதியில் சி.ஆர்.பி.எப். படையின் 185 பாட்டாலியன் பிரிவின் முகாம் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுத்தனர்.

பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும், கண்ணில் பட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியும் தாக்குதலை முன்னெடுத்தனர். உடனடியாக பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலை நடத்தினர். பயங்கரவாதிகளில் ஒருவன் அப்போது தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

கூடுதல் படைகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது, பாதுகாப்பு படைகள் முழு உஷார் நிலைப்படுத்தப்பட்டது. பயங்கரவாதிகள் உடனான சண்டை தீவிரம் அடைந்தது. இந்த துப்பாக்கி சண்டையில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி குண்டு காயத்தினால் வீரமரணம் அடைந்தனர்.

இருதரப்பு இடையே சண்டை நேரிட்ட போது ஒரு வீரருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரும் உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த ராணுவ வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகளுக்கு தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினர் பதிலடியை கொடுத்து வருகின்றனர். சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என ஏ.என்.. செய்தி வெளியிட்டு உள்ளது

அப்பகுதியில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அங்கிருந்து கடைசியாக வெளியான தகவல்கள் குறிப்பிட்டு உள்ளது.

எல்லை வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுத்து இருக்கலாம் எனவும் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த முகாமில்தான் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வந்து உள்ளது எனவும் தகவல்கள் தெரிவித்து உள்ளன.

பிற சிஆர்பிஎப் முகாம்களும் தாக்குதலுக்கு குறி வைக்கலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை ராணுவம் தீவிரமாக நடத்தி வருகிறது, இவ்வாண்டு இதுவரையில் 200க்கும் அதிகமான பயங்கரவாதிகளை ராணுவம் வீழ்த்தி உள்ளது. இது பாகிஸ்தானின் லஷ்கர், ஜெய்ஷ் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கங்களுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது, இந்நிலையில் பயங்கரவாத இயக்கங்கள் தரப்பில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here