Home சுடச்சுட தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டிஅரசியலுக்கு வருவது உறுதிநடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டிஅரசியலுக்கு வருவது உறுதிநடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

53
0
SHARE

அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதியிலும் போட்டியிடுவோம் என்று தெரிவித்தார்.

சென்னை, ஜன.1&

நடிகர் ரஜினிகாந்த் தனது பிரவேஷம் குறித்து டிசம்பர் 31&ந் தேதி (அதாவது நேற்று) அறிவிப்பதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் ரசிகர்களை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் சந்தித்தார்.

அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக அவர் பேசியதாவது:&

ரசிகர்களுடன்

புகைப்படம்

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களே, தமிழக மக்களே, ஊடக நண்பர்களே, தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களே எல்லாருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

முதலில் ரசிகர்களை எப்படி பாராட்டுவது என்பதே தெரியல. அவ்வளவு கட்டுப்பாடா ஒழுக்கமா இருந்து, கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேர் எந்த ஒரு தொந்தரவும் இல்லாம நீங்க வந்து போட்டோ எடுத்து போனது, அந்த கட்டுப்பாடு ரொம்ப மகிழ்ச்சி.

ஊடகத்தை

பார்த்து பயம்

இந்த கட்டுப்பாடும் ஒழுக்கமும் இருந்தா என்ன வேணாலும் சாதிக்கலாம். ரொம்ப பில்டப் ஆகிட்டுச்சில.. நான் பில்டப் கொடுக்கலங்க.. எனக்கு அரசியலுக்கு வருவது குறித்து பயம் இல்லை. இந்த மீடியா பார்த்து தான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் மீடியா பார்த்து பயப்படுராங்க. நான் குழந்தை. சோ சார் எனக்கு முதலேயே பயமுறித்து வைச்சிருக்காங்க. இந்த நேரத்தில் அவரை ரொம்ப மிஸ் பண்ரேன். இந்த நேரத்தில் அவர் பக்கம் இருந்திருந்தால் எனக்கு 10 யானை பலம் இருந்திருக்கும். அவரது ஆத்மா எப்பவுமே என் கூட இருக்கும்.

விஷயத்துக்கு வர்ரேன். கடமையை செய். மிச்சத்தை நான் பார்த்திருக்கிறேன். யுத்தம் செய்.. ஜெயிச்சா நாடு ஆள்வ. செத்தா வீரன் என்ற பெயரை அடைவ. யுத்தம் செய்யாமல் போனால் உன்னை கோழை என்பார்கள்.

அரசியலுக்கு

வருவது உறுதி

நான் எல்லாத்தையும் ஏற்கனவே முடிச்சிட்டேன். நான் அம்பு விடுவதுதான் பாக்கி. நான் அரசியலுக்கு வருவது உறுதி. (ரஜினி இவ்வாறு பேசியதும் அரங்கமே அதிரும் வண்ணம் கரகோஷம் விண்ணை பிளந்தது. அது அடங்க சில நிமிடங்கள் நீடித்தது.) இது காலத்தின் கட்டாயம்.

வரப்போர சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து (மீண்டும் கரகோஷத்தால் அரங்கமே அதிர்ந்தது) தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்போம். அதுக்கு முன்னால உள்ளாட்சி தேர்தல் வருது. நாட்கள் ரொம்ப குறைவாக இருப்பதால் போட்டியில்லை.

பதவி ஆசை இல்லை

பாராளுமன்ற தேர்தல், அந்த நேரத்தில் முடிவெடுப்பேன். நான் அரசியலுக்கு பணத்துக்கோ பெயருக்கோ, புகழுக்கோ வருவது கிடையாது. அத நீங்க வந்து, நான் கனவுல கூட நினைத்து பார்க்காத அளவுக்கு ஆயிரம் மடங்கு கொடுத்திட்டீங்க. பதவி எனக்கு ஆசை இருந்திருந்தா, 1996லேயே அந்த நாற்காலி என்னை தேடி வந்தது.

அதை வேண்டாம் என்று தள்ளி வைத்தேன். 45 வயசிலேயே எனக்கு அந்த பதவி ஆசை இல்ல, 68 வயசில அது வருமா.?

அப்படி வந்தால் நான் பைத்தியக்காரன் இல்லயா?. நான் ஆன்மிகவாதி சொல்ல தகுதியற்றவனா? நோ. பதவிக்காக இல்ல. அப்போ வேர என்ன.? அரசியல் ரொம்ப கெட்டு போச்சுங்க. நாட்டு அரசியல் ரொம்ப கெட்டுப்போச்சு.

குற்ற உணர்வு

ஜனநாயகம் சீர்கெட்டு போச்சு. கடந்த ஓர் ஆண்டா, ஓராண்டில் தமிழ்நாட்டில் நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள் ஒவ்வொரு தமிழக மக்களை தலைகுனிய வைச்சிடுச்சி. எல்லா மாநிலத்து மக்களும் நம்மள பார்த்து சிரிச்சிட்டு இருக்காங்க.

இந்த நேரத்தில் நான் இந்த முடிவு எடுக்கவில்லை என்று சொன்னால், என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்கள், நல்லது செய்யறதுக்கு ஜனநாயக ரீதியாக நல்லது செய்யறதுக்கு நான் ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு என்னை சாகுர வரைக்கும் என்னை துரத்தும்.

ஆன்மிக அரசியல்

மாத்தனுங்க.. எல்லாத்தையும் மாத்தணும். அரசியல் மாற்றம்.. அதற்கு நேரம் வந்தாச்சு. சிஸ்டமை மாற்றணும். உன்மையான நேர்மையான நாணயமான வெளிப்படையான சாதி, மதசார்பற்ற ஒரு ஆன்மிக அரசியல் கொண்டு வரணும்.

அதுதான் என்னுடைய நோக்கம். அதுதான் என் விருப்பம். அதுதான் என் குறி. அது ஒரு தனி மனுஷனால முடியாது. நீங்க எல்லாரும், தமிழக மக்களும் எல்லாரும் என் கூட இருக்கும். இது சாதாரண விஷயம் அல்ல. எனக்கு தெரியும். ஒரு கட்சி ஆரம்பித்து, தேர்தலில் நின்று ஜெயிச்சி ஆட்சி அமைப்பது சாதாரண விஷயம் அல்ல எனக்கு தெரியும்.

அது நடுக்கடலில் இறங்கி முத்தெடுக்கிற மாதிரி. ஆண்டவனுடைய அருள், மக்களுடைய நம்பிக்கை, அவங்களுடைய அபிமானம், அன்பு, அவர்களிடம் ஒத்துழைப்பு இருந்தால்தான் இதனை சாதிக்க முடியும்.

கொள்ளை ஆட்சி

ஆண்டவன் அருள், மக்களுடைய ஆதரவு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கு. பழைய காலத்துல, ராஜாக்கள் அடுத்த நாட்டுக்கு சென்று யுத்தத்துக்கு போய் ஜெயிச்சா, அந்த நாட்டோட கஜானாவை கொள்ளையடிப்பாங்க. அரண்மனையில் இருக்கும் பொருட்கள் எல்லாம் கொள்ளையடிப்பாங்க. அந்த படைத்தலைவர்கள், படைவீரர்கள் நாட்டு மக்களை கொள்ளையடிப்பாங்க. இறுதியாக நாட்டிலேயே, சொந்த பூமியிலேயே கொள்ளையடிக்கிறாங்க. இப்போ ஜனநாயகம் என்ற பெயரில,

ஆட்சிக்கு வந்தா, அந்த கட்சி ஆளுங்க பல வழியில பல ரூபத்துல மக்களை கொள்ளையடிச்சிட்டு இருக்காங்க.

பழைய காலத்துல ராஜாக்கள் இன்னொரு நாட்டுக்கு சென்று கொள்ளையடிக்கிறாங்க. இங்க சொந்த நாட்டிலேயே கொள்ளையடிக்கிறாங்க. இதை முதலில் மாற்றணும். ஜனநாயக ரீதியா கட்சியிலேயே மாற்றணும். ஒரு கட்சி வேணும் என்றால் தொண்டன் தான் முக்கியம்.

காவலர் படை

ஒரு தொண்டன் அவன் ஆணி வேரு அல்ல.. வேரு மரம் கிளை இலை எல்லாமே தொண்டன் தான். தொண்டனில் இருந்துதான் கவுன்சிலரு, எம்.எல்.. முதல்வரே உருவாகிராங்க. நான் தொண்டர்கள் என்று சொல்ல மாட்டேன்.  எனக்கு தொண்டர்கள் வேண்டாம். எனக்கு காவலர்கள் வேண்டும்.

அந்த காவலர்கள் உழைப்பால ஆட்சி அமைத்தால், மக்களுக்கு நியாயமாக போய் சேர வேண்டிய சலுகைகள், உரிமைகளை சேரவிடாம தடுக்கும் கும்பலை தடுக்கும் காவலர்கள் எனக்கு வேண்டும். பொதுநலம் இல்லாம, சுயநலத்துக்காக எந்த ஓர் அரசு அதிகாரிகிட்டயோ, எம்.எல்..கிட்டயோ, அமைச்சர்கிட்டயோ போய் நிற்காத காவலர்கள்தான் எனக்கு வேண்டும்.

நம்ம ஆட்சி, யார் தப்பு செய்தாலும், யார் தப்பு செய்தாலும், தட்டிக் கேட்கிற காவலர்கள் வேண்டும். இந்த காவலர்களை கண்காணிக்கும் ஒரு பிரஜையுடன், பிரதிநிதி நான்.

பிரஜைகளின் பிரதிநிதி

பிரஜையோட பிரதிநிதிதான் நான். இதற்கு அந்த காவலர் படை வேண்டும். அதை நாம உருவாக்கணும். என்னுடைய பதிவு செய்த மன்றங்கள், கிராமத்தில் இருந்து நகரம் வரைக்கும் பல ஆயிரக்கணக்கில் இருக்கும். பதிவு செய்யாத மன்றங்கள் அதை விட ஒன்றரை மடங்கு, ரெண்டு மடங்கு அதிகமா இருக்கு.

பதிவு செய்யாத மன்றங்களை, பதிவு செய்ய வைத்து, பதிவு செய்த மன்றங்களை புதுப்பித்து எல்லோரையும் ஒருங்கிணைக்கணும். இது முக்கியமான வேலை முதல் வேலை. இதான் அதிமுக்கியமான வேலை.

இது சினிமா இல்லங்க. அரசியல். நாம வந்து காவலர்களா மாறப்போரோம். அதற்கு நாம மட்டும் போதாது. நீங்க எல்லாம் நம்ம சுற்றி இருக்கிற மக்கள், பெரியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் இவர்களை எல்லாம் அரசியல் மன்றத்திற்குள்ள கொண்டு போகணும்.

ரசிகர்களுக்கு உத்தரவு

ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும் நம்ம மன்றங்கள் இருக்க வேண்டும். இது நான் கொடுக்கிற முதல் பணி. இதுவந்த ஒரே குடைக்குள்ள நாம வரணும். வந்த பிறகு கட்டுப்பாடு, ஒழுக்கம். அதோட வந்து ஜனநாயக ரீதியா தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்பதற்கு தயாராக வேண்டும்.

அதுவரைக்கும் நாம அரசியல் பேச வேண்டாம். அரசியல்வாதிகளை திட்ட வேண்டாம். என்னை உள்பட.. என்னை உள்பட. அன்றாடம் அரசியல் குறித்து திட்டுவது குறைசொல்வது எல்லாம் வேண்டாம். அறிக்கை விடுறது போராட்டம் பண்றது எல்லாம் வேண்டாம்.

அரசியல் குளம்

அதெற்கெல்லாம் நிறைய பேர் இருக்காங்க. ஏற்கனவே அரசியல் என்கிற குளத்தில் வந்து, நிறைய பேர் இருக்காங்க. அவங்க நீந்நிதான் ஆகணும். இல்லனா மூழ்கி போய்ருவாங்க. நாம் இன்னும் குளத்தில இறங்க. நமக்கு நீந்ந தெரியும். தரையில நீந்த வேண்டாம். குளத்தில் இறங்கின பிறகு நீந்தலாம்.

எல்லார நாம ஒன்னா சேர்ந்து, அந்த பணிக்கு தயாராகுவோம். சட்டமன்ற தேர்தல் என்றைக்கு வருதோ, அதற்கு முன்னால, உரிய நேரத்தில கட்சியை ஆரம்பித்து, மக்கள் மத்தியில் நாம என்ன செய்ய போரோம்.

மந்திரம், கொள்கை

நாம செயல் திட்டங்கள் என்னென்ன செய்ய போரோம். இது இது செய்யப் போரோம். இதுஇது செய்ய முடியாது. அப்பிடினு உண்மையை சொல்லி இது செய்யலினா 3 ஆண்டுல நாமளே ரிசைன் (ராஜினாமா) பண்ரோம். என் செய்ய முடியல என்று மக்கள் மத்தியில் போவோம். எங்களின் மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு.

எங்களுடைய கொள்கை நல்லதையை நினைப்போம், நல்லதையை பேசுவோம், நல்லதையை செய்வோம். நல்லதே நடக்கும். வரப்போர சட்டமன்ற ஜனநாய போரில் நம்ம படையும் இருக்கும். ஆண்டவன் இருக்கான்.

வரவேற்பு

வாழ்க தமிழ் மக்கள், வாழ்க தமிழ்நாடு. ஜெய்ஹிந்த். ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து முடிந்ததும் ரஜினிகாந்த், ராகவேந்திரா மண்டபத்தின் முன்னால் திரண்டிருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்தார். ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அவரின் ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.