Home தலையங்கம் முத்தலாக் சட்டமாகுமா…?

முத்தலாக் சட்டமாகுமா…?

33
0
SHARE

முஸ்லிம் கணவர், தனது மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்ட விரோதமானது என்று ஆகஸ்டு மாதம் தீர்ப்பு கூறிய உச்ச நீதிமன்றம், முத்தலாக் நடைமுறைக்கு எதிராக 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது.

இதைத்தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு, முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் ‘‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா’’வை தயாரித்தது. ஆனால், முத்தலாக் நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில், உடனடியாக மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் ‘‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா’’ பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மசோதாவை தாக்கல் செய்தார். முத்தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்வது ஜாமீனில் வர முடியாத குற்றமாக கருதப்பட்டு, அந்த பெண்ணின் கணவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது.

மேலும் இந்த மசோதாவின்படி, பேச்சு மூலமோ அல்லது எழுத்து மூலமோ அல்லது மின்னஞ்சல் (&மெயில்), எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் உள்ளிட்ட மின்னணு ஊடகம் மூலமோ உடனடியாக மூன்று முறை தலாக் கூறுவது சட்டவிரோதமானதும், செல்லாததும் ஆகும். மேலும் பாதிக்கப்பட்ட பெண் (விவாகரத்து பெறும் பெண்) தனக்கும், தனது மைனர் குழந்தைக்கும் ஜீவனாம்சம் தொகை பெற மாஜிஸ்திரேட்டை அணுகவும், மைனர் குழந்தையை தனது பாதுகாப்பில் வைத்துக் கொள்ள மாஜிஸ்திரேட்டை நாடவும் இந்த மசோதா வகை செய்கிறது.

இந்த சட்ட மசோதா அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும், அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கு எதிரான எந்த மசோதாவையும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது என்றும் சிலர் கூறுகின்றனர். மேலும் மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும், மசோதாவை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே அ.தி.மு..வின் கருத்தாக இருந்தது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மசோதாவில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்தனர். அந்த திருத்தங்கள் குரல் ஓட்டு மூலம் நிராகரிக்கப்பட்டன. அதன்பிறகு மசோதா நிறைவேறியது. சமூகத்தில் அனைத்து மத பெண்களுக்கும் பிரச்சனைகள் உள்ளன. இஸ்லாமிய பெண்களை பாதுகாக்கின்றோம் எனக் கூறும் பாரதிய ஜனதா கட்சி, சிறுபான்மை மக்களின் அடையாளங்களை அழிப்பதையே கொள்கையாக வைத்துள்ளதுஎன்றும் சில அடிப்படைவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். குடும்ப அமைப்பில் இருக்கும் பெண்கள், அந்த பந்தம் தொடர வேண்டுமா.?இல்லையா என்ற பயமில்லாமல், பெண்களுக்கு பாதுகாப்பு தர வழிவகை செய்யும் சட்டத்தை வரவேற்பதாக குடும்பநல சட்ட அறிஞர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். எனினும் இந்த சட்டத்தின் நடைமுறை பிரச்சினைகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர்.

இந்த சட்டத்தை மத ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ பார்க்காமல், ஒரு பெண்ணின் உரிமையை பாதுகாக்கும் விஷயமாக பார்க்கும் போது இச்சட்டம் ஏற்புடைய ஒன்று தான் என்பதும் அவர்களின் பிரதான கருத்தாக உள்ளது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மக்களவையில் பெரும்பான்மை இருப்பது போன்று, மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. இந்த மசோதாவிற்கு சட்ட அந்தஸ்து வழங்க, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இரண்டும் கருத்தொற்றுமை அவசியம். இந்த கருத்தொற்றுமை ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். ஆனால் கருத்தொற்றுமை ஏற்படுமா? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.