Home சுடச்சுட ஒகி புயல் பாதிப்பு, பருவமழை சேதத்தை பார்வையிடமத்திய குழுவினர் தமிழகம் வந்தனர்பல்வேறு பகுதிகளில் ஆய்வு

ஒகி புயல் பாதிப்பு, பருவமழை சேதத்தை பார்வையிடமத்திய குழுவினர் தமிழகம் வந்தனர்பல்வேறு பகுதிகளில் ஆய்வு

12
0
SHARE

பருவ மழை மற்றும் ஒகி புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவினர் தமிழகம் வந்தனர். இந்த குழு பல்வேறு பிரிவுகளாக சென்று தனது ஆய்வுப் பணியை மேற்கொண்டது.

சென்னை, டிச. 29&

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதே போன்று ஓகி புயலில் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் சேதமடைந்தது. பல மீனவர்கள் கடலில் சிக்கி உயிரிழந்தனர். இன்னும் பலர் கரை திரும்பி வரவில்லை.

மத்திய குழு வருகை

கன்னியாகுமரி பாதிப்பு மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை பார்வையிட மத்திய குழு வந்துள்ளது. ஒரு குழு கன்னியாகுமரிக்கு சென்றது. மற்றொரு குழு சென்னையில் ஆய்வு மேற்கொண்டது.

சென்னையில் பாதிக்கப்பட்ட  பகுதிகளை நிதி அமைச்சக செலவின துணை இயக்குனர் முகேஷ் குமார், மத்திய குடி நீர் மற்றும் சுகாதாரத்துறை மூத்த ஆலோசகர் எஸ்.சி.சர்மா, கோவையில்  மத்திய நீர் வள ஆணைய இயக்குனர் ஜி.நாகமோகன் ஆகியோர்  கொண்ட குழு நேற்று ஆய்வு செய்தனர்.

முன்னதாக நேற்று காலை தலைமை செயலகத்தில் மத்திய குழுவினர்  உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் வருவாய்த்துறை செயலாளர் சந்திரமோகன், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு, மாநகராட்சி கமிஷ்னர் கார்த்திகேயன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஆய்வுப் பணி

பின்னர் இந்த குழுவினர், முதலில் ராயபுரம் பாலம் அருகே உள்ள மன்னார்சாமி கோயில் தெருவில் சேதமடைந்த சாலைகளை பார்வையிட்டனர். பருவமழையின் போது, அங்கு ஏற்பட்ட போக்குவரத்து இடையூறுகள் குறித்து, மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், மத்திய குழுவிடம் எடுத்து கூறினார். பின்னர், பேசின் பாலம், பவர் ஹவுஸ், பகுதிகளை பார்வையிட்டனர்.

அப்பகுதியில் உள்ள பள்ளங்களை, மத்திய நீர் வள ஆணைய இயக்குனர் நாகமோகன் அவற்றை கையால் அளந்து , எத்தனை அடி சேதம் என பார்வையிட்டார். அதை தொடர்ந்து ஓட்டேரி நல்லா கால்வாய் அருகில் ஸ்டீபன்சன் நீர் வெளியேற்றுவது குறித்தும், அதனால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு குறித்தும் ஆவணங்கள் மூலம் விளக்கினர். பேரிடர் மேலாண்மை துறை செயலர் சந்திரமோகன் அவற்றை குறித்து கொண்டார்.

மக்கள் புலம்பல்

வேப்பேரி, பெரம்பூர் பேரக்ஸ் சாலை , மூர்த்திங்கர் சாலை,  எம்.எஸ்.கோவில் தெரு, பவர் ஹவுஸ் சாலை, அண்ணாநகர், கொன்னூர் நெடுஞ்சாலை பூந்தமல்லி, பெருங்களத்தூர், முடிச்சூர், தாம்பரம், கீழ்கட்டளை நாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஓட்டேரி கால்வாய் அருகில், உடைந்த சிறிய அலங்கார வளைவும், ஆகாய தாமரை தூர்வாரப்பட்டதையும் பார்வையிட்டனர்.

இந்த நிலையில் பல இடங்களில், பொது மக்கள் புலம்பி தள்ளினர். பாதிப்புகள் குறித்து, தங்களிடம் கேட்காமல், அதிகாரிகளிடம் கேட்டால், முழு சேதமதிப்பு எப்படி தெரியவரும் என கேள்வி எழுப்பினர். அதுபோன்று, மத்திய குழு, எங்கெல்லாம் ஆய்வு மேற்கொண்டதோ, அந்த இடத்தை, மாநகராட்சி அதிகாரிகள் சுத்தமாக வைத்து கொண்டனர். எல்லா நேரங்களிலும், மாநகராட்சி அதிகாரிகள் , சாலையை சுத்தமாக வைத்திருக்கலாமே என பொதுமக்கள் தெரிவித்தனர்.

சென்னை புறநகர்

இதேபோன்று சென்னை புறநகரிலும் மத்திய குழுவினரான ஜி.நாகமோகன், எஸ்.சி.ஷர்மா, முகேஷ் குமார் ஆகியோர் மேற்கு தாம்பரம், தர்காஸ் சாலை, கிருஷ்ணா நகர், வரதராஜபுரம், ராயப்பா நகர் ஆகிய பகுதிகளுக்கு சென்றனர். அந்த இடங்களில் வெள்ள சேதம், நடந்து வரும் புனரமைப்பு பணிகள், நிரந்தர தீர்வுகள் உள்ளிட்ட தகவல் கள் புகைப்படங்களாக குழுவினர் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில், இதுகுறித்த தகவல்களை புகைப்படங்களாகவும், வரைபடங்களாகவும் வைக்கப்பட்டிருந்தது. வெள்ளம் ஏற்பட்ட போது குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்ட சேதம், எதிர்காலத்தில் அந்த பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய திட்ட பணிகள், அதற்கான மதிப்பீடு, தேவைப்படும் நிதி ஆகியவை குறித்து காஞ்சிபுரம் மாவட்ட வெள்ள தடுப்பு கண்காணிப்பாளர் அமுதா, மத்திய குழுவிடம் விளக்கினார்.

கோரிக்கை மனு

மேற்கு தாம்பரம், கிருஷ்ணா நகரில் வைக்கப்பட்ட சேதம் குறித்த புகைப்படங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு முடித்ததும் பெருங்களத்தூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர் குழுவினரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பிரச்சனைகள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குழுவினர் அவர்களுக்கு பதிலளித்தனர்.

கன்னியாகுமரியில்

தமிழகம் வந்த மத்திய குழுவின் ஒரு பிரிவினரான மத்திய உள்துறை இணைசெயலாளர் சஞ்சீவ் குமார் ஜிந்தால் தலைமையிலான 5 பேர் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கொல்லங்கோடு அரசு பள்ளியில் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்களையும் பார்வையிட்டனர்.

மத்திய ஆய்வுக்குழுவினர் புயல் பாதித்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறியவும் திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here