Home தலையங்கம் வி.ஏ.ஓ.க்கள் பிரச்சினை தீருமா…?

வி.ஏ.ஓ.க்கள் பிரச்சினை தீருமா…?

21
0
SHARE

தமிழ்நாட்டில் வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ், கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் இருக்கிறது. இந்த அமைப்பு, ஒரு வட்டத்தின் வட்டாட்சியர் தலைமையில் அவருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது. மேலும் இது குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நிலப் பரப்பினைக் கொண்டு இயங்குகின்ற நிர்வாக அமைப்பாக உள்ளது.

இவ்வாறு குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி இயங்குகின்ற வருவாய் கிராம நிர்வாக அமைப்பின் பொறுப்பு அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் ஆவார். இந்த வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக கிராம நிர்வாக அலுவலர் இருக்கிறார்.

கிராம கணக்குகளைப் பராமரித்தல், மற்றும் பயிர் ஆய்வு பணி பார்த்தல் சர்வே கற்களைப் பராமரிப்பது, நில வரி , கடன்கள் , அபிவிருத்தி வரி, மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூல்செய்வது.

பிறப்பு , இறப்புகளை பதிவு செய்து , சான்று வழங்குவது , அது தொடர்பான பதிவேடுகளைப் பராமரிப்பது. தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின் போது உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பிக்கொண்டிருப்பது, கொலை தற்கொலை, அசாதாரண மரணங்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல்.

காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள், தொற்று நோய்கள் குறித்து அறிக்கை அனுப்புதல். இருப்பு பாதை கண்காணிப்பிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல். அரசுக் கட்டிடங்கள் ,மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.

கிராம பணியாளர்களுடைய பணியினைக் கண்காணித்தல். சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்றங்கள் நடந்த உடனே அறிக்கை அனுப்புதல் ,சட்டம் ஒழுங்கு பேணுவதற்காக கிராம அளவில் அமைதிக் குழுவைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல். பொது இடங்களில் வருடத்திற்கு ஐம்பது பயன் தரும் மரங்களை நடுவது. ஒவ்வொரு பசலி ஆண்டின் முடிவிலும் கிராமத்தின் வருவாய் நிலவரி கேட்புத் தொகையை வசூல் செய்து வருவாய் தீர்வாயத்தில் இறுதித் தணிக்கையை முடிப்பது  உள்ளிட்டவை மிக மிக முக்கிய பணியாகும்.

அரசால்வழங்கப்படும்சான்றிதழ்கள்அனைத்தையும்இசேவைமையங்கள்மூலம்வழங்கப்பட்டுவருகின்றன. இவ்வாறு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களுக்கு வரும் விண்ணப்பங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் கள ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கென  கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளன. இதனை பராமரிக்க மாதம் ரூ.250 அரசால் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக இந்தப் பராமரிப்புத் தொகை அரசால் வழங்கப்படவில்லை. பராமரிப்பு தொகையினை வழங்கக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இறுதியாக விடுப்பு போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்களும் தங்களது லேப்டாப்களை திரும்ப ஒப்படைத்துள்ளனர். இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லேப் டாப்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் நடைபெறும் அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கும், அலைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். அரசின் திட்டங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். எவ்வளவோ செலவு செய்யும் அரசு இதற்கு செலவு செய்யக்கூடாதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மக்கள் தேவைகளை தீர்ப்பதில் ஏற்படும் முக்கிய பிரச்சனையாக கருத்தில் கொண்டு அரசு தெளிந்த முடிவை எடுக்க வேண்டும்.