Home தலையங்கம் டிரைவர்கள் மன உளைச்சலால் பயணிகளுக்கு பிரச்சனை வரலாமா…?

டிரைவர்கள் மன உளைச்சலால் பயணிகளுக்கு பிரச்சனை வரலாமா…?

26
0
SHARE

சென்னை நகரத்தில் ஏழை, நடுத்தர மக்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். நடுத்தர மக்களில் சிலர் இரு சக்கர வாகனங்களை வாங்கி ஓட்டினாலும் பெரும்பாலானோர் அரசு பேருந்துகளையே நம்பி வேலைக்கு சென்று வருகின்றனர். படிக்கும் மாணவர்கள், பள்ளி, கல்லூரிக்கும், வயதானவர்கள், நோயாளிகள் மருத்துவமனைக்கும் செல்வதற்கும் அரசு மாநகர பேருந்தை தான் நம்பி உள்ளனர். ஆனால் தற்போது குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன. இது ஏழை, எளிய மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்தால் போக்குவரத்து தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

நாம் இதற்கு முன்பு கடந்த 18ம் தேதி வெளியான தலையங்கத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துகழகத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் ஏற்படும் அவல நிலையை பார்தோம். இப்போது சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் அவல நிலையை காணப்போகிறோம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் 3,600 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 9756 டிரைவர்களும், 10,172 கண்டக்டர்களும் பணியாற்றுகின்றனர். தொழில்நுட்ப பணியாளர்கள் 2885 பேர் பணியாற்றுகிறார்கள். இந்த 3 மாவட்டங்களிலும் சேர்த்து 33 பணிமனைகள் உள்ளன.

ஒவ்வொறு மாநகர பேருந்தும் காலையில் 4.30 மணி முதல் குறிப்பிடப்படும் வழித்தடத்தில் பணியை தொடங்க வேண்டும். தூரத்தை பொறுத்து ஒரு பஸ் 8 முதல் 10 முறை அந்த வழித்தடத்தில் செல்ல வேண்டும். குறிப்பாக 8 முறையாவது  செல்ல வேண்டும் என்பது இவர்களது இலக்காக உள்ளது. ஒரு சிங்கிள் சென்று வர 50 நிமிடம் முதல் 1.30 மணி நேரம் வரை கணக்கிடப்படுகிறது. இந்த வரைமுறை 1972ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.

ஆனால் தற்போது அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசல் மற்றும் தரமற்ற பேருந்துகளை கொண்டு இந்த இலக்கை எட்டுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே இதனை மாற்றி அமைக்கும்படி சென்னை மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம், ஊழியர்கள் பலமுறை வலியுறுத்தியும், அவர்கள் இதற்கு செவி சாய்த்தது போல் தெரியவில்லை. இதற்கு மாறாக குறித்த நேரத்தில் குறித்த இலக்கு வரை பேருந்தை இயக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கட்டுப்பட மறுக்கும் டிரைவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டப்படும் கொடூரமும் நடப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் சென்னை மாநகர பேருந்து நடத்துனரும், டிரைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தற்கொலை வரை செல்கின்றனர்.

இதற்கு உதாரணமாக சென்னை அயனாவரம் பணிமனையில் பணியாற்றும் டிரைவர் ஒருவர் மேலாளர் கொடுத்த அழுத்தம் தாங்க முடியாமல் 40 அடி உயர கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை கூறலாம்.  இதுமட்டுமே நடப்பதில்லை. போக்குவரத்துக்கழக மேலாளர்கள் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட முறை பேருந்து சென்று வர அழுத்தம் கொடுப்பதால் சாலையில் அரசுப்பேருந்துகள் ரேஸ் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் உள்ளே இருக்கும் பொதுமக்கள் உயிரை கையில் பிடித்தபடி பயணிக்கின்றனர்.

சில நேரங்களில் மன அழுத்தம் காரணமாக டிரைவர்கள் வேகமாக பேருந்தை இயக்கும்போது சாலையில் செல்லும் சக வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் மேலும் அவர்களுக்கு பிரச்சனை அதிகரிக்கத்தான் செய்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் சென்னையில் எப்போதெல்லாம் போக்குவரத்து நெரிசல் நேரம் அதிகரிக்கும், எப்போது குறைவாக இருக்கும் என்பதை கணக்கிட்டு அதற்கேற்றாற்போல் அவர்கள் இலக்கை குறைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரம் தவிர திடீரென ஏற்படும் தாமதத்திற்கான காரணத்தை கண்டக்டர் உடனுக்குடன் தெரிவிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். 1972ம் ஆண்டு உள்ள அட்டவணை விதிகளை மாற்றி அமைக்க வேண்டும். தகவல் தொடர்பு பக்காவாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் மன உளைச்சல் இன்றி டிரைவரும், கண்டக்டரும் பணியாற்றுவார்கள். அரசு போக்குவரத்துக்கழகம் தெளிவான தீர்க்கமான முடிவு எடுத்து திறம்பட செயல்படுமா…?